“டைனி டொட்ஸ்” வருடாந்த விளையாட்டு பெருவிழாவில் ஐ.எப்.எம். முன்பள்ளி சாம்பியனானது

புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸின் பூரண ஏற்பாட்டில் நகர சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற “டைனி டொட்ஸ்” வருடாந்த விளையாட்டு பெருவிழாவில் 95 புள்ளிகளை பெற்று புத்தளம் நகரின் மிகப்பழைமையானதும், புத்தளத்தின் முதலாவது முன்பள்ளியுமான ஐ.எப்.எம். முன்பள்ளி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

ரூஸி சனூன் புத்தளம்

புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸின் பூரண ஏற்பாட்டில் நகர சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற “டைனி டொட்ஸ்” வருடாந்த விளையாட்டு பெருவிழாவில் 95 புள்ளிகளை பெற்று புத்தளம் நகரின் மிகப்பழைமையானதும், புத்தளத்தின் முதலாவது முன்பள்ளியுமான ஐ.எப்.எம். முன்பள்ளி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

இரண்டாம் இடத்தினை 70 புள்ளிகளை பெற்று அல் அஷ்ரக் முன்பள்ளியும், மூன்றாம் இடத்தினை 60 புள்ளிகளை பெற்று ஹமீத் மற்றும் அல் முஹ்பாத் ஆகிய முன்பள்ளிகளும் பெற்றுக்கொண்டுள்ளன.

இல்ல அலங்கரிப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே ரவ்லத்துல் அத்பால், அல் முஹ்பாத், பீ.பீ.எல்.சி ஆகிய முன்பள்ளிகள் பெற்றுக்கொண்டுள்ளன.

40 க்கும் மேற்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இந்த “டைனி டொட்ஸ்” வருடாந்த விளையாட்டு பெருவிழா புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை (30) முழு நாளும் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

புத்தளம் நகர பிதா .கே.ஏ.பாயிஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கலந்து கொண்டார். புத்தளம் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் அதிகாரிகள், கல்வியலாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

50 மீட்டர் ஓட்டம், அஞ்சல் ஓட்டம், போத்தலில் நீர் நிறைத்தல், பந்து மாற்றுதல், சாக்கு ஓட்டம், பூ கோர்த்தல், சீருடை அணிதல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், சங்கீத தொப்பி மற்றும் உடற்பயிற்சி ஆகிய போட்டிகள் நடந்தேறின.

போட்டிகளில் வெற்றியீட்டிய முன்பள்ளிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களுடன் பெறுமதியான வவுச்சர்களும் வழங்கி வைக்கப்பட்டன. போட்டிகளில் பங்கெடுத்த சுமார் 1500 மாணவர்களுக்கு பெறுமதியான பரிசு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், தான் புத்தளம் நகர பிதாவாக முதன் முதலாக தெரிவு செய்யப்பட்ட 1998 ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த டைனி டொட்ஸ் விளையாட்டு பெரு விழா மாணவர்கள், பெற்றார்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பினை பெற்றிருந்ததோடு வருடா வருடம் நகர பிதாவினால் இந்த நிகழ்வு தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.