முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் The Muslim Progressive Association

முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம்

The Muslim Progressive Association

இஸட். ஏ. ஸன்ஹிர்

 

புத்தளம் நகரில் சமூக ஈடுபாடுகொண்ட சிலரால் 1933 இல் அமைக்கப்பட்டதே முஸ்லிம் அபிவிருத்திச் சங்கமாகும். இச்சங்கத்தின் பிரமாணம் “ஊக்கமது கைவிடேல்” என்பதாகும். ஒரு அமைப்பு எவ்வாறு இயங்கவேண்டும் என்பதற்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டு நீண்டகாலம் இயங்கிய அமைப்பு என இதனைக் கூறலாம். இதில் பிரதான பங்கேற்றவர் சங்கத்தின் செயலாளர் N. அப்பாஸ் மரைக்கார் (கிளாக் அப்பாஸ்) ஆவார்.

N. Abbas Maraikar Clerk Abbas)

முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு சமூகப்பணிகளிலும் தடம்பதித்திருந்தது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்புடன் ஈடுபட்ட ஒரு சங்கம் இது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அன்றய காலகட்டத்தில் அது அனைத்துத் துறைகளிலும் திட்டமிட்டு செயலாற்றியுள்ளது. போஷகர்கள்,பிரதான அதிகார சபை, கல்விப்பகுதி, சங்கீதப்பகுதி, விளையாட்டுப்பகுதி, கணக்குப்பரிசோதகர் என்ற அடிப்படியில் அது கட்டமைக்கப்பட்டிருந்தது.

1939 காலப்பகுதியில் சே. அசன் குத்தூஸ், சி.அ.க. ஹமீதுஹுசைன் மரைக்கார் (ஹாஜியார், காதி – Head Moor Man,), சி.அ.மு. ஹனிபா மரைக்கார், சி.மீ.அ. அகமது ஜலால்தீன் மரைக்கார் (Member of U.D.C.), H.S. இஸ்மாயில் (Proctor .S.C. & N.P. Chairman U.D.C.) M.C.M. முஹம்மது நெய்னாமரைக்கார் ஆகியோர் முஸ்லிம் அபிவிருத்திச் சங்க போஷகர்களாக இருந்துள்ளனர்.

S. Asan Kudoos

 

Hameethu Husain Maraikar Head Moorman (Father of Salih Maraikar)

 

Haniffa maraikar (Father of M.H.M. Naina Maraikar)

 

Jalaaldeen Maraikar

 

H.S. Ismail
H.S. Ismail

 

MCM Mohamed Neina Maraikar (Sella Maraikar)

முஸ்லிம் அபிவிருத்திச் சங்க பிரதான அதிகார சபை அங்கத்தவர்கள் பின்வருவோராவர். எம்.எம்.எச். ஹமீது ஹுசைன் (சபைத் தலைவர்), மு.இ.மு. அப்துல் ஜெஃபர் (உப சபைத் தலைவர்), நெ. அப்பாஸ் மரைக்கார், எம். செய்யது முஹம்மது (கெளரவ இணைக்காரியதரிசிகள்) ஏ.எம். சேகு முகையதீன் (பொக்கிசாதிபர் – பொருளாளர்), சி.முஹம்மது இப்ராஹிம், நூ. முஹம்மது அப்துல் கபூர், ஏ.கே. அபூஹனிபா, மு. அசன் நெய்னாபிள்ளை, எஸ்.கே.எஸ். அப்துல் காதர், பி.அ.அப்துஸ் ஸமத், எம்.ஐ.எம். ஹுசைன், பி.அ.சுல்தான் முகம்மது.

கல்விப்பகுதி அதிகார சபை அங்கத்தவர்கள் M.O.M. தாஹிர் (Proctor .S.C. & N.P. (கல்விப்பகுதி அதிகார சபைத் தலைவர்), ஏ.கே. அபூஹனீபா (உப சபைத் தலைவர்),நூ. முஹம்மது அப்துல் கபூர் (காரியதரிசி), மு. அசன்நெய்னாபிள்ளை ( உப காரியதரிசி), எச்.எம். செய்னுல் ஆப்தீன் (பத்திராதிபர்), C.T.M. இபுறாகிம், யூ.மு. முஹம்மது ஹனிபா ஆகியோராவர்.

