COVID 19 – கொரோனா வைரஸ் – நமது தேசத்திலும் நமது பிரதேசத்திலும் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும்
COVID 19 – கொரோனா வைரஸ் – நமது தேசத்திலும் நமது பிரதேசத்திலும் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும்
எஸ்.எம்.எம். றஸ்மி – ஆசிரியர் – பு / கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம்.
2019 நவம்பர் மாதக் காலப் பகுதியில் சீனாவின் வூஹான் நகர் மக்களுக்கு ஏற்பட்ட குணப்படுத்த முடியாத மர்மக்காய்ச்சலினால் கணிசமான எண்ணிக்கையானோர் இறந்து போனதைத் தொடர்ந்து, அம்மர்மக் காய்ச்சலுக்கு காரணமான புதியவகை வைரஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த “கொவிட் 19 ” (COVID 19) என உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) பெயரிட்டது. இவ்வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்கு மிக வேகமாக தொற்றக்கூடியது என்பதால் இதனை உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) “CORVID 19 PANDEMIC” எனவும் குறிப்பிட்டது.
சீனாவின் வூஹான் நகரில் தோற்றம் பெற்ற இவ்வைரஸ் உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க, ஆசியா நாடுகளின் மக்களில் மிக வேகமாக தொற்றிக்கொண்டதோடு, உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. நமது இலங்கைத் தேசத்தில் 2020 மார்ச் 11 ஆம் திகதி முதலாவது கொரோன வைரஸ் தோற்றாளர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து நமது தேசத்தின் சகல பாடசாலைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்தது. மருந்து வகைகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாப்பு பெற பின்வரும் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அரசு வலியுறுத்தியதோடு ஊடகங்கள் அவற்றை ஊக்கப்படுத்தியும் வந்தன.
- கைகளை அடிக்கடி சவர்க்கரமிட்டுக் கழுவுதல்
- சமூக இடைவெளியைப் பேணுதல் (இருவருக்கிடையே குறைந்தபட்சம் 1m இடைவெளி )
- தும்மல், இரும்பும் போது திசு பேப்பர், கைக்குட்டை அல்லது முழங்கையின் உட்பகுதியை பயன்படுத்தல்.
- வெளியே செல்லும் போது முகக்கவசம் (Mask) அணிதல்.
- உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளல்.
சமூகத் தொற்றையும், உயிரிழப்பையும் கட்டுப்படுத்தும் நோக்கில் 13-03-2020 தொடக்கம் அவ்வப்போது அரசினால் நமது தேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்தது. ஒருசில பிரதேசங்கள் முடக்கப்பட்டன.(Lockdown) புத்தளம் மாவட்டம் உட்பட கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் தோற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தபோது இவ் ஆறு மாவட்டங்களிலும் 20-03-2020 தொடக்கம் தொடர் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்தது. இத்தொடர் ஊரடங்கு உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையில் செலுத்திய தாக்கம் பல மாற்றங்களைத் தோற்றுவித்தது. இதற்கு நமது புத்தளம் பிரதேசத்து மக்களும் விதிவிலக்கல்ல.
1 . வணக்க வழிபாடுகள்
உலக வரலாற்றில் மக்கா, மதீனா , என்பவற்றின் புனித தளங்கள் முடக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தை கொரோனா உருவாக்கியது. உம்ரா கிரிகைகள் நிறுத்தப்பட்டன. இவ்வருடத்திற்கான ஹஜ் கிரிகை கேள்விக்குறியோடு தொக்கு நிற்கின்றது. இவ்வருடம் தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெசாக் பண்டிகை , உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் என்பவற்றை கொரோனா வீட்டோடு மட்டுப்படுத்தியது. நமது தேசத்திலும் , நமது பிரதேசத்திலும் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்வது, ஜமாஅத் தொழுகை , வாராந்த ஜும்மா என்பன நிறுத்தப்பட்டன. றமழான் காலமாக இருந்த போதும் தராவிஹ் தொழுகை, பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகள் இடம்பெறவில்லை. பள்ளிவாயல்களும், ஏனைய சமய வழிபாட்டுத் தளங்களும் முடக்கப்பட்டதால் அவை மாதக் கணக்கில் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வீடுகளில் தொழுது கொள்ளுமாறு முஸ்லிம் கலாசார திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
என்பன மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீறி வணக்க வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்றபோது பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட நபர்களும், அடிவாங்கிய நபர்களும் இல்லமாலில்லை. சமயத்தளங்களில் வணக்க வழிபாட்டுக்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்ட போது, ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட அதிர்வுகள் நாள் செல்ல குறையத் தொடங்கியது. இதன்பேறாக நமது தேசத்திலும் நமது பிரதேசத்திலும் வீடுகள் மஸ்ஜிதுகளாக பரிணமித்தன.
