ஆசிரியர் கருத்து

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
புத்தளத்துள் புத்துலகு படைக்க முன்னெடுக்கப்படும் இணையத்தள கன்னி முயற்சி. நாம் செய்ய விரும்புவது கிளர்ச்சியல்ல. காண விரும்புவது ஆரோக்கியமான…

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்….

புத்தளத்துள் புத்துலகு படைக்க முன்னெடுக்கப்படும் இணையத்தள கன்னி முயற்சி. நாம் செய்ய விரும்புவது கிளர்ச்சியல்ல. காண விரும்புவது ஆரோக்கியமான மாற்றமும், மறுமலர்சியுமாகும். மாற்றம் ஒரே இரவில் நிகழுவது அசாத்தியமானது. மாற்றத்தின் வளர்ச்சி வேகம் ஆழ வேர் பதித்து வானளாவ கிளை பரப்பி நிற்கும் விருட்சத்தின் சீரான வளர்ச்சி வேகத்திற்கு நிகர்த்ததாகும். நாம் ஒவ்வொருவரும் காண விரும்பும் சமூக மாற்றமும் இவ்வாறுதான் . வித்து வெடித்து ஆழ வேர் பதித்து வளர பண்படுத்தப்பட்ட நிலம் தேவை. சமூக மாற்றத்திற்கான பண்படுத்தப்பட்ட நிலம் இஸ்லாமியம்.

இஸ்லாமியம் என்னும் தளத்தில் நின்று சமூக மாற்றம் காண முனைவது அது இறை விசுவாசக் கோட்பாட்டின் பிரிக்கமுடியாத அழகாக இருப்பதனால்தான். மாறாக இனி எஞ்சி இருப்பது இஸ்லாமியம் மட்டும் தான். அதன் மூலமாக சமூக மாற்றத்திற்கான இறுதி பிரயத்தனத்தை மேற்கொள்வோம் என்று அதனிடம் சரணாகதி அடைதல் என்ற நிலப்பாட்டிலல்ல.

இஸ்லாமியத்தின் சொந்தக்காரன் அல்லாஹு தஆலா . அவன் ஒரு முன்மாதிரி குர்ஆனிய சமூகத்தை தோற்றுவித்துக் காட்டினான். சமூக மாற்றத்திற்கான ஒரு மாதிரியை (Model) அகிலத்தாரின் அருட்கொடையான முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் வல்ல அல்லா சமர்பித்தான். அந்த அழகிய மாதிரியை சீராவின் நிலைக்களனில் புரிந்து கொண்டு இலக்கை நோக்கி இன்ஷா அல்லாஹ் பயணிக்க இருக்கிறோம்.

சமூகப் பொருளாதார அரசியல் மேம்பாடு, மற்றும் கல்விக் கலாசாரப் பண்பாட்டு மறுமலர்ச்சி, சுகாதார மேம்பாட்டு முதலானவற்றை கன கச்சிதமாக அமைக்கப்பட்ட அத்திவாரத்தின் மீது கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. அதுவே பள்ளிவாயலை அடியொட்டி எழுந்த பொதுத் தலைமைத்துவம். இத்தகைய தலைமைத்துவம் 1924ம் ஆண்டு வரை இந்த உலகில் இருந்தது. அதன் பின்னர் உருவான செக்குலரிஸ (மதர்சர்ப்பின்மை) கொள்கையால் இந்தத் தலைமை கூறுபோடப்பட்டது. பள்ளிவாயல் மதச் சம்பிரதாயங்களின் குறியீடாக மட்டும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அல் ஹம்துலில்லாஹ் மீண்டும் இந்த உம்மத்தில் பள்ளிவாயலை அடியொட்டி பொதுத் தலைமைத்துவம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்ற புதிய சிந்தனை வலுப்பெற்றுள்ளது.