இச் சங்கத்தின் சங்கீதப் பகுதி அதிகார சபை அங்கத்தவர்களாக திருவாளர்கள் என்.எஸ். சேகுமீரான் லெவ்வை ஆலிம் (சபைத் தலைவர்), ஏ.எம். தையான் (உப சபைத் தலைவர்), ஏ.ஜே.எம். கரீம் (காரியதரிசி), எம்.ஜே. முஹம்மது சுலைமான் ( உப காரியதரிசி), T.T. சாபார், எம். சம்சுத்தீன், ஏ.கே. அபூஹனிபா ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

விளையாட்டுப் பகுதி அதிகார சபை அங்கத்தவர்களாக மு. அசன்நெய்னாபிள்ளை (சபைத் தலைவர்), எம்.ஐ.எம். ஹுசைன், (உப சபைத் தலைவர்), முஹம்மது எச்.சாபார் (காரியதரிசி), ஏ.எச். அப்பாஸ் ( உப காரியதரிசி), நூ. முஹம்மது அப்துல் கபூர், மு. அ, செய்னுல் ஆப்தீன், செ. முஹம்மது தமீம் ஆகியோர் செயலாற்றினர்.

கனக்குப் பரிசோதகராக கணம் செ. முஹம்மது தமீம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

 

முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் புத்தளத்தில் மீலாத் விழா நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்துவதில் ஆரம்ப காலங்களில் பெரும்பங்காற்றியுள்ளது. P.M. மஹ்மூத், என். அப்பாஸ் மரைக்கார், எஸ்.ஏ. அசன்குத்தூஸ் (பெரியார்) , எம்.ஐ.எம். ஜெஹுபர் (அச்சகம்), எ. அசன்நெய்னா மரைக்கார், பி.அ. சுல்தான் முஹம்மது, ஏ.கே. அபூஹனீபா போன்ற முஸ்லிம் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதற்குப் பங்காற்றியோருள் குறிப்பிடத்தக்கோராவர்.  1938 இல் மீலாத் விழாவையொட்டி  வெளியிடப்பட்ட ‘திரு நபி சரிதையின் நறுமலர் உரைகள்’ என்ற சிறு நூலின் முகவுரை போஷகர் சேகு அலி அசன் குத்தூஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மீலாத் விழாவை முன்னிட்டு 1949 இல் ‘எழுச்சி மலர்’ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது,  புத்தளம் முஸ்லிம் அபிவிருத்தி சங்க ஆயுட்கால செயலாளர் என்.அப்பாஸ் மரைக்கார் அவர்களின் முயற்சியாலும் பொருளுதவியாலும் அச்சிட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முஸ்லிம் அபிவிருத்திச் சங்கத்துக்காக தயாரிக்கப்பட்ட அமைப்புத்திட்டம் ஒன்று 17.11.1951  இல் ‘அதிகார மகா சபையில்’ முதன்முதலாக வாசிக்கப்பட்டது. 27.01.1954 இல் கூட்டப்பட்ட மகா சபையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வமைப்புத்திட்டம் உப பிரிவுகளுடன் கூடிய 21 பிரதான பிரிவுகளைக்கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் உறுப்புரிமை பெறக்கூடியவகையில் அமைக்கப்பட்டிருந்த இவ்வமைப்புத்திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரும் குறைந்தோரும் உறுப்புரிமை பெரும் வகையில் A, B எனப்பிரிக்கப்பட்டிருந்தனர். B பிரிவினர் பெற்றோரின் சம்மதத்துடன் உறுப்புரிமை பெறவேண்டும். அமைப்புத்திட்டத்தில்  செயற்குழு, உறுப்பினர்கள் அனைவரினதும் பொறுப்புக்கள் செயற்பாடுகள் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.

அமைப்புத்திட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. மார்க்க அறிவு புகட்டும் பள்ளிக்கூடம் (மத்ரஸா), உபந்நியாச சபை, சிறுவர்களின் உரையாடல் மன்றம், வாசிகசாலை என்பனவே அவையாகும். சங்க அமைப்புத்திட்டதில் காரியசபை, பொதுச்சபை,வருடாந்த மகாசபை என்பன அடங்கியிருந்தன. வருடாந்த மகாசபை பிரதி வருடம் முஹர்ரம் மாதம் கூட்டப்படும்.

