மருத்துவச்சி (மருத்துவ தாதியர்)

(M.S. அப்பாஸ்)

நான் எனது பக்கத்தில் எதையாவது எழுதினால், அதன் பின்னணி வரலாற்றுத் தொடர்புடையதாக இருக்குமானல் அது பதியப்பட்டு கொஞ்ச நேரத்தில் ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஸன்ஹிர் அவர்களின் தொலைபேசி அழைப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம். நமது சமகால வரலாற்று ஆய்வாளர், வரலாற்று ஆர்வலருக்கு இந்த புத்தளம் மண்ணின் வரலாறு பற்றி அளவு கடந்த ஆர்வம். கடைசியாக எனது ‘நகர சபை இல்லங்கள் – U.C. Tenements – பற்றி எழுதிய கையோடு அவரது அழைப்பும் வந்தது. வரலாற்றோடு தொடர்புடைய பலதையும் பத்தையம் பேசினோம். எமது உரையாடல் ‘மருத்துவச்சிமார்’ பற்றித் திசை திரும்பியது. இது வரையில் நான் தொடாத ஒரு அங்கம். அவர்களின் படங்கள் இல்லாத குறையும் அக்குறைக்கு முக்கிய காணரமாக இருந்தது. இருந்தாலும் ஒரு சின்ன முயற்சி.‘மருத்துவச்சிமார்’ (மருத்துவ தாதியர்) என்ற பாத்திரங்கள் அந்தக் காலத்திலே எவ்வளவு பெரிய பங்களிப்பை சமுகத்துக்குச் செய்துள்ளன என்பதெல்லாம் சமுகம் மறந்து போய் நெடுநாளாகிவிட்டது. அந்தக் காலத்திலே பிள்ளைப்பேறுக்காக யாரும் வைத்தியர்களையும், வைத்தியசாலைகளையும் நாடுவதே இல்லை. அவர்கள் பெரும்பாலும் மருத்துவச்சிமார் என்னும் ஆரம்ப நிலை மகப்பேற்று மருத்துவ உதவியாளர்களிலேயே தங்கியிருந்தார்கள்.

எனது பிறப்பின் பிண்னணயில் ‘திருமதி தியடோரா அமரசிங்ஹ என்ற மருத்துவச்சிதான் இருந்திருக்கிறார். இள நீல கரையுள்ள வெள்ளைக் கதர் சாரி அணிந்து கையில் ஒரு பதிவுப் புத்தகம், ஒரு சின்னத் தகரப் பெட்டி, இரத்த அழுத்தக் கணிப்புக் கருவி, ஒரு சிறிய குடை ஆகியவற்றுடன் 24 மணித்தியாளமும் சேவைக்கெனக் காத்திருந்த ஆத்மாக்கள்தான் இந்த மருத்துவச்சிமார்.

எனது பிறப்போடு சம்பந்தப்பட்ட திருமதி தியடோரா அமரசிங்ஹ அவர்களிலிருந்து தொடங்கி திருமதி மேரி, திருமதி மணுவேல், திருமதி கனகசபை என்று முடிவடைகிறது அவர்களது சேவை. பெரும்பாலும் எனது கணக்குப்படி. தவறுகளும் இருக்கலாம்.

தொடக்கத்தில் 24 மணித்தியாள சேவகிகள் என தொடக்கத்தில் குறிப்பிட்டேன். உண்மையிலேயே அவர்கள் மிகப் பெரிய தொண்டர்கள். கார்கள், முச்சக்கர வண்டிகள் அதிகம் ஏன் மோட்டார் சைக்கிள்கள் கூட அதிகம் புழக்கத்தில் இல்லாத, கைத்தொலைபேசிகள் எந்தவொரு கண்டுபிடிப்பாளரின் கற்பனையில் கூட இல்லாத காலம் அது. பிள்ளைப் பிறப்புக்கள் வீடுகளிலேயே நிகழ்ந்ததால் ஒரு கற்பினிப் பெண்ணுக்கு எந்த நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டாலும் வீட்டார் முதலில் வீடுதேடி ஓடுவது மருத்துவச்சியைத்தான். அது ஒரு மாலை நேரமாகட்டும், முன்னந்தி நேரமாக இருக்கட்டும், நடுநிசியாக இருக்கட்டும் தனது வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டவுடன் எழுந்த அவரச அவரசமாக அவரக்ளின் சீருடையான கதர் சாரியைச் சுற்றிக் கொண்டு பதிவுப் புத்தகம், சின்னத் தகரப் பெட்டி, இரத்த அழுத்த பரிசீலனைக் கருவி, குடை சகிதம் புரப்பட்டுவிடுவார்கள். எல்லா நேரமும் கால்நடைதான்.

