பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-22

சிலாபம் கடற்கரையில் அமைந்துள்ள 40 முழ கபுறடி ( அடக்க இடம் ) பின்னர் கவனிப்பாரற்றதாக்கப்பட்டாலும் அதற்கென ஒரு வரலாறிருந்துள்ளது. ஒரு அவுலியாவின் பேரில் வருடந்தோறும் கந்தூரி நடைபெற்றுள்ளது. ஊர் மக்கள் எல்லோரும் கலந்து கொண்ணடனர். நீர் கொழும்பு, கம்மல்துறை, கொழும்பில் இருந்தும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். பாத்திஹாக்கள் ஓதல்கள் நடை பெறும் . முடிவில் கந்தூரி ( சோறாக்கி வழங்குதல் ). என்னை அந்த இடத்துக்கு அழைத்து வந்தவர் பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர். வயது 50 இருக்கும். பல விவரங்களைச் சொன்னார்.
.
சிறுவயதில் தான் ஒவ்வொரு கந்தூரியிலும் பெற்றோருடன் கலந்து கொண்டதாகவும் பெருந்தொகையில் மக்கள் கூடுவதையும் மீன் கந்தூரி பற்றியும் விவரித்தார். இப்போது எல்லாம் குறைந்து விட்டது. ஊர்மக்கள் பெரும்பாலும் ஒதுங்கிவிட்டனர். ஒரு சிலர் பல வெளியூர்க்காரர்களுடன் சேர்ந்து இன்றும் அந்தத் தினத்தில் ஓதல்கள் நடத்தி கந்தூரியும் கொடுத்து வருகின்றனர். அதிகம் பேர் கலந்து கொள்வதில்லை நாங்களும் வருவதில்லை என்றார்.
.
பலவத்துறையில் இருந்து பலவத்துறையைச் சேர்ந்தவர்கள் படகுகளில் தேவையான நல்ல ரக மீன்களைக் கொண்டு வருகின்றனர். அதோடுதான் கந்தூரி ஆரம்பமாகிறது. இவர்கள்தான் இந்த கந்தூரியை முன்னின்று நடத்தி வந்துள்ளனர். 35 கி. மீ. அப்பால் இருந்து வரும் இவர்கள் தான் கந்தூரியின் முக்கியஸ்தர்கள். 40 முழ கபுறடி இருப்பது சிலாபத்தில். கட்டிடம் , மீசான் எதுவுமில்லாத கடற்கரை மணல் . அதன் மத்தியில் 40 – 45 முழ நீளத்திற்கு ஒரு அடி உயரத்திற்கு மணலால் அமைக்கப்பட்ட கபறடி. ( 1)இந்த கபுறடியும் ( 2 )மீன் கந்தூரியும் ( 3) பலவத்துறைத் தொடர்பும் நமக்குக்கூறுவதென்ன ?
.
எனது இலக்கிய நண்பர் பைஸ்தீன் ( சிலாபம் ) கூறும் தகவல்களின்படி முன்னொரு காலத்தில் கடலில் மிதந்து வந்த நான்கு அல்லது ஐந்து இராக் வாசிகளின் பூத உடல்கள் ஒன்றாக அடக்கப்பட்ட இடம் அந்த கபுறடி. அல்லது அங்கு நடந்த சண்டையில் அந்த இராக் வாசிகள் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒன்றாக அடக்கப்பட்டுள்ளனர். மீன் பிடியிலும் முத்துக் குளிப்பிலும் சிலாபம் கடல் , பெயர் பெற்றிருந்த ஒரு காலத்தில் பல சண்டைகள் நடந்துள்ளன. பல சம்பவங்கள் 14ம் நூற்றாண்டளவில் அல்லது அதற்கு முன்னர் நடந்தவை.
.
அதில் முக்கியமானது காயல்பட்டண முத்து வணிகர்களுக்கும் சிங்கள மன்னரின் படைகளுக்கும் இடையில் நடந்த பெரிய சண்டை .சண்டையில் யானைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முத்துக் குளிப்பைத் தமது ஏக போக வர்த்தகமாக்கிக் கொள்ள சுமார் 100 காவலர்களுடன் பல படகுகளில் காயல் பட்டண வணிகர் சிலாபம் கடலில் பிரவேசித்தனர். சண்டையில் காயல் வாசிகள் படுதோல்வியடைகின்றனர். சில படகுகள் எரியூட்டப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர்.
.
அந்தச் சண்டையில் இறந்த பலரது சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கந்தூரியின் தொடக்கம் இதுவாகவும் இருக்கலாம். கேரளக் குஞ்சாலிமரைக்காரின் படைகள் போர்த்துக்கேயப் படைகளுடன் கடல் சண்டைகளில் ஈடுபட்ட பிரதான இடங்களில் சிலாபம் கடல் பகுதியும் ஒன்று. கோட்டை மன்னருக்கு உதவியாக சிங்களப் படைகளின் ஆதரவுடன் குஞ்சாலி மரைக்காரின் படைகள் கடல் சண்டைகளில் ஈடுபட்டனர். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.
.
சிலாபம் கடலில், சண்டையில் மடிந்த முஸ்லிம்களின் உடல்கள் கூட்டாகப் புதைக்கப்பட்ட இடமாகவும் அது இருக்கலாம். போரில் இறந்த குஞ்சாலிமரைக்கார் ஒருவரின் சமாதி ஒன்று சிலாபத்தில் உள்ளது.
.
WAK