பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-23
அங்கு நடப்பட்டிருந்த இயேசுவின் இரண்டடி சிலையைத் தாங்கி நின்ற கம்பத்துக்கு அருகில் சென்றோம். மூன்று வருடமாக இந்த சிலை இங்கு இருக்கிறது என்றார் உடன் வந்தவர். “இந்த இடம் எங்களுடையது. நீங்கள் விலகிச் செல்லுங்கள் என்பதுதான் சிலை தெரிவிக்கும் செய்தி. ” 40 முழ அடக்க இடத்தில் இருந்து 40 அடி தூரத்தில் அந்த சிலை தனித்துக் காட்சியளித்தது. சுற்றிவர கிறிஸ்தவர் குடி இருப்புக்கள் .
.
கபுறடிக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணி வெட்ட வெளியாகக் கிடக்கிறது . பெறுமதியான நிலம். பக்கத்தில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் கிடையாது. 3 மைல் தூரத்தில் சிலாபம் பஸார் சென்றால் சிறிது தூரத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களைக் காணலாம். பஸாரில் பல பள்ளி வாசல்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் உள்ளன கபுறடி விடயத்தில் முஸ்லிம்களிடையே காணப்பட்ட பலத்த கருத்து முரண்பாட்டினால் பராமரிப்பும் பாதுகாப்பும் அற்றுப் போய்விட்டது. பக்கத்தில் வாழ்ந்தவர்கள் ஊர் மரபுகளை மீறி இயேசுவின் சிலையை அங்கு நாட்டி உரிமைகோரத் தொடங்கி விட்டனர்.
.
இதன் பின்னர்தான் பெரியபள்ளிவாசல் நிர்வாகிகளும் சில முஸ்லிம் பிரமுகர்களும் கிறிஸ்தவ சமய உயர்பீடத்தை நாடி உள்ளனர். உயர் பீடத்தின் முடிவு கவலைக்கிடமானது. கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக் கூடியதாக இப்போது எதுவும் செய்ய முடியாது. போன்ற சாக்குப் போக்குகள் கூறப்பட்டன. நாற்பது முழ அடக்க இடம் , வருடந்தோறும், இன்றும் நடக்கும் கந்தூரிகள், சிலாபம் முஸ்லிம்களின் முத்துக்குளிப்பு வரலாறு , பெரிய பள்ளியிடம் இருக்கும் காணி உறுதிகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஊரின் மரபும் வழக்கங்களும் கிறிஸ்தவ பீடம் நடந்து கொண்டதில் சமயப் பெரும்பான்மை ஆதிக்கம் இருந்தது தெரிந்தது.
.
மூத்த குடிகள் முஸ்லிம்களாக ( தமிழர்களாக ) இருந்தாலும் அந்தப் பிராந்தியத்தின் பலம் மிக்க சமயம்
இன்று கிறிஸ்தவம். இயேசுவும் புத்தரும் சொன்னவை அல்ல பெரும்பான்மைப் பலம்தான் சமயம். இப்போது கோர்ட்டில் வழக்கு நடப்பதாக வந்தவர் தெரிவித்தார். அன்று மாலை கண்டிக்குத் திரும்பி விட்டேன். ஆறு மாதங்களின் பின்னர் 1920ல் அம்பகஹமுல 40 முழ கபுறடியில் மீன் கந்தூரி நடக்க இருந்த தினத்தை பைஸ்தீன எனக்கு அறிவித்தார்.
.
நானும் கம்பளை நண்பர் பைசலும் மற்றொரு நண்பருமாகக் குறித்த நாளில் , காலையில் சிலாபம் போய்ச் சேர்ந்தோம் . கந்தூரி – ஓதல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது சிறிதாக மக்களும் வந்த வண்ணம். பைத்துகள் , ராத்திபுகள் ஓதுவதற்கும் மக்கள் அமர்ந்து உணவு உண்ணவும் நவீன கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி இருக்கும் வழமை போல் ஒலி பெருக்கியில் ஒதல் ஒலிக்க ஆரம்பமானது. பத்து நிமிடங்களில் ஒரு சலசலப்பு ஆரம்பமாகியது. ஒலி பெருக்கியை நிறுத்துமாறு தூரத்தில் இருந்த கிறிஸ்தவக் குடி இருப்பாளர் சிலர் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்தனர்.
.
சற்றுத் தொலைவில் பத்துப் பதினைந்து பேர் கைகலப்பிற்கு ஆயத்தமாக இருப்பதை எம்மால் அறிய முடிந்தது. அச்சுறுத்தல் தெளிவானதாக இருந்தது. உள்ளூர்ப் பிரமுகரும் சட்டத்தரணியுமான அமீன் அங்கு வந்தார். ஏற்கெனவே தொலை பேசியில் தொடர்பு கொண்டு கந்தூரி வரலாறு பற்றிப் பேசி இருந்தேன். என்னைக் கண்டதும் அருகே வந்து நிலைமைகளை சுருக்கமாக விளக்கினார். இந்த நிகழ்ச்சியை நடத்தவிடாது தடுக்க பொலீஸ் வர இருப்பதாகவும் சிலர் இடையூறு செய்யக் கூடும் என்றும் கூறினார். ஆனால் ,பொலிசார் மூலமாக எதிர்த்தரப்புடன் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருப்பதாகவும் ஒலி பெருக்கியை நிறுத்தி விட்டு நிகழ்ச்சிகளை தொடருமாறும் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
.
WAK
