பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-21
புத்தளம் சிறிய பட்டினம் என்று ரிஹ்லா கூறுகிறது. ரிஹ்லாவில் பத்துலு ஓயாவரை ஒரு வர்ணனை உள்ளது. பின்னர் சிலாபம் நகரம் . பாவாஆதம்மலையைத் தரிசிக்க வேண்டும் என்ற தனது அவாவை மன்னருக்கு (தளபதிக்கு) பத்தூதா தெரிவிக்கின்றார். யோகிகள் சிலர் , பல்லக்கு , நீர் போன்றவற்றைத் தூக்கிச் செல்ல 15 உதவியாளர்கள். யோகிகள் யாத்திரைப் பாதையை அறிந்தவர்கள் . முதலில் சிலாபம் செல்லவேண்டும். சிலாபம் செல்ல இரண்டு நாள் ஆகி இருக்கலாம் .
.
சிலாபம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரைச் சந்தித்துப் பேசியபோது பத்தூதா பழையபள்ளிவாசல் இருந்த சிறிய இடத்தில் தொழுததாகவும் அன்றிரவு அங்கு தங்கிச் சென்றதாகவும் குறிப்பிட்டார். இதுபற்றி விசாரணைகள் மேற்கொண்டு அதற்கான ஆதாரங்களைத் தேடுமாறு அவரிடம் கூறினேன். சிலாபம்- புத்தளம் சுமார் 60 கி. மீ. தூரம். ஆறுகள், நீரோடைகள், சிறு நீர் நிலைகள் சதுப்பு நிலங்கள் ,காடுகள் கொண்ட பிரதேசம் அது. ரிஹ்லாவிலும் இந்த வர்ணனை உண்டு. இப்போதும் பெரு மழையென்றால் நீரில் மூழ்கும் பகுதி அது.
.
12 ம் நூற்றாண்டில் இருந்து சிலாபம் முத்துக்குளிப்பு நடைபெற்ற பிரதேசம். காயல்பட்டணத்தார்கள் முத்து வணிகத்துக்காகவும் முத்துக்குளிப்பில் பங்கேற்பதற்காகவும் சிலாபம் கரைக்கு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது 14 ம் நூற்றாண்டிற்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. சிலாபம், காயல்பட்டினம் தொடர்புகளை அதிகம் கொண்ட நகரம். பல தடவைகள் சிலாபம் சென்று நடத்திய உரையாடல்கள் மூலம் இதை அறிந்து கொண்டேன். சிலாபம் பெரிய பள்ளிவளவிற்குள் நடப்பட்டிருந்த பல பழைய நடுகற்களையும் பார்த்தேன்.
.
200 வருடங்களுக்கு முற்பட்ட மீசான் கற்களும் அங்கிருந்தன. ஏதோ சில காரணங்களுக்காக பல மீசான்கள் அங்கிருந்து அகற்றப் பட்டுள்ளன. பெரிய பள்ளிவாசல் வரலாற்றைத் தெளிவாக ஆராய்ந்து மீசான்களிலும் கவனம் செலுத்தினால் பல வரலாற்று உண்மைகளை அறிய முடியும். அந்தக் காலத்தில் புதளத்திற்கு அடுத்த மற்றொரு சிறிய பட்டினம் சிலாபம்தான். 12ம் நூற்றாண்டிலிருந்து முத்துக் குளிப்பு மீன்பிடி முதலிய கடல் தொழில்களால் வளர்ச்சியடைந்த நகரம் . இன்னொரு விதத்தில் சிலாபம் கடற்கரைப் பட்டினம். இதை பந்தர் சிலாவ் என்று இப்னு பத்தூதா குறிப்பிடுகிறார்.
.
அதனால் அவர் பிரவேசித்த காலத்திலேயே அது பட்டினம் தான். இந்தப் பட்டினத்தில் கிறிஸ்தவர் தொடர்பு பெரும்பாலும் 16ம் அல்லது 17ம் நூற்றாண்டில் ஆரம்பித்திருக்க வேண்டும். அவர்களில் பாதிப்பேர் இந்தியக்கரைகளில் இருந்து வந்தவர்கள் . உள்ளூர் தமிழ் மக்களில் பலர் போர்த்துக்கேயரின் செல்வாக்கால் மதமாற்றத்துக்குட்பட்ட வரலாறும் உண்டு. காயல்பட்டின வாசிகளின் குடியேற்றம் 19ம் நூற்றாண்டின் இறுதிவரை நடந்துள்ளது.
.
புத்தளத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சவறணை, மாதம்பை, தும்மலசூரிய எத்துங்கஹக் கொட்டுவ பகுதிகளையும் உள்ளடக்கிப் பார்த்தால் பெரிய தமிழ் பேசும் முஸ்களின் தொகுதியை இங்கு காண முடியும். சிலாபம் இந்து சமுத்திரக்கரையோரத்தில் அம்பகஹமுல்ல? என்ற இடத்தில் உள்ள நாற்பது முழ கபுறடியும் அங்கு வருடந்தோறும் நடக்கும் ( மீன் ) கந்தூரியும் நமக்குச் சொல்ல அதிகம் கதைகளை வைத்துள்ளன.
.
WAK
