பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-19

குதிரைமலை பற்றித் தகவல்கள் ரிஹ்லாவில் இல்லாததால் அதற்கு முன்னரே வரக்கூடிய புத்தளம் பகுதியில் இப்னு பத்தூதா இறங்கியதாகக் கருதலாம். பத்தூதா 1344ல் இலங்கை வந்தார். முதல் காலடி வைத்தது வட மேல் மாகாணம்
புத்தளத்தில். அவரது ரிஹ்லாவில் மாலைதீவும் இலங்கையும் அடுத்தடுத்துப் பேசப்பட்டுள்ளன. இலங்கையை அரபு
உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களில் பத்தூதா முக்கியமானவர்.
.
மார்க்கப் போலோவிற்கு 60 ஆண்டுகள் முன்னர் , அவரைவிட அதிக தூரம் , அவரைவிட அதிக காலம் பத்தூதா விற்கு இருந்தும் மார்கப் போலோ அளவு அவர் புகழ் பெறவில்லை. 19ம் நூற்றாண்டிலேயே பத்தூதாவை உலகம் அறிந்து கொள்கிறது. பிரெஞ்சு ,ஜெர்மன் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்த பின்னரே ரிஹ்லா உலக வாசகர்களைச் சென்றடைந்தது.
.
750 வருடங்களின் பின்னர் 1980 – 82 ல் பத்தூதாவை நினைவு கூர்வதைப் போல் புத்தளத்தில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் அதன் பணித் திட்டங்களில் ஒன்றாக புத்தளம் பிராந்திய வரலாற்றைத் தேடும் முயற்சியை ஆரம்பித்தது. அதில் நாங்கள் 7,8 பேர் தீவிர பங்காளர்களாக இருந்தோம். அக்காலத்தில் இப்னு பத்தூதாவையும் இணைத்ததாக புத்தளத்தின் தொன்மை முஸ்லிம் வரலாற்றைத் தேடும் முயற்சி ஆரம்பமாகியது.
.
புத்தளம் நகர மூத்த தலைமுறையினரை அழைத்து ஒரு சிறப்புக் கலந்துரையாடல் அமர்வை பாத்திமா மகளிர் கல்லூரியில் ஒழுங்கு செய்தோம். 1980 ல் 65 – 80 வயதுள்ள வரலாறு அறிந்தவர்கள்,அல்லது தகவல் தரக்கூடியவர்கள் என ஒரு 20 பேர்கள் ,சங்க முக்கியஸ்தர்கள் ஒரு 10 பேர்கள். முக்கியமாக அனஸ்,ஸலீம், இப்திக்கார், ஸன்ஹீர், நிஸ்தார், காமில் எங்கள் தரப்பில் .
.
ஒய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள்,உலமாக்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள். இவர்கள் எமது அழைப்பை ஏற்று வந்தவர்கள் . பண்டைய புத்தளத்தில் அரபு முஸ்லிம் தொடர்புகளை அறிவதற்கான கலந்துரையாடல் அது. இப்னு பத்தூதா புத்தளம் பற்றிக் கூறி இருந்த இரண்டு விடயங்கள் அதிகம் உரையாடப்பட்டது. (1 ) பலகையினாலான
கட்டிடங்கள் (2 ) கறுவா . இவைதான் அந்த இரண்டு விடயங்கள் சிலாபத்தில் இருந்து புத்தளம் நகர் வரையுள்ள காடுகளில் கறுவாவும் சேர்ந்து வளர்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
.
இக்காடுகளில் கறுவாவும் இருந்தது பற்றி பின்னர் எனது வாசிப்பின் மூலமும் அறிந்து கொண்டேன். பழைய காலத்தில் கடற்கரையோரமாகப் பலகைக்கட்டிடங்கள் இருந்தன என்பதை ஓரளவு அவர்களால் அனுமானிக்க முடிந்தது. அந்த அமர்வுகளில் பேசப்பட்டவை குறிப்பெடுக்கப்பட்டபோதும் இன்று எங்கள் யாரிடமும் அது இல்லை .
அப்போது எங்கள் காசிம் லேன் வீட்டில் இரவில் அடிக்கடி கூடி இந்த விடயங்களை விவாதிப்போம். மார்க்கம், ஷரியா விவாதங்களும் நடக்கும் . நளீமியா மாணவர்களான சலாகுதீன், அனஸ் முகைதீன், யாக்கூப் ஆகியோரும் தமது ஷரியா அறிவைப் பகிர்ந்து கொள்வார்கள்.
.
யூசுப் அல்- கர்ளாவி , அல்- கஸ்ஸாலி ஆகிய மார்க்க அறிஞர்களின் புதிய சட்டக் கருத்துக்கள் அதிகம் உரையாடப்பட்டன. சமூகத்தில் காணக்கிடைக்காத போதும் முன்னேற்றமான சில கருத்துக்கள் இருப்பதை அறிய முடிந்தது. புத்தளம் என்பது இப்னு பத்தூதாவின் ரிஹ்லாவின் அரபு மூலத்தில் எவ்வாறுள்ளது என்று அறிவதை அரபு மொழி மாணவர்களிடம் ஒப்படைத்தோம்.
.
சில வாரங்களில் அஷ்ஷெய்க் அனஸ் முகைதீன் ‘ பத்தால் ‘ என்பதை அரபு மூலத்தில் இருந்தவாறு எழுதித்தந்தார். மூல நூலில் இருந்த விபரங்கள் சிலவும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆங்கில ரிஹ்லா தகவலுடன் அதை ஒப்பிட்டு எனது கருத்துக்களை உறுதி செய்து கொண்டேன். புத்தளம் – சிலாபம் – குருநாகல் அங்கிருந்து கம்பளை ஊடாக பாவா ஆதம் மலை. பின்னர் தென்மாகாணம்( காலி தெவி நுவர)கொழும்பு. சிலாபம் வந்து அங்கிருந்து ஹட்டின் பொல, பண்டுவஸ்நுவர, பண்டாரக் கொஸ்வத்தை ஊடாகக் குருநாகல் . இதுதான் பத்தூதாவின் பயணப் பாதை.
.
WAK