பிரசவ வீட்டில் விடிய விடிய பிரவச வலியால் துடிக்கும் பெண்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்து பிள்ளைப்பேறை வெற்றிகரமாகமுடித்து, தொப்புள் கொடி வெட்டி, மருந்திட்டு, பிள்ளையைத் கழுவித் துப்புரவு செய்து, புதிய ஆடை அணிவித்து, சாம்பிராணி பிடித்து, தலைக்கு ஓடிக்கொலோன் தடவி என ஒன்றன் பின் ஒன்றாக அத்தனையையும் முழுமையாக செய்து முடித்த துணிவோடு, வீட்டார் அவர்களுக்குக் கொடுக்கும் கொஞ்ஞம் அரசி, தேங்காய், முட்டைகள், சிறு தொகைப் பணம் ஆகியவற்றை எடுத்துக்குகொண்டு விடை பெறுவார்கள். அதன் பின் கிரமமாக பிரசவக்கப்பட்ட வீடுகளுக்குப் போய் தாய் சேய் நலன் அவதானித்து ஆவன செய்வார்கள்.

திருமதி தியடோரா அமர சிங்ஹ ஒரு சிங்களப் பெண். ஆனாலும் புத்தளத்து குசினித் தமிழை மிகக் கச்சிதமாகப் பேசவார். கொஞ்ஞம் பருத்த உருவம். குரலில் இனிமை. தியடோரா அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு மருத்துவச்சிமாரையும் மனத் திரைக்குக் கொண்டு வருகிறேன்.

 திருமதி கனகசபை

திருமதி மேரி, திருமதி மணுவேல், திருமதி கனகசபை………… அதன் பிறகு மருத்துவச்சி முறைமையை கைவிட்டுவிட்டார்கள். டாக்டர் இல்லாஸ் அவர்களும், டாக்டர் ஹபீல் அவர்களும் தத்தமது சொந்த மகப்பேற்று வசதிகளை தத்தமது மருந்தகங்களில் ஆரம்பித்த பின்னர் பிள்ளைப் பேறுகள் ஒருபோதும் மருத்துவச்சிமாரின் கையில் தங்கியிருக்கவில்லை. எனவே நானறிந்த வகையில் கடைசியாக மருத்துவச்சியாக இருந்த திருமதி கனகசபை அவர்கள் டாக்டர் ஹபீல் அவர்களின் மருத்துவமனையில் தங்கி, தனது உதவி மருத்துவப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். டாக்கடர் ஹபீல் அவர்கள் திருமதி கனகசபைக்கு தனது மருத்துவ மனையின் பின் பகுதியில் இருப்பிட வசதி செய்து கொடுத்திருந்தார்.

இந்த மருத்துவச்சிமார் புத்தளம் நகர சபையால், பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டார்கள். நானறிய முதலாவது நகர சபை மருத்துவச்சி அல்லது மருத்துவமாது, அல்லது Mid-Wife என அழைக்கப்பட்ட இவர்களுக்கு முன்னர் இந்தப் பணிகளை யார் செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதுபற்றி எனது மனைவியின் மூத்த சகோதரியை விசாரித்தேன். ‘ஜஸநேனை’ என்ற பெயரைப் பிரயோகித்தார். கொஞ்சம் வயதுபோன பெண்களை அல்லது தாயின் தாயை ‘ கண்ணா’ என்று சுட்டுவது புத்தளத்து தொண்டு தொட்டு நிலவிய பாரம்பரியம். அந்த வகையில் இந்த ‘ நேனை’ என்ற சொல்லை மலே சமுகத்து மூத்த பெண்களுக்குச் சுட்டுவது வழக்கம். அந்த வகையைச் சேரந்ததுதான் ‘ஜஸனேனை’ என்ற இந்தப் பதமும்.