2 . கல்வி நடவடிக்கை
2020 ஆம் வருடத்திற்கான முதலாம் தவணைப் பரீட்சையினை நடத்துவதற்காக நமது தேசத்தின் பாடசாலைகள் ஆயத்தமானபோது, நமது பிரதேசப் பாடசாலைகளில் 18-03-2020 திகதி அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொரோன தொற்றுக்குள்ளான முதலாவது நபர் நமது தேசத்தில் 11-03-2020 திகதி இனங்காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக 13-03-2020 இல் இருந்து பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதோடு, தனியார் கல்விச் செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. எது எவ்வாறாயினும் தேசியமட்டப் பொதுப் பரீட்சைகள் குறித்த காலத்திலேயே நடாத்தப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துக்கொண்டிருந்தது. பாடசாலைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்காத நிலையில் ஆசிரியர் – மாணவர் தொடர்பற்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்கு எப்படி தயார்படுத்துவது என்ற சிந்தனை கீழ் மட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரையும் இருக்கவே செய்தது. இதன் விளைவாக இணையவழி மூலமான Online Tuition, Online Classes என்பன பிரத்தியேகமாக ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டதோடு, மாணவர்களும் அதன்வழி கற்க தயாராகினர். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தத்தமது வீடுகளில் இருந்தவாறே Smartphone, Laptop, Computer என்பவற்றை கற்பதற்கான மூலமாக (Source) பயன்படுத்தி இணையவழியூடாக கற்கத் தொடங்கியது கல்வித்தளத்தில் கொரோன ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏற்பட்டதொரு நேர் மாற்றமாகப் பார்க்க முடியும். மேலும் நமது தேசத்தின் அரச தொலைக்காட்சி பாடசாலை மாணவர்களை தேசியமட்டப் பொதுப்பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கென தனியான ஒரு அலைவரிசையை ஒழுங்கமைத்து தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு வழிகாட்டத் தொடங்கியது. இதன் விளைவாக பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வந்த கற்றல் – கற்பித்தல் முறைமையில் ஒரு புதிய பரிமாணத்தை கொரோன உருவாகத் தவறவில்லை. தேசம் முழுமையாக முடக்கப்பட்ட போதும் கல்வி நடவடிக்கைகள் யாவும் இணையத்தளமூலமாகவே இடம்பெற்றது. இது மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தையும் கற்றல் மீதுள்ள விருப்பத்தையும் மேலும் தூண்டியதாக நமது தேசத்து ஆசிரியர்களும், நமது பிரதேசத்து ஆசிரியர்களும் கருத்து தெரிவித்தனர். வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே அறிமுகமான இணையவழி கற்றல் செயற்பாட்டுக் கலாசாரத்துக்குள் எமது தேசமும் தடம் பதித்திட கொரோனா வழிவகுத்தது. நமது பிரதேச மாணவர்களும் இக்கற்றல் செயற்பாட்டு மாற்றத்துக்குள் தம்மை இணைத்துக்கொண்டு தமது வீடுகளை பள்ளிக்கூடங்களாகவும், கற்றல் நிலையங்களாகவும், Tuition Centre ஆகவும் மாற்றிக்கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு செயற்படத்தொடங்கினர்.
