பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-17
கல்பிட்டி வரலாற்று விபரங்களை, புத்தளம் குதிரை மலை விபரங்களை எழுதி இப்பிரதேசத்தில் அரபுகள் வருகை பற்றி வரலாற்றில் பேசியவர்களில் சைமன் காசிச் செட்டியும் ஒருவர். 1830 களில் இவற்றை அவர் எழுதினார். உள்ளூர் வரலாறாக இதைப்பார்த்தால் இவற்றை எழுதிய முதல் எழுத்தாளர் அவர்தான். சைமன் காசிச்செட்டிக்கு டச் மொழி தெரியும். அவரது தந்தை டச் மொழியில் ஒல்லாந்த அரசில் வேலை பார்த்தவர். போர்த்துக்கேய பின்னணியும் அவரது குடும்பத்துக்கு இருந்தது.
.
அதனால் வரலாற்றுச் செய்திகளை அறிவதற்கும் அவருக்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் இந்தப் பிரதேச வரலாற்றை அவர் விபரமாக எழுதவில்லை . ஒரு சுருக்க விபரத் தொகுப்புக்குரிய வரலாற்றுச் செய்திகளை மட்டும்தான் அவரால் எழுத முடிந்தது. அதனால் பிற்காலத்தில் எழுந்த கேள்விகளுக்கு அவரது கெஸட்டியர் போதுமானதாக இருக்கவில்லை.
.
பள்ளிவாசல் துறை தர்ஹாவுக்கு சைமன் காசிச் செட்டியின் மூதாதையர் ஒருவர் நன்கொடைகள் வழங்கினார் என்று முன்னர் பார்த்தோம். ஆனால் அது யார் என்பது தெரியவில்லை. அது அவரது தந்தை கெப்ரியல் காசிச்செட்டியாக அல்லது இவரது உறவினராக இருக்கலாம். புத்தளம் நீதிமன்றில் விசாரணை முடிவில் விதிக்கப்பட இருந்த ஒரு பெரிய
தண்டனையில் இருந்து தப்புவதே தர்ஹாவில் கேட்ட பிரார்த்தனையின் நோக்கம். தர்ஹாவைக் கடந்து புத்தளம் போகும் வழியில்தான் இப்பிரார்த்தனை கேட்கப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள தகவல்கள் அப்படித்தான் கூறுகின்றன.
.
அப்போது கெப்ரியல் காசிச் செட்டி புத்தளம் கோர்ட்டில் முதலியாராக வேலை செய்து கொண்டிருந்தார். இது சரியாக இருந்தால் இது நடந்த காலம் 1790 களாக இருக்கலாம் . காசி செட்டியின் வரலாறு கல்பிட்டியில் அன்று காணப்பட்ட சமூக சமய சூழலை அறிவதற்கும் உதவக்கூடும். கல்பிட்டி முதல் கட்டக்காடுவரை மணத்தீவில் இருந்து மாம்புரிவரை போர்த்துக்கேயர்( ஒல்லாந்தரின்) செல்வாக்கில் பல கிறிஸ்தவக் கிராமங்கள் தோற்றம் பெற்றன. இந்த மாற்றங்கள் தமிழ் கிராமங்களில் நடந்துள்ளன.
.
தென்னிந்தியத் தொடர்பில் சில கிறிஸ்தவக் கிராமங்கள் வளர்ச்சி பெற்றதாகவும் தெரிகிறது. இவற்றிற்கு மத்தியில் அல்லது கிறிஸ்தவ மதப்பரப்புகை உச்ச நிலையில் இருந்த காலத்தில் முஸ்லிம் கிராமங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொண்டன. போர்த்துக்கேயரின் அடக்கு முறைகளினால் பாதிக்கப்பட்ட கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண முஸ்லிம்களில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பிற்காக புத்தளம் பகுதிக்கு வந்துள்ளனர். இது 16ம், 17ம் நூற்றாண்டுக்கால நிகழ்வுகள்.
.
WAK