அந்த மூத்த தாய் முழு நேர சமுகத் தொண்டை முழுமையாக இலவசமாக வழங்கியவர். ஊர் அவர்களை மறந்து போனது வேதனைதான். ‘ஜெஸநேனை’ ஒரு பயிற்றப்பட்ட மருத்துவ உதவியாளர் அல்ல. பெரிய நிபுணத்துவமும் அவர்களிடம் இருக்கவில்லை. நீண்ட அனுவம் மாத்திரம்தான். அவர்கள் கொடுக்கும் மருந்தும் வீட்டு மருந்துகள்தான். அந்தக் காலத்திலே ஒரு பெண்ணுக்கு திருணமான பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டுக்குக் கொண்டு போகும் சீர் வரிசையில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்ற ஒரு அம்சமும் இருக்கும். ‘அஞ்சறாப் பொட்டி’ என்றுதான் அப்போது சொல்வார்கள். அதிலே பிள்ளைப் பேற்றுடன் சம்பந்தப்பட்ட நாட்டு வைத்திய மூலிகைள் இருக்கும். திருமணமான கையோடு அடுத்த நடவடிக்கை பிள்ளைப் பேறுதானே எனவேதான் இந்த ‘அஞ்சாறாப் பெட்டி விவகாரம்’ ‘ஜெஸநேனை’ தமது ஆரம்ப பிள்ளைப்பேற்று மருந்துகளை இங்கிருந்துதான் பெறுவார்கள்.

இந்த மருத்துவச்சிமார் அல்லது மருத்துவமாது என்ற முறைகள் பழமையானது, அபாயம் நிறைந்தது என்பதால் காலப் போக்கில் அவர்களது பணியை குடும்ப சுகாதார சேவகிகள் அல்லது Family Health Workers என மாற்றப்பட்டது. புள்ளி விபரங்களை சேகரிப்பது போன்ற கடமைகளுக்காக அவர்களின் சேவை பெறப்பட்டது என நினைக்கிறேன்.

எனது ஆக்கத்துக்கு பொருத்தமாக கிடைக்கக் கூடியதான படங்களை உபயோகித்தால்தான் பொருத்தமாக இருக்கும். அதற்கு அப்பால் பெண்கள் யாராவது இதை எழுதினால்தான் இசகு பிசகில்லாது எழுதலாம். என்ன செய்வது ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாம். ஏன்னால் முடிந்த அளவு எழுதினேன். யாரியடமாவது மேலே குறிப்பிட்ட மருத்துவச்சிமாரின் படங்கள் இருக்குமானால் தயவு செய்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்.

(புகைப்பட உதவி மகள் யசோ)

அப்பாஸ் அவர்களின் அனுமதியுடன் பின்வரும் தகவல் சேர்க்கப்படுகின்றது

Naina Mohamed Lebbe, father of clerk Abbas and his grand son Nizam (Teacher)

நண்ணிமா கண்ணா என்பவரும் புத்தளத்தில் மிக மூத்த மருத்துவ தாதியருள் ஒருவர். கிளாக் அப்பாஸ் அவர்களின் வாப்பாவின், வாப்பாவின் தயார் அவர். (கிளாக் அப்பாஸ் பிறந்தது 1914). தைக்கா பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் ராணி மிஸ் வீடு நண்ணிமா கண்ணா வளவு என்று அழைக்கப்பட்டது. நண்ணிமா கண்ணா வீடு அங்கு அமைந்திருந்தது. ஜின் வாசலாத் (உச்சாரணம்) செய்து அதன் மூலம் மைக்குப்பி பெற்றவராம் அவர். வீடுகளுக்கு பிள்ளை பேற்றுக்காக மை குப்பியுடன் சென்று வீட்டு வாசலில் வைத்து ஒரு கனைப்பு கனைப்பாராம். உடனே சுகப்பிரசவம் நடக்குமாம். ஜின்னுக்கும் பிள்ளைபேறுசெய்துள்ளார். அதற்கு அடையாளமாக ஜின்னின் சின்னி விரலை வெட்டி எடுத்து ஊருக்கு காண்பித்தார் என்ற அவர் பற்றிய பழைய புராண கதைகளும் உண்டு.

தகவல்: ஹனீனா மிஸ் (கிளாக் அப்பாஸ் அவர்களின் புதல்வி)

/Zanhir