இன்னும் அமாவாசை இருட்டினில் வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலை

எம்.எஸ்.எம். அப்பாஸ் (Newton Isaac)
 .
நான் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் மர்ஹும் கே.ஏ.பாயிஸின் பிரத்தியேக செயலாளராக இருந்தபோது புத்தளம் ஸெய்னப் ஆரம்பப் பாடசாலை திறப்பு விழாவுக்கு முன்னர் பாடசாலை முத்திரையில் இடம்பெற வைக்கப் பொருத்தமான முத்திரை வரியை அமைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் பஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய கையோடு புனித குர்ஆனை எடுத்து மேலெழுந்தவாரியாக பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இந்த வரிகள் எனது கவனத்தை ஈர்த்தன.
 .
அது அங்கீகரிக்கப்பட்டதும் ஸெய்னபின் முத்திரையில் Let’s learn in the name of Allah Who taught us by pen “என அந்த வரிகளை எழுதிச் மர்ஹும் பாயிஸின் கவனத்துக்குக்குக் கொண்டு வந்தேன். அது ஸெய்னபின் முத்திரையில் காப்பு வரியாக இடம் பெறச் செய்யப்பட்டது. அந்த மறவா நினைவுகளுடன் புத்தளம் அசன் குத்தூஸ் வித்தியாலயத்தின் பொன் விழா தொடர்பான இவ்வாக்கத்தை எழுத முயன்றபோது செப்படம்பர் 01 திகதி நடந்த உலக வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கும் நோக்கத்தோடு அதிகாலையிலேயே வலைப் பக்கங்களை கிளறத் தொடங்கினேன்.
 .
September – 1st – World Letter Writing Day encourages people worldwide to pick up a pen, grab a piece of paper and write a letter.
இப்படி ஒரு தகவல் பதிவாகியிருந்தது. புனித குர்-ஆனின 96:4 ம் வசனத்துக்கு இது எவ்வளவு நெருக்கமாக வருகிறது? என்றாலும் புத்தளம் அசன்குத்தூஸ் வித்தியாலயம் செயற்படத் தொடங்கியதும் அதே செப்டம்பர் ஒராந் திகதியில்தான். அது ஒரு தற்செயல் நிகழ்வாகத்தான் இருக்க முடியும். By accident; not by designed ; என நான் உறுதியாக நம்புகிறேன். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. அதுதான் இது.
 .
ஒரு நிறுவனம் அதன் பொன் விழாவைக் கொண்டாடும்போது நடக்கும் தடல்புடலான நிகழ்வுகளை நினைவுகளுக்குக் கொண்டுவாருங்களேன். எத்தனை பொன் விழாக்களையும், வைர விழாக்களையும் கண்டிருப்பீர்கள் ஆனாலும் இயலாமை காரணமாக செய்படம்பர் 01,2022 இல் புத்தளம் அஸன் குத்தூஸ் வித்தியாலயம் – புத்தளம் மீனவச் சமுகத்து கலங்கரை விளக்கம் ஆற்றிய 50 ஆண்டு கல்விச் சேவையை மீட்டிப் பார்த்து அழுது கொண்டு சிரிக்கிறது, சிரித்துக் கொண்டு அழுகிறது.
 .
பிரதி அமைச்சர் பாயிஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகள், ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி எல்லாம் வருடா வருடம் புதிய சாதனைகளைச் சாதித்து பேரோடும் புகழோடும் ஒரு தசாப்த்த காலத்துக்குள்ளேயே முன்னேற்றத்தைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் புத்தளத்தின் முதன் மகனான மர்ஹும் பாயிஸுக்கு அரிச்சுவடி கற்றுத் தந்த வெட்டாளை அசன் குத்தூஸ் வித்தியாலயம் மட்டும் 50 ஆண்டுகளைக் கண்டு விட்டு இன்னும் அமாவாசை இருட்டினில் கை காளால் துளாவித் துளாவி வழியைக் கண்டு பிடிக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு யார் பொறுப்பு? அரசியல்வாதிகளா? பற்றறுந்து போய் நாம் உண்டு நம் பாடு உண்டு என்ற மன நிலையில் இருக்கும் மீனவச் சமுகமா? சமுகத்தின்பால் இரக்கமற்ற முழு புத்தளம் நகருமா? அல்லது ஐம்பது ஆண்டுகளாக அதிபர் ஆசனத்தில் அமர்ந்து ஏதேதோ செய்து கொண்டிருந்த ஆசிரியர்களா?
