பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-08

கொழும்புக் குப்பைகள் புத்தளம் வராது தடுக்க , எடுக்கக்கூடிய சட்ட , ஜனநாயக நடவடிக்கைகள் பற்றி முபாரக் ஆசிரியரிடம் நிறையத் திட்டங்கள் இருந்தன. சுற்றாடலியல் நோக்கிலிருந்து பல விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் ஊடாக புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படும் குப்பை புத்தளம் சூழலை எவ்வாறு நாசம் செய்யும் என்பதைச் சுருக்கமாக விளக்கினார்.
.
நானும் முன்னரே சில வாசிப்புக்களைச் செய்திருந்ததால் அவர் பேசுவதன் உண்மை தெளிவாகத் தெரிந்தது. அதைத் தடுப்பது எப்படி? என்பது அன்று ஆராயப்பட்ட முக்கியவிடயம் . அதற்கான வழி முறைகளும் அவரது விரல் நுனியில் இருந்தது. எந்த சபையிலும் எந்த நீதி மன்றத்திலும் பேசும் திறனும் ஆதாரங்களும்
அவரடமிருந்தன.
.
சுற்றாடலியல் பின்னணியில் புத்தளமாவட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்துக் கூறும் ஆற்றல் உள்ள ஒருவர், ஒரே ஒருவர் முபாறக் அடிப்படையில் ஆசிரியராக இருந்தாலும் புத்தளம்- கல்பிட்டி அபிவிருத்தி மற்றும் சுற்றாடலியல் ஆய்வாளராகவும் செயற்பாட்டாளராகவுமே அவரை நான் பார்க்கிறேன்.
.
புத்தளம் முதலாவது எம் பி, முதல் முஸ்லிம் சபாநாயகர் எச் எஸ் இஸ்மாயிலின் சொந்த மருமகன். மும்தாஜ்மஹலில் இருந்து கொழும்பு ஸாஹிராவில் படித்தார். அரசியல்ரீதியாகப் புத்தளம் தேர்தல் மாவட்ட அபிவிருத்தி என்றால் அது எச் எஸ் இஸ்மாயில் காலத்திலிருந்துதான் ஆரம்பம். நவீன புத்தள நிர்மாணத்தின் தந்தையாகப் போற்றப்படுபவரும் அவர்தான். புத்தளம் பற்றிய கனவுகள் வரலாறுகள் ஒன்று கலந்த பின்னணியில் முபாரக்கின் இளமைக் காலம் கழிந்துள்ளது.
.
1970 களில் இருந்து அவரை எனக்குத் தெரியும் . புவாத் மொலவி மூலமாக கொழும்பில் முபாரக்கைத் தெரிந்து கொண்டேன். அவர் புவாத் மௌலவியின் உறவினர். புத்தளம் கல்வி, சிந்தனை , மார்க்க வரலாற்றில் மறக்க முடியாதவர் புவாத் மௌலவி. புத்தளத்தில் எனது பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்தில் அவர் வீடிருந்தது. புத்தளம் வரலாறு , இஸ்லாமிய வரலாறு பற்றி ஆங்கில தமிழ் வழியிலான பல தரவுகளும் நூல்களும் அவரிடம் இருந்தன.
.
மொடர் , காசிச் செட்டி பற்றி அவர் மூலமாக அறிந்து கொண்டேன். பிலிப் கே ஹிட்டியின் History of Arabs அவரிடமிருந்தது. அவர் ஒரு நவீன மௌலவி. மௌலவிமாரின் மாமூலான பழைமையான கருத்துக்களுக்கு அப்பால் நவீன ஷரியா விளக்கங்கங்களில் ஆர்வம் காட்டினார் . நல்ல தமிழறிவுள்ளவர். பால பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றினார் என்று தெரியும். இலக்கியமும் பேசுவார்.
.
வீட்டுக்குப் போனால் நீண்ட உரையாடல் , நூல்கள் கித்தாபுகளில் ஆதாரங்கள் தேடல் ,ஊர் வரலாறுகள் பேசுதல் . இஸ்லாத்தை நவீன நோக்கில் பார்க்கக் கூடிய குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் , நேரம் நீளும் .சாப்பாடும் அங்குதான். அவரது மனைவி உம்முல் பரீதா எனக்கு மாமி முறை. விருந்தினர் உபசரிப்பில் அந்தவீட்டில் ஒரு சிறப்பிருந்தது. முபாரக்கைச் சூழ இப்படிப்பல சாதகமான சில தொடர்புகள் இருந்தன.
.
புத்தளம் எம் பி நெய்னாமரைக்கார் உதவி நிதி திட்டமிடல் அமைச்சராக இருந்தபோது புத்தளம் மாவட்ட அபிவிருத்தி விடயங்களுக்கு முபாறக் ஆலோசனையாளராகவோ பொறுப்பாளராகவோ இருந்தார். இது ஒரு முக்கியமான பதவி. இது ஆரம்பமாக இருக்க வேண்டும். ஒரு நீண்ட இடை வெளிக்குப் பின்னர் 2010 அளவில் , முபாரக்கை புத்தளத்தில் மீண்டும் சந்தித்த போது , முபாரக் மழு சுற்றாடலியல் செயற்பாட்டளாரகி இருந்தார்.
.
நுரைச்சோலை அனல் மின்நிலைய எதிர்ப்பு அனல் பறந்த நேரத்தில் புத்தளம் கலாசார மண்டபப் பொதுக்கூட்டத்தில் அவரைச் சந்திக்கிறேன்.
.
WAK