பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-01

செய்கு அலாவுதீன் புலவர், பொருள் செல்வதற்காக முசல்பிட்டிக்கு வந்திருந்ததை வாப்பா மூலம் தெரிந்து கொண்டேன். இது 1945 அளவில் நடந்திருக்க வேண்டும். பொருள் சொல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட காப்பியம் சீறாப்புராணம். வாப்பாவும் கறுத்தப்பா சேகு முகம்மதுவும் இணைந்து சீறா வாசித்துள்ளனர்.
வாசிப்பைக் கூர்ந்து கேட்டுவிட்டு பொருள் சொல்லத் தொடங்குவார் புலவர். பொருள் சொல்வது ஒரு அலங்கார இலக்கிய உரை. ஒருவிருத்தம், ஒரு வெண்பா விளக்கம் சொல்லி முடிய சில வேளை ஒரு மணிநேரம் போதாமல் இருக்கும். கறுத்தப்பா நிறத்தில் கறுப்பு. நல்ல இலக்கிய அறிவுள்ளவர். நாட்டு வைத்தியம் தெரிந்தவர்.
வாண வேடிக்கையில் ( fire works ) மன்னர். நான் அவரை அப்பா என்று அழைப்பேன். அவர் வாப்பாவின் தோழர். வாப்பாவை விட 20 வயது மூத்தவர். சீறா போன்ற இலக்கிய நூல்கள், நன்னூல், நிகண்டு, தமிழ் அகராதிகள், வைத்திய வாகடங்கள், பல அவரது அறையில் இறைந்து கிடக்கும்.
ஒரு தமிழ் அகராதியை பெயர் ஞாபகமில்லை. அவரிடமிருந்து இரவல் பெற்று சில நாட்கள் படித்திருக்கிறேன் புலவனாக. ஆசாரக்கோவை இயற்றிய புலவர் திகழியில் வாழ்ந்தார். கல்பிட்டிக்கு அடுத்ததாக செல்வந்த மரைக்கார்கள் அதிகம் வாழ்ந்த இடம் திகழி. மரைக்கார்களின் உதவியில் அல்லது கணக்கெழுதி உழைப்பவராக வாழ்ந்து அங்கேயே மரணித்தார்.
புலவரின் கபுறடி பாடசாலை வளவிற்குள் இருந்ததாக ஞாபகம் ஒரு முறை அந்த இடத்திற்குப் போயிருக்கிறேன். அங்கு ஒரு பழைமையான பள்ளிவாசல் இருந்தது. அதன் வளவுக்குள் ஒரு பெருக்க மரம் நின்றதாக ஊர்மக்கள் மூலம் அறிந்து கொண்டேன். ஒரு புயல் காற்றின் போது பாதிக்கப்பட்டு அந்தமரம் அழிந்துள்ளது. அதே மாதிரிபெருக்க மரம் ஒன்று புத்தளம் நகரில் பள்ளிக்கருகில் நின்றது பற்றி எமர்சன் டெனன்டும் காசிச் செட்டியும் எழுதி உள்ளனர்.
கரைத்தீவுக்கு வடக்கே சிறிது தூரம் கடல் வழியாகச் சென்றால் இப்போதும் ஒரு பெருக்க மரம் நிற்பதைக் காணலாம். நானும் நண்பர் ZA ஸன்ஹீரும் இதை அறிந்துவைத்துள்ளோம். மன்னாரில் பெருக்க ( பொஆப் ட்ரீ )மரத் தோட்டத்தையே பார்க்கலாம் . பார்த்திருக்கிறேன். டெனன்ட் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி பெருக்கமரங்கள் அரபியரால் அறிமுகப்படுத்தப்பட்டவை.
இதைப் பாப்பாரப்புளி என்று காசிச் செட்டியின் குறிப்புக் கூறுகின்றது. மஜீதுப் புலவர் கல்பிட்டிக்கு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். கல்பிட்டிச் செல்வந்தர்களில் ஒருவரான உமறு கத்தாபு மரைக்காருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது . சுமார் 70 பக்கங்கள் கொண்ட ஆசாரக்கோவை நூல் அவரது பண உதவியினால்தான் அச்சிடப்பட்டு வெளிவந்தது.
ஆசாரக் கோவையின் ஒவ்வொரு செய்யுள் முடிவு வரிகளும் உமறு கத்தாபு மாமரைக்க சகாயனே என்றுதான் முடிவடைகிறது. புரவலரைப் புலவர்கள்கொண்டாடிய அழகைப் பார்க்க வேண்டுமானால் ஆசாரக்கோவையைப் பாருங்கள். பேராசிரியர் ம மு உவைசின் முயற்சியினால் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினர் இதை மீளப் பதிப்பித்தனர்.
நான் அறிந்தவரை கல்பிட்டியின் பெயர் காணப்படும் ஒரே ஒரு இலக்கிய நூல் இதுதான். மஜீத் புலவரைப் போல் சில தமிழ் நாட்டுப் புலவர்கள் இங்கு வந்து தங்கிச் சென்றுள்ளதாகக் கருதலாம். செய்கு அலாவுதீன் புலவரும் தமிழ் நாட்டுப் புலவர்களுடன் போட்டிப் பாடல்கள் பாடி இருப்பதைப்பற்றித் தமது பாடல்களில் கூறுகிறார்.
WAK