பொன்விழாக் கொண்டாட்ட உதைபந்தாட்ட தொடரில் ‘CR7 Brothers’ சம்பியன்

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக 2k14,2k15,2k16 O/level பழைய மாணவர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு Black fire அமைப்பின் உதவியோடு அணிக்கு எழுவர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம் தலைமையில் நடைபெற்றது.

இரு தினங்களாக நடைபெற்ற போட்டிகளில் புத்தளம் நகரின் பல பகுதிகளில் இருந்தும் வெளிப்பகுதிகளில் இருந்தும் சுமார் 20 அணிகள் பங்குபற்றின.

அண்மையில் ஆரம்பகட்ட போட்டிகள் இடம்பெற்றதோடு, நேற்றைய முன்தினம் (18) அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ஏராளனமான உதைபந்தாட்ட இரசிகர்களின் முன்னே கோலாகலமாக நடைபெற்றன. போட்டி நிகழ்வுகளின் பிரதம அதிதியாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, விஷேட அதிதிகளாக நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன், பர்வின் ராஜா, ஆரிப் சிஹான் மற்றும் புத்தளம் பிரதேசசபை உறுப்பினர் ரிபாய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இறுதிப் போட்டியில் CR7 Brothers மற்றும் Main City அணிகள் மோதிக்கொண்டு பலப்பரீடசை நடத்தியதோடு
விறுவிறுப்பான இப்போட்டியை CR7 Brothers அணி 4:2 எனும் கோல்கணக்கில் தன்வசப்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

வெற்றிபெற்ற சம்பியன் அணிக்கு (CR7 Brothers) வெற்றிக் கிண்ணமும் 30,000 ரூபா பணப் பரிசும்
இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு (Main City) கிண்ணமும் 15,000 ரூபா பணப் பரிசும் அதிதிகளால் வழங்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக சுற்றுப்போட்டியின் சிறந்த வீரர், சிறந்த பேற்றுக்காப்பாளர், சிறந்த இளைஞர் அணி, சிறந்த இளம் வீரர் மற்றும் சிறந்த கோல் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

போட்டி நிகழ்வுகளின் மூலம் பெறப்பட்ட சுமார் 80,000 ரூபா நிதி பழைய மாணவர் அமைப்புக்களினால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

WAK