முஸ்லிம் அபிவிருத்திச் சங்க அமைப்புத்திட்டதில் அதன் கொள்கைகளும் நோக்கங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான மார்க்க போதனையும் எழுத்தறிவும், சமூகத்தின் கல்வி சமய முன்னேற்றம், வாசிகசாலை அமைத்தல்,முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துதல், முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்கள் ஹசன் ஹுசைன் (ரலி) ஆகியோர் பெயரில் மெளலூது ஓதுதல், சமூக சேவை, அரசியலில் ஈடுபடாதிருத்தல் போன்றவை   பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகளை துணைச் சங்கங்கள் மூலம் அயற்கிராமங்களிலும் செயற்படுதல் பற்றியும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஹர்ரம் மெளலூதுக்கு பொறுப்பாக அப்பாஸ் மரைக்காரே தொடர்ந்தும் இருந்துவந்துள்ளார்.

27.01.1954 இல் மெளலவி சேகு மீரா லெவ்வை அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான மகாசபைக்  கூட்டத்தில், தலைவராக கங்காணிக்குளம் வாடி மரைக்காராக இருந்த எஸ்.எம். ஜலால்தீன் மரைக்கார்  அவர்களும் செயலாளராக அப்பாஸ் மரைக்கார் அவர்களும் பொருட் பாதுகாவலராக (பொருளாளர்) எம். எம். எச். ஹமீத் ஹுசைன் (Hameed Husain and Co.) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். உப தலைவர் எம். ஐ. எம். ஜகுபர் ஆவர். இவர் அக்காலப்பகுதியில் அச்சகம் நடத்தியவர். அவரின் அச்சகம் இரண்டாம் குறுக்குத்தெருவில் தைக்காப்பள்ளிக்கு முன்பாக அமைந்திருந்தது. கனக்குப்பரிசோதகராக  ஏ.எம்.எம். ஹனீபா (அதிபர், ஷாஜஹான் ஆசிரியரின் சகோதரர்) நியமிக்கப்பட்டார்.

S.M. Jalaldeen Maraikar

சங்கத்தின் சகல நடவடிக்கைகளும் எழுத்து மூலம் இடம்பெற்றமை இச்சங்கத்தின் சிறப்பம்சமாகும்.  அதற்காக அச்சிடப்பட்ட பல படிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சகல கொடுக்கல் வாங்கல்களும் பற்றுசீட்டுக்களுடன் உரிய முறையில் மிக சிறப்பாகப் பேணப்பட்டும் வந்துள்ளன. சங்க நடவடிக்கைகளுக்காக மாத, வருட சந்தாப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 1953 இல் மாதாந்த சந்தாவாக மன்னார் வீதியைச் சேர்ந்த P.I.S. மஹ்மூத் ரூபா 5.00 கொடுத்துள்ளார். 01.04.1956 இல் மத்ரஸா வரவு 30.50 சதமாகும்.

புத்தளம் இரண்டாம் குறுக்குத்தெருவில் தைக்காப்பள்ளி என பொதுமக்களால் அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கட்டிடம் இச்சங்கத்தால் 1940 காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். இதற்கு “மதுரஸத்துல் ஹஸனைனி” எனப் பெயரிடப்பட்டது.  இக்கட்டிடத்தில் குர்ஆன் மத்ரஸா தொடர்ச்சியாக நடந்துவந்துள்ளது. ஆரம்பகாலத்தில் மாணவர்களுக்கு குர்ஆன்  ஓதிக்கொடுப்பதற்காக மாப்பிள்ளைத் தம்பி செய்னுல் ஆப்தீன் (S.A. நெய்னாமரைக்கார் ஆசிரியரின் தந்தை) 1954 இல் நியமிக்கப்பட்டார். பின்னர் 05.05.1964 இல் இடம்பெற்ற நிருவாக சபைக்கூட்ட தீர்மானத்தின் பிரகாரம் செய்யது அஹ்மது (இஷாம் மரைக்காரின் அப்பா) இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

Madrasathul Hasanain

 

Seinul Abdeen (Muallim)

 

Seyyathu Ahmed (Muallim)

