பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-04

டல் கடலுக்கு அருகில் கிராமம் ,தர்ஹாவும் (Shrine) பள்ளிவாசலும் ஒரு எளிய வாழ்க்கை முறை. எத்தனை காலம், தெரியாது. எங்கிருந்து தெரியாது. அரேபியா, இந்தியா, மலாக்கா, மலபார். மஹ்பர் எங்கிருந்தாவது. ஆனால் வாழ்க்கை இங்குதான், பன்னெடுங்காலமாக. முன்னோர் முன்னோர்களின் முன்னோர். அவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து கபுறுகளைக் கண்டது இந்த மண்தான அந்த சரித்திரம் அலை மோதும் இடம் கல்பிட்டிக்கடலும், கொடிமரத்தின் கீழ் அமைதிகாக்கும் செய்கு அலாவுதீன் தர்ஹாவும் தான்.
.
கல்பிட்டிக் கடலும் புத்தளம்களப்பும் ஒன்றுதான் . கல்பென்டைன் என்று கல்பிட்டியையும் பொட்டலூன் என்று புத்தளத்தையும் ஒல்லாந்தர் அழைத்த காலத்துக்கு முன்னரே புத்தளம் முதல் கல்பிட்டி வரை வாழ்ந்த கதை இது. நாகூரிலிருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் தொண்டியிலிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் மலபார்கரையிலிருந்தும் தோணிகளும் கப்பல்களும் வந்து போன காலம் இன்று நேற்று நடந்ததல்ல.
.
நாற்பது மைல்கள் நீளம் எட்டு மைல்கள் அகலம். கனடாவில் நாம் காணும் நதிகள் , ஏரிகள் போல் . அந்த இடமே கதி என கிராமங்களின் கால்களைச் சுற்றியபடி கல்பிட்டிக் கடல் ஏரி. ஏரியைக் சூழக் கிராமங்கள். கிறிஸ்தவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர்கள். படகிருந்தால் யாரும் பயணிக்கலாம். வலையிருந்தால் யாரும் மீன்பிடிக்கலாம். வற்றாத மீன்வளம்.
.
புத்தளம் மீன் சந்தையில் களப்பு மீன்களின் கிராக்கி தனி. 5000ம் அல்லது 8000ம் குடும்பங்களுக்குச் சோறு படைக்கும் கடல். இலட்சக்கணக்கானோரின் மீன் உணவைப் பூர்த்தி செய்கிறது நினைவுக்குக் கெட்டிய
காலம் முதல். எங்கள் வீட்டிலிருந்து கூடினால் ஒன்றரை மைல் தூரம் . கடல் தெரியாமல்தான் நான் வளர்ந்தேன். எங்களில் அநேகர் இப்படித்தான். கடல் மீனவர்களுக்கு என்று ஒதுங்கிவிட்டோம். ஒரு முறை வாப்பாவுடன் வேட்டைக்காகப் பள்ளிவாசல் துறைக் கரையில் இருந்து வள்ளத்தில் மறுகரைக்குச் சென்றேன். அதாவது அக்கரைக்கு. பதினைந்து வயதிருக்கும்.
.
படகோட்டி அசனாபிள்ளை . கெட்டிக்கார இளைஞனை வாப்பா தெரிவு செய்திருந்தார். கடலைக் கடப்பதற்கு ஞானமுள்ள படகோட்டி தேவை . கடலின் நடுப்பகுதி கம்புக்கு எட்டாத ஆழம் என்றும் . அலைகளும் நீரோட்டங்களும் குறுக்கிடும் என்று நான் அறிந்திருந்தேன். ஓரளவு பெரிய வள்ளம் . பாய் இழுத்த வள்ளம், அதனால் வள்ளம் தாவிப் பாய்ந்து ஓடியது. கரைத்தீவுக்கு அருகில் ஒரு காட்டுப்பகுதிக்கு அருகில் இறங்கினோம்.
.
பயணத்தின் போது பல தீவுகளைக் கடந்து சென்றோம் . பல சிறிய பெரிய தீவுகள் . ஒவ்வொன்றுக்கும் சோமாதீவு , நரிப்புட்டி எனப் பெயர்கள் உண்டு. புத்தளம் ஏரிப்பகுதியிலும் பல தீவுகள் உண்டு . அதில் ஒன்று காக்கை தீவு. புத்தளம் நகரையும் கல்பிட்டியையும் மையப்படுத்தியதுதான் இந்தப் பிரதேசத்தின் வரலாறு. கல்பிட்டி ஒரு துறை முகம் புத்தளம் ஒரு துறை முகம் புத்தளம் பெரிய பள்ளி கடல் ஓரத்தில் உள்ளது.
.
அதற்குச் சற்றுத்தூரம் கடலில் இப்போதும் கடல் விழுங்கிய புத்தளம் ஜெட்டியின் கடைசிக்கம்பியைப் ( 2 அடி உயரம் ) பார்க்கலாம். 1970 வரை கடலுக்கு வெளியே அந்த ஜெட்டியின் பாகங்கள் தெரிந்துள்ளன.
.
அதுதான் கண்டி மன்னனின் பிரதான துறைமுகமாக இருந்துள்ளது. இது ஒரு Inner Port. பிரதான துறைமுகம் கல்பிட்டி. கல்பிட்டியில் ஜெட்டி இன்றும் உள்ளது. அது ஜெட்டி மட்டும்தான். ஆனால் கல்பிட்டித் துறைமுகம் கல்பிட்டிக் கடலேரி சந்திக்கும் வெள்ளக்காரன்குடா (Dutch Bay) விற்கும் அப்பால் இந்துசமுத்திரப்பரப்பில் உள்ளது. பெரும்பாலும் அது கீரிமுந்தல்.
.
WAK