எமது புத்தளம் பிரதேசமும் இத்தகைய சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. எமது பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும் ஒரு வகையான தலைமைத்துவத்தை முகியுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் பன்னெடுங்காலமாக வழங்கி வந்துள்ளது. அண்மைக் காலமாக அந்தத் தலைமைத்துவம் இஸ்லாமியத்தால் மெருகூட்டப்பட்டுள்ளது. சமூக மாற்றத்திற்கான அத்திவாரமாக அமையும் முஹிய்யுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் பல்வேறு சிந்தனா முகாம்களையும் அனுசரித்து அரவணைத்துக் கொண்டு கருத்து மாற்றங்களின் ஊடாகவே சமூக மாற்றத்தை உருவாக்க திட உறுதி பூண்டுள்ளது. எனவே, இன்றைய தகவல் பரிவர்த்தனைத் துறையில் ஈட்பட்டுள்ள இராட்சத மாற்றத்தின் முக்கியமான ஒரு அழகாகிய இணையதளத்தை ஊடக சாதனமாக பயன்படுத்திக் கொள்வதில் அது அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கண்டுள்ளது.

இந்த இணைய தளம் சிந்தனைக்கு விருந்தளித்து உணர்வை சூடேற்றி உணர்ச்சியைக் கொப்பளிக்கின்ற வெறும் கருத்துக் களமல்ல. இது ஒரு அரட்டை அரங்கமுமல்ல. மனிதர்களின் ஆளுமைப் பண்புகளைக் காயப்படுத்துகின்ற கசாப்புக் கடையுமல்ல. இணையம் அல்லாஹ் வழங்கிய பெறுமானமிக்க அருட்கொடைகளின் ஒன்று. எனவே, சமூக மாற்றம் என்ற கருத்தியலை நோக்கி நகருவதற்கு இதனைப் பயன்படுத்துவோம். அறிஜர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள் ஆகிய அனைவரும் தங்களது உற்பத்திப் பெறுமானங்களை இந்த இணையதளத்தை நோக்கி ஏற்றுமதி செய்ய முடியும். இணையத்தைப் பயன்படுத்தி இமாலயச் சாதனை ஒன்றை படைப்பதே நாம் இறைவனுக்கு செலுத்தும் பொருத்தமான நன்றி கடனாக அமையும்.

இன்ஷா அல்லாஹ் வளரும்

16.02.2011

6 thoughts on “ஆசிரியர் கருத்து

  1. இஸ்லாமிய வழியில்
    மாஷா அல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்

  2. புத்தளம் பெரிய பள்ளியின் தலைமைத்துவத்தின் கீழ் நம் ஊரின் அனைத்து செயற்பாடுகளும் வழி நடத்தப் படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பள்ளி நிர்வாகம் தொலை நோக்கும், நடு நிலை கொள்கையும் கொண்டு இஸ்லாமிய வழியில் செல்லும் பொழுதில் அதனை பின் தொடர எந்த ஒரு புத்தளம் மகனும் பின் நிற்க மாட்டான். மக்களின் அவாவும்.இதுவகேவே இருக்கிறது .

  3. கன்னி முயற்சி என்றாலும் எடுத்த எடுப்பிலேயே களை கட்டுகின்றது. இந்த தளம் தடையின்றி தொடர்ந்து நடந்து வெற்றியடைய அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
    பெரிய பள்ளியின் தலைமைத்துவத்தின் கீழ் நம் ஊரின் அனைத்து செயற்பாடுகளும் வழி நடத்தப் படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பள்ளி நிர்வாகம் தொலை நோக்கும், நடு நிலை கொள்கையும் கொண்டு இஸ்லாமிய வழியில் செல்லும் பொழுதில் அதனை பின் தொடர எந்த ஒரு புத்தளம் மகனும் பின் நிற்க மாட்டான்.

  4. அல்ஹம்துலில்லாஹ். இது நல்லபடியாக வளர
    அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்.

Comments are closed.