குர்ஆன் மத்ரஸாவில் பயிலும் மாணவர்கள் முறையாகப்பற்றுவிக்கப்படல் வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பாடத்திட்டம் ஒன்றை அமைப்பதற்காக ஏழுபேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, 29.05.1964 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு மதுரஸத்துல் ஹஸனைனி மண்டபத்தில் இக்குழு கூடி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. M.I.M. அப்துல் ஜெஹுபர் (அச்சகம்), மு. அசன் நெய்னாப்பிள்ளை (Attendance officer வரவு அதிகாரி), N.T. அப்துற் றஹீம் மெளலவி, N.I. அப்துல் ஜப்பார் மெளலவி, N. செய்யது அஹ்மது (பள்ளிமாமா), N. அப்பாஸ் மரைக்கார் (செயலாளர்), A.M.M. ஹனிபா (ஆசிரியர்) ஆகியோர் இக்குழுவில் அடங்குவர்.

Moulavi Abdul Jabbar

கூட்டத்தில் பேசவேண்டிய விடயங்கள்  ஆரம்பத்தில் செயற்குழுவுக்கு எழுத்துமூலம் சமர்பிக்கப்படல் வேண்டும். புத்தளத்தில் அப்போது இயங்கிய சில அமைப்புகளின் கூட்டங்களும் செயற்குழுவின் அனுமதியுடன்  மதுரஸத்துல் ஹஸனைனி கட்டிடத்தில் நடைபெற்றன. அதேவேளை சில வேண்டுகோள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.  வாராந்தம்  ‘சூபி மன்ஸில் ராத்திபு’ செய்வதற்கு 20.03.1955 இல் அனுமதி கேட்கப்பட்டபோது அதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசல்களே எனக்குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டது. 1953 ஜனவரி 01.02. ஆகிய தினங்களில் அல்  ஜம்மிய்யதுல் புர்கானிய்யா சங்கத்தின் வருடாந்த கூட்டத்தை இக்கட்டிடத்தில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

தைக்காப்பள்ளி கட்டிடத்தில்  மூன்று நாட்களுக்கு பறவைக் காய்ச்சலுக்கு  தடுப்பூசி ஏற்றுவதற்காக  28.01.1956 இல் புத்தளம் நகர பிதாவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தேவையெனில் மேலும் இரண்டு நாட்கள் பயன்படுத்துமாறும் வேண்டப்பட்டது.  24.11.1956 அன்று இடம்பெற்ற புத்தளம் நகரசபை தேர்தலுக்காக இப்பள்ளிக்கட்டிடத்தை பயன்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

அரபு இஸ்ரேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் நன்கொடை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதற்காக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் கலீபா அஸீஸ் முஸ்தபா அவர்கள் நன்றிதெரிவித்து 12.07.1967 இல் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். போதனா மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோது தமிழ் போதனா மொழியாகவும் இரண்டாம் மொழியாக சிங்களம் இருக்கவேண்டுமெனவும் சங்கம் தீர்மானித்து 1964 இல் சிலோன் முஸ்லிம் லீக்கிற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது.

 

 

தைக்காப்பள்ளிக்கு  (மதுரஸத்துல் ஹஸனைனி) முன்னால் இருந்த, ‘தைக்காதெரு மைதானம்’ என ஊரவர்களால் அழைக்கப்பட்ட மணல் நிறைந்த   மைதானத்தில் (தற்போதைய பானா கடை சந்தி வரை) தீமிதிப்பு, பஞ்சா எடுத்தல், போன்ற கலாசார நிகழ்க்கவுகள் நீண்டகாலம் இடம்பெற்றுள்ளன. பஞ்சா ஊர்வலம் முடிந்தபின்னர் தீமிதிப்பு நடைபெறும். அங்கு நின்ற புளியமரத்தின் அருகில் பத்தரை அடி  நீளமும் ஐந்தடி அகலமும் ஒன்றரை அடி ஆழமும் கொண்ட தீக்கிடங்கு அமைக்கப்பட்டு அதில் தீக்குளிக்க இறங்குவர். இஸ்லாத்தில் இவ்வாறான சடங்குகளுக்கு இடமில்லை என்றபோதும் அக்கால முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட பூ மிதிப்பு எனப்படும் தீமிதிப்பு ஆஷுரா மாதத்தில் இங்கு இடம்பெற்றது.

