பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-06

ல்பிட்டிக் கடலேரியைச் சூழ கடலோரக் கிராமங்கள். கிராமங்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் கடலேரியின் பங்களிப்புப் பெரியது. கடலேரியில் புதைந்துள்ள கல்பிட்டி புத்தளம் நகர்களின் வரலாறும் பெரியது. ஒரு காலத்தில் கிராமங்களையும் நகரங்களையும் கொழும்பையும் கல்பிட்டியையும் இணைத்ததும் இக்கடலேரிதான்.
.
புத்தளம் மாவட்டம் முழுக்க விளைந்த உப்பை நாடு முழுக்கக் கொண்டு செல்ல ஆதாரமாக இருந்ததும் இக்கடலேரிதான். கல்பிட்டி (தில்லையடி ) , பள்ளிவாசல்துறை ( கட்டையடி) முசல்பிட்டி, முதலைப்பாளி (நாச்சிக்கள்ளி) பாலாவி, புத்தளம், கரைத்தீவு இவை யாவும் புத்தளத்தின் பிரபல உப்பளங்கள். புத்தளம் தனியார் வாய்க்கால் அளவில் பெரியது. கோடை அதிகரித்தால் கடல் நீர் பரவிய இடமெல்லாம் உப்பு .
.
நாச்சிக்கள்ளி இரண்டு சின்ன நாச்சிக்கள்ளி, பெரிய நாச்சிக்கள்ளி உப்பு நீர்த்தேக்கங்கள் எல்லாமே தனியாருடையது. உரிமையாளர்கள் முஸ்லிம்கள். மன்னாரில் முத்து .புத்தளத்தில் உப்பு. கண்டி இராச்சியத்திற்கு உப்பு வழங்கிய பிரதான பிரதேசங்களில் ஒன்று புத்தளம். இப்பிரதேச முஸ்லிம்களின் பண்டைய தொழில்களில் ஒன்று உப்புச் செய்கை.
.
இப்பிரதேச உப்புச் செய்கையின் தாய் இச் சிறு கடல்தான். புத்தளத்தின் செல்வச் செழிப்பின் ஒரு பகுதி , உப்பு விளைச்சலிலும் உப்பு வர்த்தகத்திலும்தான் தங்கியிருந்தது. மீன்பிடிக்க ஒரு புறம், போக்குவரத்துக்காக வர்த்தகத்துக்காக மறுபுறம் எண்ணற்ற படகுகளும் பாரைகளும் கடல் முழுக்க அப்படி ஒரு காலம். கல்பிட்டி ஜெட்டிக்கும் கரைத்தீவுக்கரைக்கும் இடையில் தொடர்ச்சியாக வள்ளப் போக்குவரத்து அண்மைக் காலம் வரை.
புத்தளம் நகருக்கான போக்குவரத்தும் படகுகளில் நடந்துள்ளது.
.
இல்லாவிட்டால் கரத்தை அல்லது கால்நடை. கொழும்புப் பயணம் பாரையில் ( ferry ). கல்பிட்டி ஏரியில் இருந்து ஊரியாற்றுப் பாலம் வழியாக, கீரியங்கள்ளி புளிச்சாக்குளம் முத்துராஜவல நீர்ப்பாதை ஊடாக ,களனிகங்கையை அடைந்தால் கொழும்பு . ஒல்லாந்தர் நிர்மாணித்த நீர்ப் பாதை அது. கல்பிட்டி முதலாவது கிராம சபைத்தலைவர்
(Sanitary Board Chairman) மதார் மரைக்காரின் சேவைகளை எழுதிய காலத்தில் அவரது மூன்றாவது மகள் ஐன் ( எனக்கு
மாமி முறை ) அவரது வீட்டில் இருந்து சொன்ன தகவல் இது.
.
” எங்க வாப்பா ஜஸ்டிஸ் அக்பரின் தந்தைக்குச் சொந்தமான இந்தவீட்டை வாங்குவதற்கான பேச்சு முடிந்த பின், அக்பரின் தந்தைக்கு பேசிய படி பணத்தைக் கொடுக்க, வாவ லெவ்வை மரைக்கார் செல்லாப்பாவுடன் ( வாப்பாவின் தம்பி ) கொழும்பு போனாங்க. பெரியில்தான் போனாங்க. ரூ. பத்தாயிரத்துக்கு இந்தவீடு
வாங்கப்பட்டது. “
.
இது 1943 அளவில் நடந்திருக்க வேண்டும். கல்பிட்டியின் கட்டிடக் கலைக்கு இன்றும் அடையாளம் காட்டும் வீடுகளில் ஒன்று இது 19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடு.
.
WAK