3 . பொருளாதாரம்
கொரோனா உலகப் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, வல்லரசுகளின் ஆணிவேரை அதிரச் செய்தது. வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகள் என்ற பாகுபாடின்றி கொரோனா ஏற்படுத்திய உலகளாவிய ஊரடங்கு உத்தரவும், லொக் டவுனும் நீடித்த போது, நமது தேசமும் அதன் பொருளாதாரமும் அதற்குள் சிக்குண்டு தவிர்த்தது.
புத்தளம் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் சென்று 30 என்ற எண்ணிக்கையைத் தாண்டிய போது, நமது மாவட்டம் “அதி அவதானத்துக்குரிய சிவப்பு வலயம் ” ஆக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக 30 நாட்களையும் கடந்து நடைமுறையில் இருந்து வந்தது. இதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளம் பெறும் ஊழியர்களைத் தவிர ஏனையவர்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. மக்கள் தமது ஜீவனோபாயத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் கஷ்டங்களை எதிர் நோக்கினார். நமது பிரதேசத்தின் பொருளாதார வளங்களான தெங்கு உற்பத்தி, முந்திரிச்செய்கை, நெற்செய்கை, கடற்றொழில், உப்பு உற்பத்தி, சிறுதானியச் செய்கை என்பன பராமரிப்பற்று, பயனற்றுக்கிடக்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்தினதும் பொருளாதார வளங்களில் ஏற்பட்ட பின்னடைவு நமது தேசத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேரையும் உசுப்பிவிட்டது.
தேசத்தின் பொது அமைப்புக்கள், பள்ளிவாயல்கள், விகாரைகள், கோயில்கள், தேவாலயங்கள், இளைஞர் அணியினர், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனவந்தர்கள் என பல்வேறு தரப்பினரும் அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கியது போல நமது பிரதேசத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். அரசு வறுமைக்கோட்டிட்கு கீழ் உள்ள மக்களுக்கு விஷேட கொடுப்பனவு தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் வழங்கியது. கொரோனா மனித மனங்களில் மனித நேயப் பண்புகளை விதைக்கத் தவறவில்லை.
கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெற அரசு தொடர் ஊரடங்கு உத்தரவு, லொக்டவுன் என்பவற்றை நடைமுறைப்படுத்திய போது, நமது தேசத்தின் மக்களும், நமது பிரதேசத்தின் மக்களும் அத்தியவசியப் பொருட்களை எவ்வாறு கொள்வனவு செய்வது என எண்ணி ஏங்கி நின்றனர். Whatsaap மூலமாக ஓடர் செய்து பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் புதிய முறை அறிமுகமானது. Co – op city, ச.தோ.ச என்பன மக்களுக்கான அத்தியவசியப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தன. கிராமப்புற சிறு வியாபாரிகள் மக்களுக்கு வேண்டிய பொருட்களை பின்வாயிலால் விநியோகித்து உதவினர். தொடர் ஊரடங்கு 30 நாட்களையும் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது அத்தியவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ ? என்ற பீதி தேசத்து மக்களுக்கும் நமது பிரதேசத்து மக்களுக்கும் ஏற்பட்டாலும் கூட அது அவ்வாறு நிகழவில்லை.

- சுற்றாடல்
புவிப்பந்திலிருந்து கொரோனாவைவிரட்டியடிப்பதற்கு மக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் எச்சரித்தபோது, தொழிற்சாலைகளும், உற்பத்தித்தளங்களும் ஸ்தம்பிதமடைந்தன. வாகனங்கள் வீட்டுக்குள் நிறுத்தப்பட்டுக் கிடந்தபோது புகை மண்டலத்தாலும் தூசு மண்டலத்தாலும் போஷிக்கப்பட்டு வந்த சூழல்தொகுதி படிப்படியாக தெளிவடையத் தொடங்கியது. சுற்றாடலின் மாசுவீதம் குறைவடைந்து சென்றதோடு, நீர்நிலைகள் தெளிவடையத் தொடங்கின. இந்த அற்புதத்தை நமது தேசத்தையும் பிரதேசத்தையும் தாண்டி உலகமே அனுபவித்து ஆனந்தமடைந்தது.
- புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்கச் சிந்தனையும்
“CORVID 19” கொரோனா வைரசின் முன்னிலையில் மருத்துவ விஞ்ஞானம் தோற்றுப்போய், கூனி, குறுகி நின்றாலும் அதனை விரட்டியடிப்பதற்கு தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. குறிப்பாக பிரிடிஷ், அமெரிக்கா, சீனா, இத்தாலி, இந்தியா, அவுஸ்ரேலியா என்பவற்றைக் குறிப்பிடலாம். 2019, டிசம்பர் மாதம் தொடக்கம் 2020, மே 11 ஆம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபத்தின் அங்கீகரத்தைப் பெற்ற, கொரோனாவிற்கு எதிரான எந்தவிதமான புதிய மருந்து வகைகளையும் அல்லது தடுப்பு மருந்துகளையும் மருத்துவ விஞ்ஞானத்தால் உலகுகிற்கு வழங்க முடியவில்லை. இருந்தபோதும் பிரித்தானியா, இத்தாலி என்பன கொரோனாவிற்கு எதிரான மருந்து வகையை உருவாக்கியுள்ளதாகவும் விலங்குகளில் பரீட்சிக்கப்பட்ட இப்புதிய மருந்து வகைகள் மனிதர்களில் பரீட்சித்த பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்ற செய்தி சமூக ஊடகங்கள் மூலம் கசிந்து வருகின்றன. இது இவ்வாறிருக்க, கொரோன நாளுக்கு நாள் வெவ்வேறு அவதாரங்கள் எடுப்பதாகவும் அது புதிய மருந்து அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு சவாலாக இருப்பதாகவும் மருத்துவத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு பக்கம் மருந்து, தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மறுபுறம், “CORVID 19” கொரோனா வைரஸ் எப்படிப்பட்டவர்களை தாக்குகின்றது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது குறித்து விரிவான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா, நமது தேசத்தின் இளம் தலைமுறையினரை புத்தாக்க முயற்சியில் ஈடுபடத்தூண்டியது. இதன் விளைவாக தொற்றினை தடுப்பதற்கும், தொற்றியவர்களை இனங்காண்பதற்கான கருவிகளையும், சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையிலான ரோபோ, நடமாடும் வைரஸ் ஒழிப்பு இயந்தியரங்கள் மற்றும் காலால் அழுத்தி கைகளைக் கழுவிக் கொள்வதற்கான உபகரணம், தொற்று நீக்கி விசுறும் உபகரணம், PCR பரிசோதனையை வீடுகளுக்குச் சென்றுள்வதற்கு வசதியாக அம்புலன்ஸ் வண்டி என பல புதிய கண்டுபிடிப்புகளை நமது தேசத்தில் அறிமுகம் செய்துள்ளது.
- உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா
- நமது தேசத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு மற்றும் லொக்டவுன் (Lock down) மே மாதத்திலும் தொடர்கின்றது. ஊரடங்கு உத்தரவு மற்றும் லொக்டவுன் என்பன முடிவுற்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு செப்டம்பர் அல்லது ஆண்டின் இறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நமது தேசத்தில் மட்டுமின்றி இந்த லொக்டவுன் பாதிப்பு அனைத்துலக நாடுகளினதும் பொருளாதாரத்தின் ஆணிவேரையும் பிடிங்கி எறிந்து இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா கொண்டு வந்த லொக்டவுன், சர்வதேசத்தினதும் நமது தேசத்தினதும் ஆட்சியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன் இதற்கு அப்பால் நமது தேசத்தின் அரசியலிலும் அது பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
- நமது தேசத்தின் அரசியல்களம்
கொரோனா வைரஸ்; சீனாவின் வூஹான் நகரிலிருந்து வெளிப்பட்டு பலரையும் பற்றிப் பிடித்து எண்ணற்றவர்களின் உயிர்களைக் காவு கொண்டு பல நாடுகளிலும் கால்பதித்து நமது தேசத்தை நோக்கி நகர்ந்த தருணத்திலேயே நமது தேசத்தின் பாரளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தலுக்கான திகதி ஏப்ரல் 25 என குறிக்கப்பட்டு, தேர்தலுக்கான ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நமது தேசம் பொதுத் தேர்தலை நோக்கி அடியெடுத்து வைத்த நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்றிருப்பது நமது தேசத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, ஏப்ரல் 25,2020 இல் நடாத்தப்படவிருந்த தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. பின்னர் புதிய தேர்தலுக்கான நாளாக ஜூன் 20 ஆம் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. இந்த நிலை தேர்தல் தொடர்பான சர்ச்சைகளையும் அரசியலமைப்புத் தொடர்பான சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எதிரணியினர் ஒன்றிணைந்து முன்வைக்கும் அளவுக்கு நிலமையில் நமது தேசத்தில் தேர்தல் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலின் பின்னணியில் எழுந்த முரண்பாடு அரசியல் நெருக்கடியாகவும் அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடியாகவும் மாறியது. அந்த நெருக்கடிகள் விஸ்வரூபமெடுத்து உச்ச நீதிமன்றத்திடம் நீதி கோரும் நிலமையை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசியல் அமைப்புச் சட்டம் மீறப்பட்டது அல்லது அதற்கு முரணாக செயற்பட்டது எனக் குற்றம் சுமத்தி அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என தெரிவித்து 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை என தெரிகின்றது. சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்டுவதன்மூலம் கொரோனாவின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் முன் வரவில்லை.
- புதிய சிந்தனையின் தோற்றம்
வங்கி நடவடிக்கைகளுடனும், தேசிய மட்டப்பரீட்சைப் பெறுபேறுகளுடனும் மாத்திரம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருந்த இணையத்தளத்தின் பயன்பாடு கொரோனா வைரசின் ஆளுகையைத் தொடர்ந்து Online Learning, Online Meeting, Online Conference, Online Purchasing என அதன் பயன்பாடு சர்வதேசத்திலும் நமது தேசத்திலும் நமது பிரதேசத்திலும் விரிவடைந்து சென்றன. அந்த வகையில் நமது தேசத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் 2020 வருடத்திற்கான புதிய மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதற்காக Online Application ஐ அறிமுகப்படுத்தியுள்ளன. நமது தேசமும் நமது பிரதேசமும் கொரோனா பீதியினால் முடக்கப்பட்ட போதும் நமது தேசத்தின் தினசரி செய்திப்பத்திரிகைகள் முடங்கிக் கிடக்கவில்லை. அவை e – paper ஆக மக்களைச் சென்றடைந்தன. நமது பிரதேச மக்களுக்கு தினசரி e – paper ஐ கொண்டு செல்லும் பணியை puttalamonline news, puttalam times, first and fast news01, News Papers & Magazine Thalir ஆகிய whatsapp குழுமம் கனகச்சிதமாக நிறைவு செய்து வந்தன.