 

புத்தளத்தில் இடம்பெற்ற தீமிதிப்பு முஹம்மது நபியின் பேரர்களான   ஹசன், ஹுசைன் (ரழி) ஆகியோரின் ஞாபகார்த்த விழாவாக அமைந்திருந்தது. முஹர்ரம் தலைப்பிறை அன்று கொடியேற்றம் இடம்பெறும். தொடர்ந்து தினமும் அலி பாதுஷா நாடகம், அப்பாஸ் நாடகம், தையார் சுல்தான் நாடகம் என்பன மேடையேற்றப்படும் பத்தாம்  நாள் பஞ்சா, தீமிதிப்பு என்பன  இடம்பெறும். புழுதிவயல் கிராம வாரிசுகள் இதனை புத்தளத்தில் நடத்தியுள்ளனர். நாடகங்களை நடத்த புத்தளத்தில் உள்ளூர் நாடகக் குழுவினர் இருந்துள்ளனர். கலை நிகழ்ச்சிகளில் அப்பாஸ் மரைக்காருடைய தந்தை நெய்னா முகம்மது லெப்பை அவர்கள் பிரதான பங்கேற்றுள்ளார். அன்றைய முஹியத்தீன் தர்ஹாவுக்கும் (தற்போதைய பெரியபள்ளி வளவு)  மீரா லெப்பை பள்ளிவாசலுக்கும் (தற்போதைய மீலாத் மேடை வளவு) இடைப்பட்ட நிலத்திலும் தீமிதிப்பு இடம்பெற்றுள்ளது. ஆண்  பெண் கலப்பின்றி இவ்வைபவங்கள்  நடத்தப்பட்டன. முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபின்னர் அதன் செயலாளர் அப்பாஸ் மரைக்கார் அவர்கள் தைக்காப்பள்ளியில் இடம்பெற்ற ஆஸூரா மெளலூத் வைபவத்துக்கு தொடர்ந்தும் பொறுப்பாளராக இருந்துவந்துள்ளார்.

Naina Mohamed Lebbe and his grand son Nizam (Teacher)

தைக்கா தெரு மைதானத்தில் பொதுவாக எல்லாக்காலங்களிலும் இரவில் ஊரவர் கூடிக் கதைத்துக்கொண்டு பொழுதுபோக்குவர். எனவே இது ‘தர்பார் சந்தி ‘ எனவும் அழைக்கப்பட்டது. இங்கு கிளித்தட்டு, வாரோட்டம், சூ கொண்டோடுதல், மட்டி விடுதல், கிட்டியும் புள்ளும் பீச்சுதல், போளை அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுக்களிலும் ஊரவர் ஈடுபடுவதுடன் தெருவுக்குத் தெரு போட்டிகளும் இடம்பெறும். மட்டி விளையாட்டு செல்வந்தர்களின் தலைமையில் பலத்த போட்டியாகவும் கெளரவப்பிரச்சினைக்கு உரியதாகவும்  இடம்பெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்காக மந்திரவாதிகள் உதவிகள் பெறப்பட்டு களத்துக்கு வரவழைக்கப்படுவர். அடிதடிகளும் இடம்பெற்றுள்ளன. மகிளி (மகிடி)  எடுத்தல் என்ற தந்திர வித்தைகள்போட்டி  மந்திரவாதிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. ‘சேம் கோடு’ என்ற மாதிரி நீதிமன்றங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.  பெண்களும் தைக்கா தெரு மைதானத்தில் பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். கழற்சி, பசுவும் புலியும் பிடித்தல், தபால் வருது கியாகியா, பாண்டி (பல்லாங்குழி), சூ (கபடி) போன்றன அவற்றுள் சிலவாகும். ஆன் கலப்பின்றி இவை இடம்பெறுவது ஒரு சிறப்பம்சமாகும். பஞ்சா தீமிதிப்பு போன்ற சம்பிரதாயங்களை இருந்து மீட்பதர்க்கான ஒரு யுக்தியாக முஸ்லிம் அபிவிருத்திச் சங்கத்தினால்  கொண்டுவரப்பட்டதே ஆஷுரா ராத்திபு எனக்கூறப்படுகின்றது.

