வித்யா லயம் – எனது பார்வையில்…

மிக ஆர்வத்தோடும், ஆவலோடும் அதனைப் படித்தேன்.
மிக மிகச் சிரமப்பட்டு , மிகவும் கவனமாகவே தனது மேற்பார்வைக்குள் அடங்கிய பாடசாலைகளைப் பட்டியலிட்டு, அப்பாடசாலைகளின் ஆரம்ப காலம் தொட்டு சம்பவத் திரட்டினைத் தன்னால் இயன்ற உச்ச முயற்சியினை மேற்கொண்டு மிகத் தெளிவாக பிரயோசனமான வகையில் எழுதி இருக்கிறார்.

1972 ம் ஆண்டு நான் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கற்பிக்கின்ற காலத்தில் மாணவன் சன்ஹிர் அவர்கள் என்னிடம் வந்து ,” சேர், நான் ஒரு சஞ்சிகை எழுதி இருக்கிறேன்.அதற்கான அட்டைப் படம் ஒன்று வரைந்து தாருங்கள் பெயர் “மர்ம மாளிகை”, என்ற வேண்டுகோளை விடுத்தார். நான் அதனை வரைந்து கொடுத்தேன்.
இதனை இங்கு குறிப்பிடக் காரணம் , சன்ஹிர் அவர்களது எழுத்தாற்றல் படிக்கின்ற காலத்திலேயே ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரியப்படுத்தவே.
இந்த நூலினை எழுதுவதற்கு நூலாசிரியர், அதற்கான “தேடல்”களை மிகவும் கவனமாகவே செய்துள்ளார். ஒவ்வொரு பாடசாலை அதிபர்களையும், ஆசிரியர்களையும், . ஓய்வு நிலை ஆசிரியர்கள், அந்தந்தப் பிரதேச பெரியவர்கள்,பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்…… என்றெல்லாம் பலதரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களிடமிருந்து தகவல்கள் பலவற்றைப் பெற்று அவைகளை இந்நூலில் சேர்த்துள்ளார்.
“வித்யா லயம் ” எனும் இந்நூலினை எழுதிட நூலாசிரியர் சன்ஹிர் அவர்கள் எடுத்திருக்கும் முயற்சியை நூலினைப் படிப்பவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது .ஆச்சரியமான ஒரு செயல் என்றே கூறவேண்டும்.
பாடசாலைகளின் பௌதிக வளத் தகவல்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள்,காரண கர்த்தாக்கள், ஆரம்ப கால ஆசிரியர்கள்,பாடசாலைப் பற்றிய முக்கிய பதிவுகள், படங்களாக வரலாற்றுச் சான்றுகள், பிரதமர்கள், அமைச்சர்கள்,வித்தியாதிபதிகள், பல்வகையான பிரபலங்கள் … அவர்களின் பாடசாலை வருகை , அவர்கள் தந்திட்ட ஞாபகப் பதிவுகள் என்றெல்லாம் திரட்டி நூலுக்குள் உட்புகுத்தி இருப்பது சாதாரண காரியமல்ல.
அத்தோடு நின்றிடாமல் நூலாசிரியர் மற்றுமொரு முக்கியமான பணியைச் செய்துள்ளார். பாடசாலை சம்பந்தமான அதி முக்கிய விடயங்களை அறிந்து கொள்வதற்கான ஒரு கேள்விக் கொத்தினை தயார் செய்து, பாடசாலைகளில் சமர்ப்பித்து அதன் மூலம் அவசியமான தகவல்களைச் சேர்த்துள்ளார்.
அந்தவகையில் எல்லாப் பாடசாலைகளும் நூலாசிரியருக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கியிருப்பதை நூலில் காண முடிகிறது. அப்படி வழங்கப்பட்டுள்ள தகவல்களில் சில பற்றாக் குறைகளும் அறியாமல் நடந்த ஒருசில பிழைகளும் இருக்கின்றன.
சில தகவல்கள் கொடுக்கப் படாமலேயே விடுபட்டிருக்கின்றன. அதனை இப்போது சுட்டிக் காட்டி திருத்த முடியாது. உதாரணமாக : பாடசாலைக் கொடி, பாடசாலை இலச்சினை …. போன்றவை வடிவமைத்த நபர்களின் பெயர்கள் விடுபட்டும் , மாற்றப்பட்டும் இருக்கின்றன.அந்த இலச்சினைகளை வடிவமைப்பதில் நேரடியாகப் பங்களிப்புச் செய்தவன் என்ற வகையில் இவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
இவ்வாறான நூல் ஒன்று வெளியாகி இருப்பது எனது அறிவுக்கு எட்டிய வகையில் இது முதலாவதாகும் என நினைக்கிறேன் .இது பற்றி நூலாசிரியரிடம் நான் சில விடயங்களை வினவியபோது ..
எதிர்காலத்தில் இவைகள் சேர்க்கப்பட்டு முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியாக்க முடியும். யாராவது முன் வர வேண்டும் எனவும் கூறினார்.
உண்மையில் இந்நூல் பற்றி நிறையவே எழுதலாம். சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் ஒரு முறை படித்துப் பாருங்கள் எதிர் காலத்தில் கல்வியியலாளர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் மிகப் பிரயோசனமான ஒரு நூல் என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்வாரகள்.
இவ்வாறான மிகப் பிரயோசனமான ஒரு நூலினை மிகவும் சிரமப்பட்டு , நமது சமூகத்திற்கு மட்டுமல்லாது , நாடு தழுவிய ரீதியில் கல்வியியலாளர்களுக்கும், பிரதான நூல் நிலையங்களுக்கும் இலவசமாக விநியோகித்துள்ள மிகப் பெரும் பணியை இங்கு சுட்டிக் காட்டுவது சாலப் பொருந்தும்.
மீண்டும் ஒரு முறை எனது நல் வாழ்த்துகளையும், மனமார்ந்த பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளரட்டும்,தொடரட்டும் சன்ஹிர் ஆசிரியரின் அரும் பணி . அதற்க்கான திறனையும் .அறிவையும் இறைவன் வழங்கி வைப்பானாக