பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-15

ல்பிட்டி, காசிச்செட்டியின் சொந்த இடம். அவர் இந்தப் பிரதேசத்தின் முக்கியமான கல்விமான், வரலாற்றாசிரியர். அவரது குடும்பம் கிறிஸ்தவத்தைத் தழுவிய செட்டி வம்சத்தவர்கள். காசிச் செட்டியின் பூர்வீகக் குடும்ப வீடு கல்பிட்டியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடத்தில்தான் அமைந்துள்ளது.
.
செட்டிகளின் செல்வாக்கு புத்தளம் நகரிலும் இருந்தது. வரலாற்றுரீதியாக வாணிபம், கடல் வாணிபம் தொடர்பில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் செட்டி வம்சத்தினர் முஸ்லிம்களுடன் நல்ல தொடர்பைக் கொண்டிருந்தனர். சண்டைகள் பூசல்கள் இன்றித் தமது வியாபார நடவடிக்கைக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதை வரலாற்றில் காணமுடிகிறது.
.
புத்தளம் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த பல பரதவர்கள், முக்குவர்கள் என்போர் போர்த்துக்கேயர் காலத்தில் கிறிஸ்தவத்தைத் தழு‌வினர். மதமாற்றத்துக்குள்ளாகாதவர்கள் தமது பழைய சமய வாழ்வைத் தொடர்ந்தனர். பரதவர்கள் கரையார்கள் முக்குவர்கள் தென்னிந்திய வம்சாவளியினர். முத்துக்குளிப்பு, உப்புச் செய்கை, மீன்பிடி , தொழில் வாய்ப்புக்கள் காரணமாக தென்னிந்தியக்கரைகளில் இருந்து இங்கு வந்தவர்கள் . கணிசமானவர்கள் முக்குவர்கள். முக்குவர்கள் அவர்களுக்கான சிறப்பான இடங்களில் வாழ்ந்தனர்.
.
12ம் நூற்றாண்டளவில் அவர்கள் இங்கு வந்திருக்கக் கூடும் . அவர்களின் மொழி கலாசாரத் தாக்கங்கள் பரவலாக இங்கு இருந்துள்ளது. கிறிஸ்தவத்தைத் தழுவு முன்னரே பரதவர்களும் முக்குவர்களும் ( கணிசமான தொகையினர் ) இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். காயல்பட்டினம், தொண்டி, இராமேஸ்வரம், தூத்துக்குடி , நாகப்பட்டணம் போன்ற பகுதிகளில் ஏற்கெனவே ( போர்த்து-முன்னர் ) இவர்கள் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியிருந்தனர்.
.
கட்டாய மதமாற்ற அச்சமும் அதனால் சச்சரவுகளும் நடந்துள்ளன. நல்லெண்ண மத மாற்றங்களும் நடந்துள்ளன. இருந்தாலும் போர்த்துக்கேயர் தென்னகத்தில் கால்வைக்கும் வரை முஸ்லிம்கள் பரதவர் தொடர்புகள் நல்ல நிலையிலேயே இருந்தன. போர்த்துக்கேயர் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தினர். பரதவர், கரையார், முக்குவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களின் ஆதரவை வென்றனர்.
.
மீன்பிடிக்க அதிகவசதி, பல்வேறு உதவிகள், என்பவற்றோடு இஸ்லாத்தை கட்டாயப்படுத்துபவர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாகவும் உத்தரவாதமளித்தார்கள். இதற்குப் பகரமாக இரண்டு விடயத்தை எதிர்
பார்த்தார்கள் :
1 – முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு நிபந்தனை அற்ற ஆதரவு தர வேண்டும்.
2 – கிறிஸ்தவ சமயத்தை ஏற்க வேண்டும்.
.
இஸ்லாம், கிறிஸ்தவ மதம் மாற்றப் பிரச்சினைகள் அதிகம் இருந்த காலத்தில் பலர் அவற்றிலிருந்து பாதுகாப்புத்தேடி இலங்கை வந்துள்ளனர். இதுவன்றி இலங்கையில் குறிப்பாக கல்பிட்டி – புத்தளம் பிராந்தியத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை நிறுவுவதற்கும் கிறிஸ்தவ குடியேற்றத்தை வளர்ப்பதற்கும் மத நிறுவனங்கள் தென்னகக் கிறிஸ்தவக் குடியேற்றக்காரருக்கு ஊக்கமளித்துள்ளன.
.
கணிசமான தமிழ் கிறிஸ்தவர்களின் தொகை இங்கு அதிகரிக்க இது காரணமாகியது கல்பிட்டியிலும் கல்பிட்டிப் பிராந்தியத்திலும் தமிழ் கிறிஸ்தவர்கள் துண்டு துண்டாகப் பல இடங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று பல கிராமங்கள் , சமயக் கட்டமைப்புக்கள் உள்ளன. இப்போது சிங்களம் செல்வாக்குப் பெற்றிருந்தாலும் ஒரு காலத்தில் ஆராதனைகள் கலப்பற்ற தமிழில்தான் நடந்தன. இன்றும் அந்தத் தொடர்ச்சி இருப்பதாகவே அறிகிறேன்.
.
WAK