 

அண்மைக்காலங்களில் தைக்காபள்ளி கட்டிடம் சிறார்களுக்கு குர்ஆன் ஓதுவதற்குப் பயிற்றுவித்தல், முன்பள்ளி, சமூக நலன்கருதி தாய் சேய் நல நடவடிக்கைகள், தடுப்பூசி ஏற்றல், போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன்  பல்வேறு அமைப்புக்களினதும் கூட்டங்கள் நடத்துதல், தேர்தல் தேவைகள் போன்றவற்றுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும்  கிராமசேவையாளரின் தற்காலிக அலுவலகமாகவும் இதன் ஒரு பகுதி இன்று பயன்படுத்தப்படுகிறது.

 

புத்தளம் இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் அபிவிருத்திச் சங்கத்தினால் கட்டப்பட்டு “மதுரஸத்துல் ஹஸனைனி”  எனப் பெயரிடப்பட்ட தைக்காப்பள்ளியும் அதனுடன் இணைந்த நிலப்பரப்பும் காலாகாலமாக புத்தளம் முஸ்லிம்களின் சமய, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவற்றை நினைவுகூரும் வகையில் தொடர்ந்தும் அந்த இடம் பயன்படுத்தப்பட்டு எமது அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கப்படல் வேண்டும். புத்தளம் பிரதேச மண்ணின்  வரலாற்றின் ஆய்வு மையமாக அது மாறவேண்டும்.

Madrasathul Hasanain

புத்தளம் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுவரும் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றை சேகரித்துப் பாதுகாப்பதற்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானதாகும். அத்ததுடன் எமது இருப்பு, வரலாறு, கலை, கலாசார, பண்பாட்டு, மரபுரிமை அம்சங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள், புகைப்படங்கள், போன்றனவும் சேகரிக்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படல் வேண்டும். நம் முன்னோர் பயன்படுத்திய அரிய பொருட்கள், கலையம்சம் பொருந்திய  அனைத்தும் சேகரிக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் அவற்றை அறிந்துகொள்ளவும், ஆய்வு செய்யவும் பொருத்தமான இடமாக இது அமைந்துள்ளது. . அத்துடன் தற்போது இங்கு இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இவ்விடத்தில் நடைபெறவும் வேண்டும்.

 

இந்நோக்கங்களுக்காக சில மாடிகளைக் கொண்ட நவீன உபகரணங்களுடனான கட்டிடம்  ஒன்றை இவ்விடத்தில் அமைப்பதற்கான பல முயற்சிகள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்டுள்ளன. 2000 ஆம்  ஆண்டுக்கு முன்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பாக என்னால் முதன்முறையாக முன்மொழியப்பட்டது. பின்னர் 1999 இல் புத்தளத்தில் தேசிய மீலாத் விழா இடம்பெற்றபோது முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கவனத்திற்கும் கொண்டுவந்தேன். இலங்கையின் தலை சிறந்த கட்டிட கலைஞர்களிடமும்  எடுத்துரைக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று இதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.  எனினும் துரதிஷ்டவசமாக இக்கனவு இன்னும் நிறைவேறவில்லை.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை நிறைவேற்றிவைக்கப் பிரார்த்திக்கின்றேன்.

 

1955 காலப்பகுதியில் முஸ்லிம் அபிவிருத்திச் சங்கதில் இணைந்து செயற்பட்ட சிலரின் பெயர் விபரங்கள்:

 

1. எஸ்.எம். ஜலால்தீன் மரைக்கார் (தலைவர்)

 

 

2. என். அப்பாஸ் மரைக்கார் (செயலாளர்)

 

 

3. எம். எம். எச். ஹமீது ஹுசைன் ((Hameed Husain and Co.)

 

 

4. ஏ. எம். எம். ஹனிபா (கட்டுரை ஆசிரியரின் தாய் மாமா)

 

 

5. எம்.ஐ.எம். ஜெஹுபர் (அச்சகம்)

 

 

 6. எம்.எஸ். ஆப்தீன்       (http://puttalamonline.com/2016-02-20/puttalam-uncategorized/100350/)

 

 

 7. ஏ.எம்.எஸ். இப்ராஹிம்

 

 

8. ஏ. எம். ஐ. நைனாமரைக்கார் (அதிபர், நிஹ்ரீரின் தந்தை)

 

 

9. ஏ.கே. ஜெஹுபர் (அதிபர், ஸாஹிரா கல்லூரி)

 

 

10. ஏ .என்.எம். ஷாஜஹான் (கட்டுரை ஆசிரியரின் தாய் மாமா)

.

