முகவரியை தொலைத்த புத்தளம்..!

நான் புத்தளத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாணந்துறையில் இருந்து எழுதுகிறேன்…

நான் புத்தளத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாணந்துறையில் இருந்து எழுதுகிறேன்…

இங்கு ஒரு பழமொழி கூறுவார்கள் “எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே” என்று அத்தகையதொரு பழமொழியினை மறக்கடிக்கச் செய்து “எத்தளம் போகாவிட்டாலும் புத்தளத்தை போய் பார்” என்று கூறுமளவுக்கு புத்தளத்தின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பினையே தலைகீழாக மாற்றியமைத்த ஒரு மாமனிதனைப் பற்றி எழுதுகிறேன்.

அவர்தான் “கே.ஏ.பி.” என பலராலும் அழைக்கப்படும் புத்தளத்தின் முகவரி, அதன் ஆளுமை, அதன் காவலன், நவீன புத்தளத்தை செதுக்கிய சிற்பி…

நான் எஸ்.எச்.எம். நவ்பல். 1980களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சன்ஹீர் ஆசிரியரைச் சந்தித்து நாங்கள் நண்பர்களானது முதல், கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எனக்கும் புத்தளத்துக்கும் இடையிலானதொரு  உணர்வுபூர்வமான தொடர்பு நிலவுகின்றது.

அன்று நான் கண்ட புத்தளத்திற்கும் இன்று நான் காணுகின்ற புத்தளத்திற்கும் இடையில் காணப்படும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடே பாயிஸ் என்ற மாமனிதனைப் பற்றி எழுதத்தூண்டியது.

பாயிஸ் என்ற ஒரு தனி மனிதன் புத்தளத்திற்குச் செய்தவை என்ன?  அவரின் சாதனைகள், பிறப்பு, வளர்ப்பு, அவரது துணிச்சல்… இவை பற்றி நான் எழுத வரவில்லை.

இன்றைய சமூக  வலைத்தளங்களில் சோஷியல் மீடியா அதைப்பற்றியே கதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் புத்தளம் சமூகம் இம்மா மனிதனை எவ்வாறு கையாண்டது அல்லது எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பதிலேயே எனக்கு ஒரு பெரிய ஆதங்கம்  ஏற்படுகின்றது .

ஒரு பிரதி அமைச்சராக தேசியப்பட்டியலில் அல்லது ஒரு நகர சபை முதல்வராக இருந்து கொண்டு இம்மனிதன் சாதித்த இமாலய சாதனைகளை விஞ்ஞான கல்வித்திட்டம், நீர் வழங்கும் திட்டம்… என மாற்று தலைமைகள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு பார்த்தபோது இவரை ஒரு பாராளுமன்ற அமைச்சராக்கினால்  என்னவெல்லாம் சாதிப்பார் என்று புத்தளம் சமூகம் யோசித்ததா? அப்படியே யோசித்து இருந்தால் நான்கு தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட பாயிஸ் நான்கு தடவைகளும் தோல்வியுற்று இருப்பாரா என்று சிந்தித்தீர்களா? எவ்வாறாயினும், 2020 பாராளுமன்றத் தேர்தலில் பாயிசின் தோல்வி என்பது புத்தளம் சமூகம் விட்ட ஒரு வரலாற்றுத் தவறு (Historical Mistake) என்பேன்.

இதற்கு புத்தள சமூகத்தை மாத்திரம் நான் குறை கூறவில்லை முஸ்லீம் சமூகத்தின் மிகப்பெரிய பலவீனம் என்று கூறுவேன். ஏனென்றால் நான் முஸ்லிம்கள் 90% கொள்கைக்காக அரசியல் செய்யவில்லை – அவர்கள் கட்சிக்காக அல்லது தலைமைத்துவதுக்காக அரசியல் செய்பவர்கள். இதனாலேயே இன்று முழுச் சமூகமும் நாதியற்றதாக கிடக்கின்றது. எம் சமூகத்தின் இந்த பழமைவாத சிந்தனை மாறாதவரை இன்னும் ஆயிரமாயிரம் பாயிஸ்கள் உருவெடுத்தாலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

எப்படியோ ஒரு ஆளுமை சமாதி ஆக்கப்பட்டுவிட்டது. சமூகத்தின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் 52 வயதிலேயே போய் சேர்ந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலியும் இரங்கள் உரையுமாகவே காணப்படுகின்றது. எனக்கென்னமோ இதுவெல்லாம் “கண் கெட்ட பின்னர் சூரிய வணக்கம்” போல தெரிகின்றது. இம்மாமனிதனின் இழப்பிற்கு முழு சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

அறிஞர் பெர்னார்ட்ஷா சொல்கின்றார் “நீ சாவதற்கு முன்னர் நீ வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையாவது விட்டுச்செல். என்று. தலைவர் பாயிஸ் புத்தளம் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை விட்டுச் சென்றுள்ளார்…!

சமூகமே இனி அந்த மாமனிதனுக்கு எதனை எடுத்துச் செல்லப் போகின்றாய்…?