இரட்டை மாட்டு வண்டி

காலம் எம்மை விட்டு விட்டு காணாமலேயே போய்விட்டது. பின்னால் வந்தவையெல்லாம் முன்னால் போய் மறைந்து விட்டன. கால்நடைகள் என்பதால் நாம் கால் நடையாய் நடக்கிறோம் நன்றியுள்ள சீவனும் வழிநெடுகிலும் சோர்ந்து விடாமால் சேர்ந்து நடக்கிறது. தொடக்கம் நினைவிருக்கிறது. முடிவு கண்ணுக்கெட்டவில்லை. நடக்கத் தொடங்குகையில் மணற் பாதையாய் இருந்தது. நடை நடுவில் பாதையும் வேறானது. நடக்கவும் இழுக்கவும் கொஞ்சம் இலேசாகத்தான் இருக்கிறது. இலக்குத்தான் தெரியவில்லை. காலத்துக்குப் பொருந்தாது போனாலும் கால்நடைகள் தேவை இருக்கத்தான் செய்கிறது. பொருள் ஏற்றப் பார வண்டிகள் இருந்தாலும் பொருத்தமான தருணம் எமக்கும் இருக்கிறது. சகடக் கால்கள் சத்தமின்றி சுழல்வதால் சத்தம் யாரையும் சங்கடப்படுத்தவில்லை. நட்ட நடு வீதியில் நடக்கிறோம். வேண்டாமென யாரும் தடுக்கவுமில்லை. ஓய்வென்ற ஒரு நாளை எண்ணவும் மனம் மறுக்கிறது. உண்ணக் கொடுத்து உழப்பை எதிர்பார்ப்பார் உழைத்து உழைத்து ஓயும் தருணத்தில் இரைபோட்டவர்களுக்கு இரையாவோம் தலைவிதியிது. கால்நடைகளுக்கு காலமெல்லாம் எம்முடல்கள் ஒரு நாள் கசாப்புக் கடை கொழுக்கியில் தொங்கும் மாமிசமாய்.

Newton Isaac