.

11. எஸ்.அசன் குத்தூஸ் (சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் பூட்டி அப்பா)

 

 

12. எச். எம். சேஹுலாப்தீன் (அதிபர், ஸாஹிரா பாலர் பிரிவு)

 

 

13. எம்.ஏ.எம். செல்லமரைக்கார்

 

 

14. என்.பி. உவைஸ் (ஆசிரியர், சிலாபத்தில் திருமணம் செய்தவர்)

 

15. ஏ.சி. செய்கு ஜுனைத்

.

.

16. எச்.எம். இஸ்மாயில் (வர்த்தகர், பல் வைத்தியர் அர்ஷத் அப்பா)

 

 

17. மெளலவி அப்துற் றஹீம்

 

 

 18. பி.அ. சுல்தான் முஹம்மது (பொறியியலாளர் ஜிப்ரி அப்பா, மான் முடுக்கு, மான் வளர்த்தவர் )

.

19. பி.எம். மஹ்மூது (Faiza Trading Co.)

 

 

20. எம். அசன் நைனாமரைக்கார் (கட்டுரை ஆசிரியரின் அப்பா)

 

 

21. பி. முஹம்மது காசிம்

 

 

22. எம். அசன்நெய்னாபிள்ளை (வரவு அதிகாரி Attendence Officer, நியாஸ் (Bank of Ceylon) தந்தை

 

23. எம்.எம். அபூபக்கர் (அப்ஸல் லுக்மான் அப்பா)

 

 

24. எம்.டி. செயினுல் ஆப்தீன்

.

.25. என். சேகு இப்ராஹிம் ஆலிம் சாஹிப் (சேம்ரா ஆலிம்சா)

 

நன்றி:

 1. அப்பாஸ் மரைக்கார் புதல்விகள் ஹைரூன் , ஹலீனா ஆசிரியைகள் (ஆவண உதவி)
 2. புத்தளம் வரலாறும் மரபுகளும் (A.M.N. ஷாஜஹான்)
 3. புகைப்படம் பெற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும்

 

 

 

 

 

 

 

7 thoughts on “முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் The Muslim Progressive Association

 1. கட்டிடம் கட்டியவர்களின் பரம்பரையில் வந்த சிலர் இன்று இப் பொது சொத்தை தமது சொத்தாக்கி கொள்ள எத்தனிக்கும் இச் சந்தர்பத்தில்,இக்கட்டிடம் அமைய பெற்றுள்ள குறிப்பிட்ட நிலத்தை பொது காரியத்திற்காக வக்பு செய்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டல்லவா இருக்க வேண்டும்.

  அதனை இவ்விடத்தில் மறைப்பது அல்லது எழுத மறந்தது சன்ஹீர் ஆசிரியர் விட்ட தவறா? அல்லது பின்னோக்கங்கள் ஏதும் உண்டா?

  1. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் எடுத்த தகவல்களைக்கொண்டு எழுதினேன். வக்பு செய்தவர்கள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீங்கள் ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன்.

 2. இத்தனை வரலாற்று சம்பவங்களையும் எழுதிய ஆசான் சண்ஹீர் அவர்கள்,இத் தைக்கா பள்ளி அமைந்துள்ள இடத்தை வக்பு செய்தவர்களின் பெயர்களை குறிப்பிட மறந்தது ஏன்?

  1. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் எடுத்த தகவல்களைக்கொண்டு எழுதினேன். வக்பு செய்தவர்கள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வேறு எந்த நீங்கள் ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன். வேறு எந்த பின் நோக்கங்களும் இல்லை என்பதனை மனத்தூய்மையுடன் தெரியப்படுத்துகின்றேன். நீங்கள் ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன்.

 3. Excellent work please keep it up. Present generation needs to know their roots and history and the link has to be continually maintained

Comments are closed.