பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-03

ள்ளிவாசல் துறை கல்பிட்டிக் கடலேரியின் அருகில் அமைந்துள்ள சிறிய கிராமம் பள்ளிவாசல் முந்தல் (துறை) அருகில்தான் தர்ஹா , பள்ளிவாசல், பழைய குடியிருப்பு. அக்குடி இருப்பு நோய்த்தாக்குதல் அல்லது கடல் நீர் பெருக்கு காரணமாக ஒரு மைல் கடந்து புதிய குடியிருப்பாகி இருக்க வேண்டும். தர்ஹாவுக்குப் பக்கத்தில் ( 1/2 கி. மீ. ) இருந்த பள்ளிவாசல் அதற்கு அருகில் இருந்த மையவாடி இரண்டும் கைவிடப்பட்டன.
.
புதிய பள்ளி புதிய கபுறடி சுமார் 170 வருடங்களின் முன் தோன்றி இருக்க வேண்டும். முக்குத்தார் வாடி, அசனாமரைக்கார் வாடி என்ற இரு பகுதிகள் அப்போது அங்கு இருந்தன. குடியேறிய புதிதில் கட்டிய பள்ளிவாசல் சுமார் 150 வருடங்கள் அல்லது அதற்கு மேல் பழையது . அந்தப் பிரதேசத்தில் இருந்த விசாலமான பள்ளிவாசல் அதுதான். புத்தளம் மாவட்டத்தின் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட பள்ளிவாசல்களின் எளிய கட்டமைப்பு. ஊர் மக்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும் ( இப்போது இது இல்லை ).
.
அதற்கும் பழையதான பள்ளிவாசல் 200 ஆண்டு களுக்கு முற்பட்டது. தூரக்கிராமங்களிலிருந்து மக்கள் ஜூம்ஆவுக்கு இந்தப் பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர். அந்த இடத்திற்கு மூன்று தரமாவது சென்றிருக்கிறேன். சின்னாப்பா ( சிறியதந்தை) அபுல் ஹஸனுடன் இரு முறை . இரண்டும் விராத்து ( பராத் ) காலம் விராத்து ( பராத்) தினத்தில் வீட்டில் செய்த இன் பண்டங்களுடன் எல்லா ஊர்களிலும் நடப்பது போல் கபுறடிக்குச் செல்ல வேண்டும் .
.
உணவுத் தட்டை எடுக்கும் போது ம்மா சொல்வாங்க “முதலில் பழைய கபுறடிக்குப் போங்க , அங்கு உங்களது மூத்தோர்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள். பின்பு மற்றக் கபுறடிக்குப் போங்க. நானும் சின்னாப்பாவும் பல்வகை இனிப்புப் பண்டங்களோடு 200 வருடங்கள் பழையான அந்த கபுறடிக்குச் சென்றோம். எங்களுக்குத் தெரிந்த சிலர் உணவுத்தட்டுக்களுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
.
வெள்ளைத் தொப்பி அணிந்த ஒருவர் பாயில் அமர்ந்து யாசீன் ஓதிக் கொண்டிருந்தார். வழமை போல சாம்பிராணி, சந்தனக்குச்சிகள் எரிந்து கொண்டிருந்தன. அவருக்கான சிறு தொகைப் பணத்தையும் தின் பண்டங்களையும் கொடுத்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். நாங்கள்5,6 அடி உயரமான மண் மேட்டில் நின்று கொண்டிருந்தோம். பழைய கட்டிட இடிபாடுகள், அங்குமிங்கும். கட்டிடக்கற்கள் தரையில் அமிழ்ந்து அழியும் கோலம். சுற்றிவரப் புதர்கள் , பற்றைகள் சிறிது தூரத்தில் தர்ஹா.
.
அடுத்தது கல்பிட்டி அல்அக்ஸாவில் சாரணராக இருந்த போது நடந்தது. அல் அக்ஸாவின் முதல் சாரணர்கள் நாங்கள்தான். வேலாயுதம் ஆசிரியர் தலைமைச் சாரண ஆசிரியர். புத்தளம் அமீர் ஆசிரியர் எமது பிரதான பயிற்சியாளர். அப்போது அதிபராக இருந்த புத்தளம் நெய்னா மரைக்கார் அவர்களின் முயற்சியால் இது தொடங்கப் பட்டிருக்க வேண்டும். புத்தளம் சம்சுல் ரபீவ் ஆசிரியர் மற்றும் கரைத்தீவு செய்னுதீன் ஆசிரியர் இதற்கு ஊக்கமளித்தனர். மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியவில்லை.
.
அல் அக்ஸாவில் சாரணீயத்தைக் கட்டி எழுப்பிய பெருமை மர்ஹூம் அமீர் ஆசிரியருக்குரியது. அவர் புத்தளம் இருந்து வந்து பயிற்சி வழங்கினார். நாங்கள் 20, 25 ,பேர் இருந்தோம். வகுப்புக்கள் முடிந்து சாரணியப் பயிற்சி மாலை 5 மணிவரைப் பல மாதங்கள். நான் ,அன்வர், பதுருதீன், சதானந்தன், பளீல் , உகத், சலாகுதீன், ரஸாக், எலாரிஸ் இப்படியொரு பட்டியல். எமது முதலாவது camp பள்ளிவாசல் துறையில்தான் நடந்தது. நடந்த இடம் பழைய பள்ளிவாசலும் கபுறடியும் அழிந்து கிடந்த அதே மணல் மேடு.
.
அந்த இடத்தின் இடிபாடுகளை அப்போதும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்தப் பள்ளி கல்கட்டிடமாக இருந்துள்ளது. தர்ஹா மாதிரி . அதற்கும் முற்பட்ட காலத்தில் , களிமண் – ஓலைக் கட்டிடமாக இருந்திருக்கலாம். தர்ஹாவின் நிலையும் அதுதான். ஆனால் இரண்டு பள்ளிகளை இழந்திருக்கிறோம் . தர்ஹா இன்னும் அதே இடத்தில்
எல்லா வரலாற்றையும் சுமந்தபடி.
.
WAK