வைரவிழா காணும் நாயக்கர்சேனை இந்து தமிழ் வித்தியாலயம்

(M.Nagarajah)

ரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாக்கள் குறிப்பாக வைரவிழா போன்ற நிகழ்வுகள் வெறுமனே கொண்டாட்ட வெளிப்பாட்டு உணர்வு மாத்திரமல்ல,மாறாக அந்நிறுவனத்தின் வரலாற்று சம்பவங்களை, நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதும், அதற்கு காரணகர்த்தாக்களாக பணியாற்றிய பெருமக்களை கெளரவப்படுத்துவதும், ஊரின் சமய,பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களை பாதுகாத்தலும்,அறியாமை சூழலை அகற்றுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான தூண்டலை அதிகரிப்பதற்கு இவ்விழாக்கள் வெளிச்சமிடும்.

அவ்வகையில் நாயக்கர்சேனை எனும் ஊர் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள ஒரேயொரு சைவ சமய சூழலைக்கொண்ட தமிழ்க் கிராமமாகும்.இக்கிராமத்தின் பழமை சார்ந்த வரலாற்று தடத்தில் அப்பாடசாலையின் உருவாக்கமே மிகப்பெரும் சாதனைக்குரிய வெளிப்பாடாகும்.

பள்ளிக்கூடங்கள் சிறியது,பெரியது என்ற அளவீட்டினால் மதிப்பிடப்படுவதில்லை மாறாக ஊரின் கல்வி வளர்ச்சியையும், ஊரின் மாற்றங்களுக்கும் அதன் பங்களிப்புமே போற்றுதற்குரியதாகும். நாயக்கர் சேனை இந்து தமிழ் வித்தியாலயம் அதன் தற்போதைய, இளந்தலைமுறை அதிபரான திரு வீ.இராமநாதன் மூலம் பெரும் பாய்ச்சலில் அதிரடியான பெளதிக மாற்றங்களையும்,மாணவர் கல்வி அடைவுமட்ட மாற்றங்களையும்
கண்டுள்ளது.

சின்னக்கிராமத்தின் இப்பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் வெகு நேர்த்தியாக இருந்தது.வரவேற்பு, உபசரிப்பு கலைநிகழ்ச்சிகளின் அலங்காரங்கள், ஒலி அமைப்பு எல்லாம் கச்சிதம் குறிப்பாக தமிழ்ப்பாடசாலை அதிபர்களின் பிரசன்னம் மகிழ்ச்சியானது.

இவ்வாறான அடையாள நிகழ்வுகள் வெறுமனே கல்விப்பணிமனை அதிகாரிகளுக்கான கெளரவமாக மட்டுமே இருந்து விடக்கூடாது.பள்ளிக்கூடத்தின் உருவாக்கத்தில் உரமாகவும்,உயிர்ப்பாகவும் திகழ்ந்த பெருமை கொள்ளத்தக்க பெரியோர்களையே நடுநாயகர்களாக பெருமைப்படுத்தவேண்டும்.

பெரும் பாராட்டுக்குரிய விடயம் வைர விழா மலர் சஞ்சிகை வெளியிடப்பட்டதாகும். நாயக்கர்சேனையின் 60 ஆண்டு விழா வைரமாக பிரகாசிக்கிறது.

WAK