வாப்பாவின் ஹிஸ்பு மஜ்லிஸ்…

வாப்பா அல்குர்ஆனை திலாவத் செய்வதிலும், அதனை சரியாக தஜ்வீத் ஒழுங்குகளை பேணி ஓத வேண்டும் என்பதிலும், அதனை விளங்கி கொள்வதிலும் தனது கடைசி நாட்கள் வரை ஆர்வம் காட்டுகின்றவர்களாக இருந்தார்கள்.

நாம் சிறுவர்களாக இருந்த போது குர்ஆனை சரியாக ஓத வேண்டும் என்பதிலும் மிகவும் கரிசனை காட்டியதோடு அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்கள்.

இன்றும் கூட குர்ஆன் ஓதுகின்ற போது வாப்பாவின் குரல் எதிரொழித்து கொண்டிருக்கும். ஸூறா யூஸுப், ஸூறா கஹ்ப், ஸூறா யாசீன், ஸூறா முல்க் ஆகியவற்றை ஓதும் போது எப்படியோ வாப்பா பக்கத்தில் இருக்கின்ற உணர்வுத்தான். சில போது திலாவத்தை நிறுத்திவிட்டு அவர்களுக்காக துஆ செய்யும் நிலை அவ்வப்போது ஏற்படும்.

எம்மோடு மட்டுமன்றி ஏனைய குடும்ப மற்றும் ஊர் பிள்ளைகளுடன் அப்படியே நடந்து கொள்வார்கள்.

பெரிய பள்ளி, நாஹூர் பள்ளி ஹிப்ல் மத்ரசாக்களில் படிக்கும் மாணவர்களை அழைத்து ஹிப்ல் செய்ததை செவிமெடுப்பதும் அவர்களுடன் தஜ்வீத் சட்ட ஒழுங்குகளை கலந்துரையாடுவதிலும் தனியான ஆர்வத்துடன் இருந்தார்கள். வடபுலத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் மற்றும் ஊர் இளைஞர்களை தனியே அழைத்து ஓத பழக்குவார்கள்.

தனது கடைசி காலப் பகுதியில் வீட்டுக்கு அண்மையில் இருந்த சிறுவர்களை அழைத்து குர்ஆன் ஓத கற்றுக்கொடுத்தார்கள்.  குர்ஆனை விளங்கி கொள்வதிலும் எவ்வித குறைச்சலும் இருக்கவில்லை.

வாப்பாவின் புத்தக சேகரிப்பில் அன்வாருல் குர்ஆன், தப்சீர் ஹமீதுல் மஜீத் காணப்பட்டது மற்றும் அன்றி ஆலிம்களுடன் குர்ஆன் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள்.

புத்தளம் ஜமாஅத் இஸ்லாமியின் வாராந்த குர்ஆன் விளக்க வகுப்புக்களில் தவறாது நேரம் பிந்தாது கலந்து கெள்வார்கள். நானும், தம்பியும் செய்த வகுப்புக்களில் அமைதியாக உட்கார்ந்து இருப்பார்கள்.

இன்று அருகிபோய்விட்ட ரமழானில் நடைபெறும் ஹிஸ்பு மஜ்லிஸ்களில் பங்கு கொள்வதும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதிலும் வாப்பாத்தான் முதல் ஆள்.

எங்களது 4,5 வயதுகளில் பழைய வீட்டில் (உம்மாவின் வீடு) நோன்பு காலத்தில் நடைபெறும் ஹிஸ்பு மஜ்லிஸ் பற்றி ஒரு மங்கலான ஞாபகமே இருக்கிறது.

கொப்பரா பள்ளி ஹிஸ்பு மஜ்லிஸ்ஸில் கலந்து கொண்டதாகவும் அதில் முன்னைய நாள் சபாநாயகர் H.S இஸ்மாயில், அபூ ஸாலிஹ் ஆலிம்சா, காஸிம் டாக்டர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எம்மிடம் கூறுவார்கள்.

நாஹூர் பள்ளியில் இடம் பெறும் மஜ்லிஸ்க்கு எம்மை அழைத்துச் செல்வார்கள்.

வாப்பா பள்ளியின் நீண்ட கால நிர்வாகியாக இருந்ததனால் அவர்களே அதற்கான ஏற்பாடுகளை உற்சாகத்துடன் மேற்கொள்வார்கள். மிக சந்தோஷமாகவும் ஆர்வத்துடன் நாங்களும் கலந்து கொள்வோம்.

