பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-18

ல்பிட்டிக்கு வரலாற்று முகவரி தந்தது சைமன் காசிச்செட்டி. புத்தளம் நகரை உலகிற்கே கொண்டு சென்றவர் இப்னு பத்தூதா. வரலாற்றுச் சாட்சியங்கள் பிரயாண வரலாற்றிலும் உள்ளன.’ பத்தால் ‘ பத்தூதா இலங்கையில் இறங்கிய இடம் . அங்கு பாரசீக மொழி அறிந்த, ஆரியச்சக்கரவர்த்திப் பட்டம் சூடிய மன்னனைச் சந்திக்கிறார். கிப் என்பார் உட்பட பத்தூதாவின்ரெஹ்லாவை மொழிபெயர்த்த சில பிரதான ‘ரெஹ்லா ‘மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும் இது புத்தளம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
.
மாலைதீவில் இருந்து தென்னகம் செல்லும் வழியில் கடற்காற்றின் திசை மாற்றத்தால் இப்னு பத்தூதா வந்திறங்கியது பத்தாலா வில். பத்தலங்குண்டு அல்லது வத்தளம் குண்டு கல்பிட்டிக்கு வட புறத்தில் கடலில் உள்ளதீவு (புத்தளம் நகரில் மணற்குன்று /மணற் குண்டு போல ) . புத்தளம் என்பது உப்புத்தளம் புதுத்தளமாக மருவியதால் வந்ததென்பர் . அதை விட பத்தாள புத்தளமாக மருவியிருக்குமா? என்று நான் யோசிக்கிறேன். பத்தாள என்பது என்ன? இப்போதைக்கு அர்த்தம் தெரியவில்லை.
.
ருகுணைக்கு நெருக்கமாக வந்த போது ( கரைக்குக் கிட்டிய கடல் வழியாகத்தான் அன்று கப்பல்கள் பிரயாணம் செய்துள்ளன. ) பாவா ஆதம் மலை தூரத்தே மேகப்புகையின் மங்கலில் காட்சியளித்ததை ரெஹ்லா கூறுகிறது. காற்றின் வேகத்தால் பாதை மாறிய கப்பல் அடுத்துக் கரை தேடக் கூடிய இடம் புத்ளம்தான் . பரந்த பொருளில் அப்படித்தான் இது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
.
புத்தளம் நகரை வந்தடைவதற்கு முன்னர் வெள்ளைக்காரன் குடாவுக்கு மேல் கீரிமுந்தலில் அமைந்திருந்த துறை முகத்தில் இறங்கி சிறு படகு மூலம் புத்தளம் கடலேரிக்குள் பிரவேசித்திருக்க வேண்டும். அதன் வழி பயணித்து புத்தளம் சிறு துறைமுகத்தை அடையலாம். அதைத்தான் உள் துறைமுகம் என்று கூறுகிறோம். புத்தளம் நகரில் இருந்து வணிகப் பாதைகள் பல திசைகளில் சென்றன. அப்போது அது ஒரு சிறிய பட்டினம்.
.
அன்று ஒரு அரபி, ஒரு வெளி நாட்டு முஸ்லிம் இலங்கையி்ல் பார்க்கவிரும்பிய இடம் பாவா ஆதம் மலை. இப்னு பத்தூதாவின் விருப்பமும் அதுதான் பத்தூதாவின் பாவாத மலைப் பயணப் பாதை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது . புத்தளம் நகரில் அவர் இறங்கிய அல்லது பயணத்தை ஆரம்பித்த இடம் புத்தளம் நகரசபையால் ‘இப்னு பத்தூதா வீதி ‘ எனஅடையாளமிடப்பட்டுள்ளது.
.
இப்னு பத்தூதா பெயரில் ஒரு கலாசார மண்டபமும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்னு பத்தூதாவின் இலங்கைப் பயணத்தில் புத்தளம் நகருக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ஆனால் அது பற்றிய விபரங்கள் எவையும் புத்தளத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. பத்தூதா இலங்கையில் பயணித்த பாதையில் பயணம் மேற் கொண்ட ஒரு பெண்மணி புத்தளத்தில் தேவையான தகவல்களைப் பெறுவதில் தனக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றத்தை அண்மையில் தெரிவித்துள்ளார். புத்தளம் நகரசபை அல்லது பெரியபள்ளிவாசல் வரலாற்றுத்தகவல் விபரம் ஒன்றை
உரியவகையில் தயாரிப்பது அவசியம்.
.
WAK