பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-16
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் இருக்கும் போது சைமன் காசிச் செட்டி பற்றி சிறிது அறிய முடிந்தது. அப்போது தமிழ் இலக்கிய வரலாறு படிப்பித்த பேராசிரியர் பூலோக சிங்கம் அவர்கள் காசிச்செட்டியின் தமிழ் புளூட்டர்க் இலக்கிய வரலாற்று நூலை அறிமுகப்படுத்தியது ஞாபகத்தில் உள்ளது. ” கல்பிட்டி சீமான் காசிச்செட்டி” என்ற அவரது வார்த்தைப் பிரயோகமும் நினைவில் உள்ளது.
.
வரலாறு, இலக்கியவரலாறு, மானிடவியல், சாதி முறை, முக்குவர், முஸ்லிம் திருமண முறைகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்வோர் காசிச் செட்டியைக் கலந்து பேசாதிருக்க முடியாது. காசிச் செட்டியின் மிக முக்கியமான நூல் ‘Ceylon Gazetteer ‘( 1834 ) . அத்தோடு The Tamil Plutarch, The casts and customs of the Tamils நூல்களையும் எழுதினார். பத்துக்கும் அதிகமான நூல்கள் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
.
கல்பிட்டியின் முதல் ஆசிரியராகவும் பாடசாலை தாபிப்பதில் அக்கறை காட்டிய முதல் கல்பிட்டி வாசியாகவும் காசிச் செட்டியைக் கருதலாம். படித்த முன்னோடி என்றாலும் காசிச் செட்டிதான் நினைவுக்கு வருகிறார். கல்பிட்டியில் அவர் படித்தது தமிழ் பாடசாலையில் . ஒரு தமிழ்ப் பாடசாலையை அவர் ( தமது செலவில் ) நடத்தி உள்ளார். அங்கு ஒரு ஆங்கில அதிகாரிக்குத் தமிழ் படிப்பித்துள்ளார். அவர் இவருக்கு ஆங்கிலம் படிப்பித்துள்ளார். அந்தப் பாடசாலையில் அவர் ஆசிரியராகவும் இருந்திருக்க வேண்டும்.
.
(ஒரு தமிழ் சஞ்சிகையும் நடத்தி உள்ளார்). 1823 அளவில் இவை நடந்துள்ளன. கல்பிட்டியின் கல்வியின் ஆரம்பப் புள்ளியாக இது அமைகிறது. இதில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்று தெரியவில்லை. அந்தப் பாடசாலை கிறிஸ்தவப் பின்னணியில் இருந்திருந்தால் முஸ்லிம் பெற்றோர் பிள்ளைகளை அனுப்பத் தயங்கி இருப்பார்கள். ஆனால் அது பரிஷ், கோயில் பற்றுப் பாடசாலையா என்பதும் தெளிவில்லை . 2 மார்ச் 1807ல் காசிச் செட்டி, கல்பிட்டியில் பிறந்தார்.
.
தந்தை கெப்ரியல் காசிச் செட்டி. தாயார் மேரி டி ரொசாய்ரொ. கெப்ரியல் தனது தந்தை இறந்த பின்னர்
கல்பிட்டியில் முதலியாராக இருந்த மாமா முறையானவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இது1780 – 85 காலப் பகுதி. இவர்கள் செட்டி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தின்ன வேலியிலிருந்து அல்லது மதுரையில் இருந்து போர்த்துக்கேயர் காலத்திலும் டச் காலத்திலும் வந்தவர்கள். இவர்கள் தமிழ் நாட்டின் முன்னணித் தமிழ் வர்த்தகர்கள். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் காலியிலும் வாழ்ந்தனர். மிக இலகுவாக கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக் கொண்ட இவர்கள் முக்கிய அரச பதவிகளையும் பெற்றுச் செல்வாக்குடன் இருந்தனர்.
.
கெப்ரியல் காசிச் செட்டியின் தந்தை ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்து மதத்தை ஏற்றிருந்தார். கெப்ரியல் கல்பிட்டியில்
வாழ்ந்த போது சைமன் டி ரொஸாய்ரொவின் மகள் மேரி ரொஸாய்ரோவை மணந்தார். சைமன் டி ரொஸாய்ரோ டச் கிழக்கிந்திய கம்பனியில் பல பதவிகளை வகித்தவர். கல்பிட்டியில் செல்வாக்குள்ள குடும்பம் அது. கெப்ரியலுக்கு டச் மொழி தெரியும் ஆங்கிலமும் தெரியும். அரசாங்க மொழி பெயர்ப்பாளராகவும் கல்பிட்டி முதலியாராகவும் கெப்ரியல் சேவையாற்றினார்.
.
டச் மொழி, போர்த்துக்கீசிய மொழி, லத்தீன் ஹீப்ரு மொழித் தொடர்புகள் சைமன் காசிச் செட்டிக்கு மிக இலகுவாகக்
கிடைத்தது. காசிச் செட்டியின் காலத்தில் ஆங்கிலேராட்சி ஆரம்பமாகிவிட்டது. காசிச் செட்டி கல்பிட்டியில் இருந்த சில வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கொழும்பில் ஆங்கிலிக்கனாக மதம் மாறினார். ஆங்கில ஆட்சியாளரோடு நெருங்கிச் செயல்பட்டார்.
.
1860ல் மரணிக்கும் போது அவர் கத்தோலிக்கர். 1824 ல் கல்பிட்டி நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர். 1826 ல் புத்தளம் உதவி தாசில்தார். 1837 ல் புத்தளம் முதலியார் , புரொக்டர், மணியகாரன் ( நிர்வாகப் பிரதான ). 1838 ல் சட்டவாக்க சபை உறுப்பினர் ஆறுமுகம் பிள்ளை குமாரசுவாமியின் மரணத்தால் காலியான இடத்துக்கு இலங்கைத் தமிழ் பிரதிநிதியாக காசிச் செட்டி நியமிக்கப்பட்டார். சட்டவாக்க சபையில் (legislative Council) உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவராக 7 வருடங்களாகச் சேவையாற்றி இராஜிநாமாச் செய்தார்.
.
WAK