- கொரோனாவின் கோரபிடியில் வல்லரசுகளும் நமது தேசமும்
கொரோனா இதுவரை உலகின் 212 நாடுகளை ஆக்கிரமித்து, உயிர்களை காவு கொண்டது. கொரோனா தொடர்பான ஆபத்து, விபரீதம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே மக்களை விளிப்பூட்டி, தெளிவூட்டி சிரத்தை காட்டிய நமது தேசம் போன்ற வளர்முக நாடுகளை விட ஆரம்பம் தொட்டு அசிரத்தையுடன் செயற்பட்டு வந்த, எப்போதும் எதிலும் First & Best என மார்தட்டி வந்த அமெரிக்கா கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையிலும் மரண வீதத்திலும் இன்றையநாள் (11-05-2020) First & Best ஆகவே உள்ளது. இக்கொடூர வைரசின் தாக்கத்தினால் நமது தேசத்தில் ஒன்பது நபர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் கொத்துக்கொத்தாக மாண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அவர்களுள் நமது தேசத்தின் கற்பிட்டி பிரதேசத்தின் சகோதரர் ஏ.எம். இல்லியாஸ்(வயது 53) அவர்களும் அடங்குவார். அன்னார் அமெரிக்காவில் அவர் குடும்பமும் நண்பர்களும் சூழ சன்மார்க்க சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதேவேளை பன்மைத்துவ சமூகம் வாழும் நமது தேசத்தில் கொரோனாவினால் இன்று (11-05-2020) வரை பலியான ஒன்பது நபர்களில் நால்வர் முஸ்லிம்கள். தம் குடும்பங்களும், உறவுகளும், நண்பர்களும், தேசத்தின் மொத்த முஸ்லிம் சமூகமும் ஏங்கி நிற்க, நமது தேசத்தில் அந்த நான்கு ஜனாஸாக்களும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாயவை தலைமையாகக் கொண்ட அரசினால் தகனம் செய்யப்பட்ட வரலாறு பதிவானது. கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு “அதி அவதானத்துக்குரிய சிவப்பு வலயம்” ஆக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு மாத காலத்தையும் தாண்டிய தொடர் ஊரடங்கு உத்தரவு மற்றும் லொக்டவுன் என்பவற்றால் கட்டுப்படுத்தப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நமது பிரதேசத்தில் கொரோனா தீண்டி இதுவரை எந்ததொரு உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நமது தேசத்தில் மார்ச் 20 ஆம் திகதி தேசிய மட்டத்தில் முடக்கநிலையும், ஊரடங்கு உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மே 11 ஆம் திகதி நமது தேசம் இந்த முடக்க நிலையிலிருந்தும், ஊரடங்கு உத்தரவிலிருந்தும் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் “கொரோனா தொற்றிலிருந்து நமது தேசம் இன்னும் விடுபடவில்லை என்பதை மனதில் கொண்டு அவதானமாகச் செயற்பட வேண்டும் என மருத்துவத்துறைசார்ந்தோர் எச்சரித்துள்ளனர். எது எவ்வாறாயினும், மே 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் வரலாற்றில் நமது தேசத்திற்கு ஒரு முக்கிய மைற்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மக்களின் ஒத்துழைப்பும், சட்டத்தை மதிக்கும் மனப்பாங்கும், ஒழுக்க விழுமியமும் நமது தேசத்தையும் நமது பிரதேசத்தையும் “COVID 19” கொரோனா வைரசின் கொடுமையிலிருந்து பாதுகாக்கும்.
இன்று (11-05-2020 பி.ப. வரை) உலகம் முழுவதும் “COVID 19” கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்து 97 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 84 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். நமது தேசம் உட்பட தென் ஆசியா வலயத்தில் இது வரைக்கும் 6 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதும் மரண வீதம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் 11-05-2020 திகதி பிற்பகல் வரை ஆசியாவில் 22,238 எண்ணிக்கையிலான மரணமே இடம்பெற்றுள்ளது. இன்று (11-05-2020 பி.ப. வரை) வரை “COVID 19” கொரோனா வைரசினால் நமது தேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863. உயிரிழந்தவர்கள் 09. நமது பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35. இதுவரை நமது பிரதேசத்தில் எந்தொரு இறப்பும் பதிவாகவில்லை.
எனவே, “COVID 19” கொரோனா நமது தேசத்திலும் நமது பிரதேசத்திலும் மக்களின் நாளாந்த வாழ்க்கை முறையிலிருந்து வணக்கவழிபாடுகள், கல்வி, பொருளாதாரம், அரசியல் என மனித வாழ்க்கையின் அனைத்துத்துறைகளிலும் தாக்கம் செலுத்தி, மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கு புதிய ஒழுங்கு முறைகள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகளும், நமது தேசத்து மக்களும், நமது பிரதேசத்து மக்களும் அவற்றைப் பின்பற்றி ஒழுக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.