பாய் விரித்தல், ரைஹால்கள் குர்ஆன்களை நாம் எடுத்து வைப்போம். பெரியவர்களுக்கு சிற்றுண்டி பகிர்வதும் எங்களது வேலைதான். மஜ்லிஸ்க்கு வரும் இடியப்பமும் சம்பலும் இன்னும் மணக்குறது. 10ம் நாள் பாற்சோறு இன்னும் மனதை விட்டு அகலவில்லை. பொடியன்மார்க்களின் சேட்டைகள் பெரியப்பாவின் அலட்டல் சத்தம் எல்லாம் மஜ்லிஸ்ஸின் அலங்காரங்கள் தான்.

பெரியப்பா, தம்பி நைனா மரைக்கார், ஷாஹுல் ஹமீத் மாமா, ரவ்ப் காக்கா மற்றும் ஏனையோர் ஹல்காவில் கலந்துக்கொண்டிருப்பார்கள் .
29ம் நாள் தமாம் வைபவம் குதுகலமாய் இருக்கும்.
சிற்றுண்டிகள் வந்து குவியும் எல்லோரும் வீட்டுக்கு எடுத்து செல்வார்கள். நாங்களும் அப்படித்தான்.
இனி எங்கே அந்த நாட்கள்…… ?

நாஹூர் பள்ளி மஜ்லிஸ் முடிந்ததன் பின்னால் வீட்டில் இன்னொரு மஜ்லிஸ் நடைபெறும்.
இது எங்களுக்கு இன்னுமொரு கொண்டாட்டம்.
அதில் கலந்து ஓதினோமா? என்பதல்லாம் நினைவில் இல்லை.
பள்ளி அப்பா (இந்தியா),
பள்ளி அப்பா மாமா(இந்தியா), தாஜுல் அமீர் மாமா (கள்-எளிய ), ஹபீத் முஹம்மத் மாமா (சம்மாந்துறை), அப்துல் வாஹித் மச்சான் மெளலவி ஆகியோர் வருவார்கள். இடைக்கிடையே சின்ன மாமாவும், உவைஸ் காக்காவும் வந்து செல்வார்கள்.
பெரிய மாமா கலந்து கொண்ட ஞாபகம் இலோசாக உண்டு.

இரவு 11.00,12.00 மணி வரை எமது வீட்டு முன் விறாந்தை ஜொலிக்கும். உம்மாவின் இஞ்சி பிளேன்டி சபையோர் உற்சாகத்தை தூண்டிவிடும்.
இடைகிடையே உமம்மாவிடம் இருந்து வெள்ள- அடை, சேமியா கஞ்சி எல்லாம் வரும்.

எமது குடும்பத்தில் அனுஷுடிக்கப்பட்ட இந்த மஜ்லிஸ் எப்படி இல்லாமல் போனது என்று தெரியாது.
GCE O/L க்கு பின்னால் புதுப்பள்ளி, பெரியப்பள்ளியில் நடைபெறும் ஹிஸ்பு மஜ்லிஸ்களில் கலந்துக் கொள்வோம்.
புதுப்பள்ளிக்கு சின்னப்பா ( ஷேக்கு மதார் ஹஸரத்), நிஸார் மெளலவி,அப்துல் லதீப் மெளலவி ஆகியோர்கள் வருவார்கள்.

பெரியப்பள்ளியில் நடைபெறும் மஜ்லிஸ்க்கு ஹாஜியார் அப்பா (அமானுல்லா  ஹாஜியார்), மெளலவி செல்லப்பா (எஹியா ஹஸரத்), ஹதிய்யத்துல்லா மெளலவி, தாஜுதீன் காக்கா, பிஸ்ருல் அமீன் (Lawyer ), ஹுஸைன் மாமா (அஸ்மா சாச்சியின் காக்கா – முன்னாள் நகர ச பை உறுப்பினர்) இன்னும் சிலர் கலந்துக் கொள்வார்கள்.

பாகிஸ்தான் போகும் வரை இது தொடர்ந்தது.

எமது குர்ஆனிய பாதையில் ஆரம்ப படிகள் தான் ஹிஸ்பு மஜ்லிஸ்கள்.
வாப்பாவையும் எனைய சகோதர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

(** இவ்வருடம் May மாதத்துடன் வாப்பா வபாத்தாகி 13 வருடங்கள் ஆகிறது.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مدخله واكرم نزله واسكنه فسيح جناتك يارب العالمين

الهم أنس وحشته في قبره بالقرآن العظيم الهم اجعل قبره روضة من رياض الجنة)

MHHM Muneer
02.05.2020
1441 ரமலான் 8ம் நாள்.