 .
முதலாம் ஆண்டு முதல் மேற்கொள்ள வேண்டிய சமுகப் பொறுப்பை பாடசாலையின் அதிபர் இல்ஹாம் தோல் சுமக்க, அவருக்குப் பக்கபலமாக இருக்க அவரது உடன் பிறப்பான பாடசாலையின் முன்னாள் அதிபர் இனூஸ் கைகொடுக்க, பாடசாலையின் சமுகப் பற்றுள்ள ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்க 51 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய பரிதாபம் இந்தப் பாடசாலைக்கு. இப்படியொரு பரிதாபம் எந்தப் பாடசாலைக்கும் நடக்கவே கூடாது என்பதுதான் எமது பிரார்த்தனை.
 .
பாடசாலையின் வகுப்பறைகளை காட்சிப் படுத்த பலரிமும் படங்கள் உண்டா எனக் கேட்டேன் நடக்கவில்லை. நேரில் போய் படங்களை எடுத்துக் கொள்வோம் என்ற முடிவுடன் ஒரு முச்சக்கர வண்டிக் காரரிடம் வெட்டாளைக்கு ஹயர் போக வேண்டும் எனக் கேட்டேன். தாராளமாகப் போகலாம் ஆனால் கட்டணம் 800 ரூபா என்றார். திக்கென்றது எனக்கு. முக்கிய தேவை ஒன்றுக்காக பையில் வைத்திருந்த 1000 ரூபாவில் 800 ரூபா கொடுப்பதா? சரிதான் வேறு வழியில்லையே கொடு என்றது உள்மனம்.
 .
வழி நெடுகிலும் பேசிக்கொண்டு சென்றோம். அதற்குள் அதன் சாரதி எனக்கு உதவியாளராக மாறி விட்டிருந்தார். படங்களை எடுக்க உதவி செய்தார். அலுவலை முடித்துக் கொண்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்தேன். 1000 ரூபாவை நீட்டினேன். பெரிய மனது பண்ணி 100 ரூபாவைக் கழிப்புச் செய்துவிட்டார்.
 .
நினைவுக்கெட்டிய நாள் முதல் நகரில் நான் கண்டு வந்த காலத்தில் நகரில் உதயம் பெற்ற ‘பாத்திமா மகளிர் கல்லூரியாக இருக்கட்டும், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயமாக இருக்கட்டும் , மணல்குண்று முஸ்லிம் மகா வித்தியாலயமாக இருக்கட்டும், அல்லது எனது நேரடியான பங்களிப்புடன் உதயம் பெற்ற ‘செய்னப் பெண்கள் ஆரம்பப் பாடசாலையாக இருக்கட்டும், சாகிரா ஆரம்பப் பாடசாலையாக இருக்கட்டும், ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லுரியாக இருக்கட்டும் மிகக் குறுகிய காலத்தில் துரித வளர்ச்சியை அவை கண்டிருக்க இந்த வெட்டாளை அஸன்குத்தூஸ் மட்டும் ஐம்பதாவது அகவையிலும் சிறு மாற்றங்களைக் கூட காணாத பரிதாப நிலையை அனுபவிக்க விடப்பட்டதற்கு யார் காரணம்?
 .
தலை வாசலில் எழுப்பப்பட்டிருந்த வரவேற்புக் கோபுரம் மட்டும்தான் நவ யுகத்துடன் தொடர்பு படுகிறது. அதை நேற்றுத்தான் திறந்து வைத்தார்களாம். பாடசாலை தற்போதைய நிருவாகம் மாற்றம் ஒன்றைக் காணத் துடிப்பதைத்தான் இது காட்டுகிறது.
 .
