பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-02

முசல்பிட்டி மற்றும் சுற்றுவட்டாரம் முழுக்கப் கறுத்தப்பா பெயரெடுத்திருந்தார். ஒரு காலத்தில் அவர் கழிகம்பு ஆண்ணாவியாராக இருந்திருக்க வேண்டும். அவருடைய மகன்கள் மம்மரசன் ( முஹம்மது ஹஸன் ) மஸ்ஹூத் அபூபைதா மூவருமே கழிகம்பாட்டத்திலும் கழிகம்புப் பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கினர். மஸ்ஹூத் நீண்டகாலம் அண்ணாவியாக இருந்தார். முசல்பிட்டியின்பழைய அண்ணாவிகளில் ஒருவர் அசனா மரைக்கார். மஸ்ஹூத் ஒரு மூலநோய் வைத்தியர்.
.
கறுத்தப்பாவின் பேரன் ஹமீத் கான்( ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் )இன்று அந்தப் பிராந்தியத்தின் முக்கிய அண்ணாவி. கழிகம்பாட்டத்தில் முசல்பிட்டி இன்றும் நல்ல நிலையில் உள்ளது . கண்டல் குழி, வெல்லங்கரை பள்ளிவாசல்துறையிலும் கரைத்தீவிலும் ஓரளவு இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். கறுத்தப்பா பெரிய வாண வேடிக்கை நிபுணர். 30, 40 வருடங்கள் பள்ளிவாசல் துறை கூடு விழாவின் பிரதான வாண வேடிக்கை நிகழ்த்தியவர்.
.
அவரது வாண வேடிக்கையின் அற்புத அழகைப் பார்க்காது கூட்டம் நகராது. பள்ளிவாசல் துறை கூடு விழாவின் அந்த நிகழ்ச்சி நடக்க அதிகாலை 3 1/2 ஆகிவிடும். கறுத்தப்பா அவரது 22 வயதில் தமிழ்நாடு சென்று வெடிமருந்துக் கலைக்கு புகழ் பெற்ற சிவகாசியில் இந்தக்கலையைப் பயின்றுள்ளார். 5,6 வருடங்கள் அங்கு அவர் தங்கி நின்றதாக அவரது மகன் அபூபைதா என்னிடம் கூறினார்.
.
மன்னார் சென்று பாம்பன் பாலம் , தனுஷ் கோடி ஊடான கடற் பயணம் . அக்காலத்தில் அநேகர் இந்தக் கடல் ழியைப் பயன்படுத்தி வந்தனர். நாகூர் கொடியேற்றத்துக்குச் செல்வோரும் இந்தவழியிலேயே சென்றனர். கூடு காலத்தில், வெடிமருந்துக் கலை வேலையில் கறுத்தப்பா ஈடுபடுவதை அருகில் நின்று பார்த்திருக்கிறேன். மூன்று மகன்களின் உதவியுடன் தலைமை வகித்து அந்தப்பணியைச் செய்வார். 70 பது வயதிருக்கும் வெள்ளை பெனியனும் வெள்ளைச் சால்வையால் கட்டப்பட்ட தலைப்பாகையுமாக இளைஞரைப் போல் வேகமாகச் செயல் படுவார்.
.
கூட்டின் 2ம் நாள் பிரதான நாள், மக்கள் வெள்ளம் அலைமோதும் நாள். செய்யிது ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹாவின் கூடு வவுனியா, முல்லைத்தீவு புத்தளம் , சிலாபம் வரை பிரசித்தம். கடைகள் , காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், சீனடி, சிலம்பம், வாள்வீச்சு கழிகம்பாட்டம், சிறுவர் விளையாட்டுப் பொருள் விற்பனை, பல் பொருளங்காடி, சாப்பாட்டுக்கடைகள் தனி, பாய்க்கடைகள், சட்டிபானைக்கடைகள், தரையில் விரிக்கப்பட்ட புத்தகக் கடைகள். தர்ஹாவுக்குள் ஒதல்கள், திக்ருகள் இன்னும் பல.
.
அந்த தர்ஹாவின் புகழுக்கு கூடு விழாவும் ஒரு காரணம். கூட்டின் வயது சரியாகத் தெரியவில்லை. 1980 ல் இருந்து கணக்கிட்டால் எனது அனுமானப்படி சுமார் 200 வருடங்கள் இருக்கலாம். புத்தளம் நகரில் முகையதீன் தர்ஹாவில் எடுக்கப்பட்ட கூடு இதைவிடப் பழமையானது . 1934ல் அதற்குச் சற்று முன்னர் கூட்டிற்கு எதிரான குழப்பத்தின் போது அது நிறுத்தப்பட்டது. 1980ல் பள்ளிவாசல்துறைக்கூடு நிறுத்தப்பட்டது. கல்பிட்டியில் கூடு எடுக்கப்பட்டதா ? தெரியவில்லை. ஆனால் பல்லக்கு எடுக்கப்பட்டது.
.
பல்லக்கை ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள். நான் பார்த்திருக்கிறேன். கனமூலை, கொத்தான்தீவு, புழுதிவயல் போன்ற ஊர்களிலும் கூடுகள் எடுக்கப்பட்டன. இரண்டாம் ( நடுக்) கூட்டிற்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். கறுத்தப்பாவின்வாண வேடிக்கையினால் அன்றைய இரவு , வர்ணக் கோலங்கள் நீந்தும்தடாகம் போல் ஆகிவிடும்.சிறுவர்கள் ஆனந்த மிகுதியினால் எழுப்பும் ஓசை வானத்தைத் தொடும். தீப்பிழம்புகளின் வர்ண நர்த்தனத்தை காண்பதற்கு பெரியவர்களும் காத்திருப்பர்.
.
கறுத்தப்பாவின் கைவண்ணம் முடியக் கல்பிட்டி மைதீனின் வாண வேடிக்கை ஆரம்பமாகும். கண்கொள்ளாக் காட்சி என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இரண்டு மாதங்களுக்கு முன்பு நயாகரா போயிருந்தோம் . நயாகராவைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சிதான் . அது ஒரு சனிக்கிழமை மாலை. இரவு படர மின் ஒளியில் வளைந்தோடும் நயாகரா. அதற்கும் மேல் வெள்ளம் போன்ற வர்ணமின் விளக்கொளிகள் பாய்ச்சப்படும் , இரவு நயாகராவுக்குத் தனி அழகுண்டு.
.
சனி இரவுக்கு ஒரு விசேடமுண்டு நயாகராவின். வானம் முழுவதையும் வாண வேடிக்கைகளால் வர்ணத்
தோரணங்கட்டி அழகு பார்க்கும் நாள் சனிக்கிழமை நள்ளிரவு, ஐம்பது வருடங்களின் முன்னர் பள்ளிவாசல் துறையில் கண்ட கறுத்தப்பாவின் நெருப்பின் வண்ணம் நயாகராவின் வர்ண மின் ஒளியில் நீந்திப் பிரகாசித்தது. திரும்பிப் பார்த்தேன். வானத்தைப் பார்த்தபடி கார்களிலும் பாதைகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அசையாமல்.
.
WAK