பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-20

ப்னு பத்தூதா 40 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது பயணங்களில் மேற்கு நாடுகள் அல்லாத, குறிப்பாக முஸ்லிம் நாடுகள் அதிகம். இயற்கை, தாவரங்கள் ,இலை கொடிகள், வரலாறு, மானிடவியல் , என்பவற்றோடு பண்பாடு பற்றிய அவரது பதிவுகள் முக்கியமாவை. இலங்கையில் முஸ்லிம்களின பண்பாடு பற்றிய பல தகவல்களை அவர் தந்துள்ளார்.
.
பாவாதமலைப் பயணமும் அதனொடு சம்பந்தப்பட்ட தகவல்களும் பல விடயங்களை நமக்குக் கூறுகின்றன. இப்னு பத்தூதா இலங்கை வந்த 14 ம் நூற்றாண்டு புத்தளம் வரலாற்றிலும் ( இலங்கை வரலாற்றிலும்) முஸ்லிம்களின் வரலாறு பற்றிய நோக்கில் முக்கியமானது. பாண்டிய மன்னர்கள் வட பாகத்தில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்ல அவர்களது முஸ்லிம் தொடர்புகள் புத்தளம் மற்றும் குருணாகல் ராச்சியங்களில் சம்பந்தப்பட்டிருந்த காலம் அது.
.
கீஸ் (ஈரான்)முஸ்லிம் வணிகரோடு பாண்டிய மன்னர் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர். மாறவர்மன் சுந்தர பாண்டியனின் நண்பராகவும் தளபதியாகவும் இருந்த முஸ்லிம் ஒருவர் (தக்கியுத்தீன் அப்துர் ரஹ்மான்) புத்தளம் வரை சிங்கள மன்னருக்கு எதிரான படை எடுப்புக்களில் பங்கேற்றிருந்தார். புத்தளம் கடற்பரப்பின் வழியாக பத்தூதா சந்தித்த ஆரியச்சக்கரவர்த்தி பாரஸீக மொழி தெரிந்தவர். பாரசீக மொழியில்தான் நான் அவருடன் உரையாடினேன் என்று பத்தூதா கூறுகிறார்.
.
பாவாதமலைப் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவன் செய்து தருகிறான். பாண்டிய நாட்டுத் தளபதி தக்கியுத்தீன் அப்துர் ரஹ்மான் நியமித்த அவரது உறவினராக அல்லது அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவராக அத்தளபதி இருந்திருக்க இருக்கவேண்டும். புத்தளம இருந்து சிலாபத்தை அடைவதற்குள் இரு பாரசீகர்களைக் கண்டதாகவும் பத்தூதா கூறுகிறார். 17 வருடங்களுக்கு முன்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடந்த தென்கிழக்காசிய நாடுகளில் பாரசீகச் செல்வாக்கு என்ற கருத்தரங்கில் பத்தூதாவையும் புத்தளத்தையும் இணைத்து பாரஸீக மொழி தெரிந்த பாண்டிய தளபதியைப் பற்றிக் கட்டுரை படித்தேன்.
.
அங்கு கட்டுரை படிக்க வந்திருந்த முன்னாள் தொல்லியல் திணைக்களத் தலைவர் நொயல் பெர்னேன்டோ தனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்களில் விடைகள் கிடைத்தன என்றும் பொருந்தும் வகையான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் சபையில் பாராட்டிப் பேசினார். இலங்கையில் ஐரோப்பியர் வருகைக்கு முந்திய முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் போது குருணாகல் , புத்தளம் வரலாறுகள் நமக்குப் பெருந்துணையாக நிற்கின்றன.
.
அவற்றில் வரலாற்று வெளிச்சத்தைப் பாய்ச்சும் சாதகமான ஆயுதமாக ரிஹ்லா பயணக்குறிப்புக்கள் உள்ளன. மிகக் குறுகிய காலத்தையே பத்தூதா இலங்கையில் செலவிட்டார். இது துரதிர்ஷ்டவசமானது. மாலை தீவில் இரண்டு வருடங்கள் செலவிட்டார் . ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அவர் தங்கி நின்ற நாடுகளும் உண்டு. இலங்கையில் ஆரியச்சக்கரவர்த்தியின் ஆதரவில் அவர் புத்தளத்தில், அல்லது முஸ்லிம் வியாபாரிகளின் ஆதரவில் காலியில் அல்லது அபிசீனியர்களின் ஆதரவில் கொழும்பில் மேலும் சில காலம் தங்கி நிற்க சில வாய்ப்புக்கள் இருந்தன.
.
புத்தளம் – சிலாபம் , சிலாபம் – குருணாகல் அவரது ஆரம்பப் பிரதான பாதைகள். ரிஹ்லா விவரங்களுடன் 2010 -14 களில் இப்பாதைகளில் பயணம் செய்தேன். சிலாபம், பண்டுவஸ் நுவர, பண்டார கொஸ்வத்தை ஆகிய இடங்களில் சில பள்ளிவாசல் நிர்வாகிகளையும் சில ஆசிரியர்களையும் சந்தித்து இப்னு பத்தூதா பயணப்பாதை தொடர்பில் உரையாடினேன்.
.
WAK