பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-05

காவேரி நதிக்கரையில் நம் முன்னோர்பலரும் வாழ்ந்து வந்தார்கள். நமது ஊனும் உடலும் உணர்வு எல்லாம் காவேரி நதி வளத்திலேதான். காவேரி நீரே நமக்குள் ரத்தமாக ஓடுகிறது என்று வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம். – க நா சு
.
‘ஒரு நாள்’ நாவலில் க நா சு ஒரு அத்தியாயத்தில் இரண்டு பக்கங்கள் காவிரியை வர்ணித்திருப்பார். அதில்
உள்ள சில வரிகள் அவை. காவிரியின் அழகும் வளமும் நாமறிந்ததுதான். ஆனால் அதை அண்டி வாழும் மக்கள் அதில் காட்டும் அன்பு அலாதியானது.
.
புத்தளம் கல்பிட்டி வளத்தின் முக்கிய பகுதி கடலேரிதான். பொருளாதாரத்தில் மட்டுமல்ல. முஸ்லிம்களின வரலாறும் பண்பாடும் கலந்த உவர் நீர் வலயம், கல்பிட்டிக் கடலேரி. புத்தளம் துறைமுகம் – கல்பிட்டித் துறை முகம் இரண்டிற்கும் இடையில் பல சிறு துறைகளும் அவற்றுடன் கிராமங்களும் இருந்தன. மாம்புரி நுரைச் சோலை?, திகழி, ஏத்தாலை , கண்டற் குடா,பள்ளிவாசல்துறை,குறிஞ்சிப்பிட்டி கடலேரித் துறை முகங்கள் இருந்த இடங்கள்.
.
அருகே பள்ளிவாசலும் தர்ஹாவும் அமைந்த அழகிய கிராமங்கள். நீண்ட வரலாறு கொண்ட முகையதீன் ஆண்டகை தர்ஹா புத்தளம் கடலேரித்துறைமுகத்தின் பெரிய அடையாளம் . 650 வருட வரலாறு கொண்ட அந்த தர்ஹா இருந்த இடமும் வரலாறும்தான் இன்றுள்ளது. புத்தளம் மாவட்ட விபர அறிக்கையில் பிராங்க் மொடர் 19ம் நூற்றாண்டின் இரண்டு பிரதான திருநாள்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
.
ஒன்று தலைவில் கிறிஸ்தவத் திருநாள் . அது இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. கோயிலின் வரலாறு 400 வருடங்கள் பழைமையானது . அதே கோயிலில் இன்றும் அவ்விழா நடக்கிறது. மற்றது, புத்தளம் முகையதீன் ஆண்டகை கூடு ( அல்லது கூடு கொடி ) விழா . முன்நூறு வருடங்களுக்கு முற்பட்டது. தர்ஹாவின் வரலாறு அதற்கும் முற்பட்டது. கண்டி மன்னன் புத்தளம் நகர மக்களைக் கௌரவிப்பதற்காகப் பரிசில்கள் வழங்கிய தர்ஹா. இன்று அந்தத் தர்ஹாவுமில்லை விழாவுமில்லை.
.
சுற்றிவர மதிலும் நான்கு உயர்ந்த மினாராக்களும் கொண்ட ஒரு தர்ஹா கட்டிடம்பற்றி வரலாற்றில் குறிப்புக்கள் உள்ளன. உள்ளூர் வரலாறுகளிலும் இந்த தர்ஹா பற்றிப் பதிவாகியுள்ளது. இது இருந்த இடம் கடலைத் தொட்டபடி. அதற்கு சிறிது தொலைவில் துறைமுகச் சிதைவுகள். திகழி – ஏத்தாலைக்கு அருகே கடலில் சிறு துறைகளின் சிதைவுகள் இன்றுமுள்ளன. மரைக்கார்கள் அதிகம் வாழ்ந்த இடம் திகழி. மரைக்கார்களின் மச்சுவீடுகள் அங்கிருந்தன. இன்றும் சில வீடுகளைக்காணலாம்.
.
திகழி பற்றி அறிவதற்காக 10, 12 வருடங்கள் இருக்கும் அங்கு போயிருந்தேன். நான் அங்கு சந்தித்தவர்களில் கௌஸ்தீன் காக்கவும் ஒருவர். கல்பிட்டி அல் அக்ஸாவில் படித்தார். பல தகவல்களை அறிந்து கொண்டேன் . ஊருக்குப் பக்கத்தில் இருந்த கடலேரிக்கு அழைத்துச் சென்று தென் இந்தியாவில் இருந்து திகழிக்கு பொருட்கள் வந்திறங்கியதாகக் கருதப்படும் இடத்தைக் காட்டினார்.
.
கண்டல் குடா ஒரு துறை இருந்த கிராமம். அதன் அருகில் ஒரு பள்ளிவாசல் இன்றும் உண்டு . குறைந்தது 200 வருடப் பழைமையான பள்ளி வாசல் அதைக்கடந்தால் பள்ளிவாசல் துறை .அங்கிருந்து மூன்று மைல் தொலைவில் குறிஞ்சிப்பிட்டித் துறை. அடுத்த துறைமுகம் பெரிய துறை முகம். அது கல்பிட்டி.
.
WAK