வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வில் மீளுயிரூட்டம் பெற்ற புத்தளத்தின் பாரம்பரிய மரபு

(Hisham Hussain, Puttalam)

ங்களாதேஷில் 26.12.200 முதல் 31.12.2022 வரை நடைபெறும் நான்காம் தெற்காசிய ஸெபக்தக்ரோ போட்டியில் இலங்கை அணியில் விளையாடும் புத்தளத்தைச் சேர்ந்த ஆட்ட வீரர்கள் விமான நிலையம் (இரவு 11.00 மணியளவில்) செல்லும் முன்னர், அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு 25.12.2022 ஆம் திகதி இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரியபள்ளியில் நடைபெற்றது.

.
பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் ஆன்மீக சமூக மத்திய நிலையமாகும். பள்ளிவாசலை மத்தியமாக வைத்து உருவான வழக்காறுகள்; பாரம்பரிய மரபுகளில் பல, காலவோடத்தில் வழக்கிழந்து போய்விட்டது. அவ்வாறான மரபொன்று மேற்படி வழியனுப்பும் நிகழ்வுடன் மீளுயிர் பெற்றதை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
மரபுசார் நிகழ்வுகளும் அவை மறைந்து போன பின்னணிகளும்
(1) இற்றைக்கு நான்கு ஜந்து தசாப்தங்களுக்கு முன்னர் முஸ்லிம் பிரஜையொருவர் வெளிநாடு செல்வாராயின் அநேகமாக அது ஹஜ் பயணமாக இருக்கும். ஹஜ்ஜுக்கு செல்பவரை; செல்வோரை பள்ளிவாசலொன்றில் ஊர் மக்கள் ஒன்றுகூடி ஆறத்தழுவி, ஆனந்த கண்ணீர் சிந்தி வழியனுப்பும் மரபு, எனினும் 1980 களின் பின்னர், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர்; இருவர் என தொழில் தேடி வெளிநாடு செல்வதும் வருவதும் சாதாரண நிகழ்வாகிப் போனதன் பின்னர், பெரியபள்ளியில் ஒன்றுகூடி வழியனுப்பும் மரபு வழக்கொழிந்து போனது. எனினும் ஹஜ்ஜுப் பயணிகள் இம்மரபை இன்றுவரை பாதுகாப்பது நினைவுகூறத்தக்கது.
.
(2) கல்யாண மாப்பிள்ளைமார் (பெரும்பான்மையானவர்கள்) திருமணமான பின் மனைவியின் வீட்டுக்குக் குடிபெயர்வர். மணப்பெண் வீட்டில்தான் ‘நிகாஹ்’ (விவாக ஒப்பந்தம்) நடைபெறும். மணமகளின் வீட்டுக்கு செல்லும் முன்னர் பெரியபள்ளிக்கு வரும் மணமகனும் மாப்பிள்ளைத் தோழர்களும் (Best men) துஆ பிரார்த்தனை செய்துவிட்டு மணமகள் வீட்டுக்கு வழியனுப்பும் மரபு, கல்யாணப் பகிடிவதை (Wedding Rag) என்ற மேற்குல(கில் மிக நாகரிகமாகவும் இலங்கையில் மிகக் கேவலமாகவும் அநாகரிகமாகவும் நடத்தப்படும்) கலாசாரம் கையோங்கிய பிறகு இறைவனிடம் கையேந்துவது வழக்கொழிந்துபோனது. அதேநேரம், ‘நிகாஹ்’ பள்ளிவாசலில் நடைபெறும் ஸுன்னத் (நபிகளாரின் வழிமுறை) வளர்ச்சிபெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
.
(3) சடங்கு மாப்பிள்ளை (விருத்த சேதனம் செய்யப்படும் சிறுவன்) விருத்த சேதனத்துக்கு முன்னர், ஒரு கல்யாண மாப்பிள்ளைபோன்று ஆடை அணிகலன்களினால் அழகுபடுத்தப்பட்டு, புத்தளம் பெரியபள்ளிக்கு முன்னால் அமைந்துள்ள ஸ்ரீதர் ஸ்டூடியோவில் ஒளிப்படமொன்றையும் பிடித்துக்கொண்டு பெரியபள்ளியில் தூஆ பிரார்த்தனையும் செய்யும் மரபு, கைக்குழந்தையாக இருக்கும்போதே விருத்த சேதனம் செய்விக்கும் மருத்துவரீதியான முன்னெடுப்பைத் தொடர்ந்து வழக்கொழிந்துபோனது.
.
வழக்கொழிந்துபோகும் மரபொன்றை மீளுயிரூட்டிய பங்களாதேஷ் பயணம்
உண்மையாக, இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும்போது, புத்தளத்தின் (பொதுவாக முஸ்லிம் சமூகத்தில்) செயல்படும் பாரம்பரிய மரபொன்றை உயிரூட்டும் எண்ணமோ நினைவோ இருக்கவில்லை என்பதையும் இப்பாரம்பரிய மரபு உயிரூட்டம்பெற்ற விடயம் பிறகு தான் நினைவுக்கு வந்தது என்பதையும் குறித்தவனாக,
▪️ பங்களாதேஷ் பயணத்துக்கான விமான டிக்கட் + விசா உள்ளிட்ட பயண செலவுகளை இலங்கை மக்கள் (புத்தளம் மக்களும் வெளியூர்வாசிகளும்) தான் வழங்கினார்கள். எனவே மக்களுக்கு நன்றிகூறும் நிகழ்வாக அமைக்க வேண்டுமென்ற எண்ணமும்,
▪️ மூத்த பிரஜைகளின் வாழ்த்துக்கள் – பிரார்த்தனைகள் – ஆசிர்வாதங்கள் இந்த இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலும்,
▪️ இதன் பலனாக போட்டியாளர்களின் மனவுறுதி (Morale) மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் தான் இருந்தது.
.
இறுதியாக, ஒரு மனிதனை குழந்தைப் பருவத்தில் அவரை தோளில் சுமப்பது பெற்றாரின் / குடும்பத்தின் கடமை;பொறுப்பு. வீட்டு வாசலைத் தாண்டிய பின்னர் அவர்களுக்குக் கைகொடுப்பது ஊரின் / சமூகத்தின் கடமை; பொறுப்பு, ஊரின் எல்லையையும் தாண்டிய பின்னர் அவர்கள் தேசத்துக்குச் சொந்தமானவர்கள், அவர்களைப் பொறுப்பேற்பது அந்நாட்டு மக்களின் -(அரசாங்கத்தின்)- கடமை; பொறுப்பு.
.
எங்கள் பிள்ளைகளின் விடயத்தில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை பிரஜைகள் தமது கடமைப் பொறுப்பை மிக சிறப்பாக மிக சிறப்பாக நிறைவேற்றிவிட்டனர். பெருங் கிருபையாளன் அல்லாஹ் அனைவர் வாழ்விலும் அபிவிருத்தியை நல்குவானாக, ஆமீன்
.
குறிப்பு:
அன்றைய நாள் இஷா தொழுகைக்கு முன்னர் மழை அடர்த்தியாக பெய்ததினால் சகோ. அம்ஜுதீனின் மகன் சகீ அஹமத் மணல்குன்றில் இருந்து வருவதில் உள்ள சிரமங்களை சொன்னார். அன்றிரவு 11.00 மணிக்கு விமான நிலையம் செல்லவேண்டியிருப்பதினால் இறுதி நேரம் மழைக்கு திறக்கப்படுவதை தவிர்ந்துகொள்ளுமாறு கூறினேன். ஊர் மக்களின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் சகீ அஹமதுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
.
WAK