சிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி – புத்தளம் ஸ்டோர்ம் கலக்ஸி அணி சம்பியனாகியது

புத்தளம் சிட்டி கலக்ஸி கிரிக்கட் கழகம் நடாத்திய சிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி தொடரில் புத்தளம் ஸ்டோர்ம் கலக்ஸி அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் சிட்டி கலக்ஸி கிரிக்கட் கழகம் நடாத்திய சிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி தொடரில் புத்தளம் ஸ்டோர்ம் கலக்ஸி அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை இத்தொடரின் இரண்டாம் இடத்தினை பயர் கலக்ஸி அணி பெற்றுக்கொண்டுள்ளது. இந்த போட்டி தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை (30) மாலை புத்தளம் இஜ்திமா மைதான வளாகத்தில் அமைந்துள்ள சிட்டி கலக்ஸி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தொடரில் புத்தளம் பயர் கலக்ஸி, ஹொட் கலக்ஸி, ஸ்டார் கலக்ஸி, கூல் கலக்ஸி, ரெட் கலக்ஸி, கலக்ஸி இலவன் மற்றும் ஸ்டோர்ம் கலக்ஸி ஆகிய ஏழு அணிகள் பங்கேற்றன.

முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று விலகல் அடிப்படையிலும் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் ஸ்டோர்ம் கலக்ஸி அணியும், பயர் கலக்ஸி அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

10 ஓவர்களை கொண்ட இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்டோர்ம் கலக்ஸி அணியினர் 10 ஓவர் நிறைவில் 08 விக்கட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பயர் கலக்ஸி அணியினர் 10 ஓவர் நிறைவில் 08 விக்கட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால் 52 மேலதிக ஓட்டங்களால் ஸ்டோர்ம் கலக்ஸி அணியினர் வெற்றி பெற்று சம்பியனாகியதோடு பயர் கலக்ஸி அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக பெபியன் பெக்ஸ்ட்டரும், அதிக ஓட்டங்களை (227) பெற்ற வீரராக ஹொட் கலக்ஸி அணியின் எம். முஸ்தாக்கும், அதிக விக்கட்டுக்களை (15) கைப்பற்றிய வீரராக ஸ்டோர்ம் கலக்ஸி அணியின் அரவிந்தனும் தெரிவாகினர்.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸும், கௌரவ அதிதிகளாக நகர சபை உறுப்பினர் பீ.எம். ரனீஸ் மற்றும் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

குறிப்பு : சம்பியன் ஸ்டோர்ம் கலக்ஸி அணியினர் நீல நிற அங்கி.
                இரண்டாம் இடம்  பயர் கலக்ஸி அணி மஞ்சள் நிற அங்கி.