இத்தனை காலமாக இரு மாடிக் கட்டிடம் ஒன்றைத்தானும் காணாது , விதவைக் கோலத்தில் இதை இது வரையில் விட்டு வைத்ததற்கு யார் பொறுப்பு? இத்தனை காலமாக அதிபர் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களையா, பாடசாலை உருவாக்கத்துக்கு கைகொடுத்த நில அளவையாளர் மர்ஹும் அஸன்குத்தூஸ் (சர்வர் அப்பாவின்) உறவுகளையா? இந்தப் பாடசாலை பெருமையோடு அரிச்சுவடி கற்றுக் கொடுத்த முன்னாள் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் மர்ஹும் பாயிஸ் அவர்களையா? அந்த பாடசாலையை தமது மண்ணில் பெறப் பெரும் பாக்கியம் செய்த வெட்டாளை மீனவச் சமுகத்தையா? அல்லது பசிகொண்ட ஓநாய்கள் நலிந்த ஆட்டுக்குட்டியைப் பித்து பீய்த்துப் பீய்தெடுத்தது போல பாடசாலை காணிகளை பிடித்துக் கொண்ட கயவர்களையா? அல்லது பாடசாலை என்று கூடப் பாராமல் தத்தமது வீடுகளின் கழிவறை நீரைக்கூட பாடசாலை வளவுக்குள் விடத்துணிந்த அக்கம்பக்கத்தாரையா?
 .
கயவர்களால் பிடிக்கப்பட்ட பாடசாலை காணியை எனது உதவியாளர் எனக்குச் சுற்றிக் காட்டினார்..
“இதைப் பாருங்களேன்” என்றார். அவர் காட்டிய திசையை நோக்கினேன் கால்நடைகளை கட்டும் குடில் போன்ற தகரம் – ஓலைகளால் ஆக்கப்பட்டிருந்த ஒரு குடிலைக் கண்டேன். அங்கே இருந்த சில பிள்ளைகளும், கதிரை மேசைகளும் கரும்பலகையும்தான் அதை ஒரு வகுப்பறை என்று பறைசாற்றி நின்றது. சில இளைஞர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். எனது வருகையை விளக்கியதும் அவர்களே முன்வந்து படங்களை எடுக்க உதவினார்கள்.
 .
‘இதுதான் எங்கள் வகுப்பறை’ என்று ஒரு இளைஞன் நான் கீழே குறிப்பிட்டுள்ள குடிலைக் காட்டி இதுதான் எங்கள் 11 ஆம் ஆண்டு வகுப்பு. இங்கு மழை காலத்தில் இருக்கவே முடியாது. எல்லாப் பக்கமும் தூவானம் அடிக்கும். புத்தகங்கள் நனையும்’ என்று அவர் சொல்லக் கேட்டு ஏற்கனவே நொந்து போயிருந்த மனம் பாறாங் கல்லாய்க் கனத்தது.
பாடசாலையில் ஓரிரு ஆண் ஆசிரியர்களைத் தவிர மற்றெல்லோருமே பெண்கள்தானாம். இது பெண்ணகளைக் குறை கூறுவதற்காக அல்ல ஆண்களால் தைரியத்தோடு செய்யப்பட வேண்டியவற்றை அவர்களால் துணிவுடன் செய்ய முடியாமல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
 .
இப்போதெல்லாம் அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென்றே வந்துள்ள முன்னாள் அதிபர் இனூஸ் தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஆண் மக்களை ஆசிரியர் தொழிலுக்கு அனுப்புமாறு வெட்டாளை மீனவச் சமுகத்துக்கு பரிதாபமான வேண்டுகோளை விடுத்து வருவதாகவும் ஒரு தகவல் சொல்கிறது.
நான் பேச வரும் விடயங்களை விலாவாரியாக விபரிக்க என்னால் முடியாத நிலை. ஆனால் நான் வேறு விதமாக நினைத்துப் பார்க்கிறேன்.
.
மூஸா நபிக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்ய அவரது சகோதரர் ஹாருணை இறைவனிடம் துணையாகக் கேட்டுப் பெற்றது போல அதிபர் இல்ஹாமுக்கு அவரது சகோதரர் இனுஸை உதவிக்காக இறைவன் கொடுத்திருப்பது போல இருக்கிறது. நிறைவு செய்தற்கு முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர்கள் பதவியிருந்து விடைபெறும் போது நா தழுதழுக்க சொன்ன வார்தைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். “Almighty God has given us not only burdens but also the strong shoulders to bear them”
.
“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு
காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் வாடுது வாழ்வின்றி
கண்ணுறங்கு
கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..!”

WAK